(திருக்குறள் அறுசொல் உரை: 129. புணர்ச்சி விதும்பல் : தொடர்ச்சி)

 

 

திருக்குறள் அறுசொல் உரை

  3.காமத்துப் பால்

 15.கற்பு இயல்

 130.நெஞ்சொடு புலத்தல்

ஊடாமல் கூடவிரும்பும் தலைவியின்

நெஞ்சோடான உணர்வுப் போராட்டம்.

 

(01-10 தலைவி சொல்லியவை)

  1. அவர்நெஞ்(சு) அவர்க்(கு)ஆதல் கண்டும், எவன்நெஞ்சே!

      நீஎமக்(கு) ஆகா தது?

       அவர்நெஞ்சு அவரிடம்; என்நெஞ்சே!

நீஏன், என்னிடம் இல்லை?

 

  1. உறாஅ தவர்க்கண்ட கண்ணும், அவரைச்

      செறாஅ(ர்எ)னச், சேறிஎன் நெஞ்சு.

நெஞ்சே! பொருந்தார்என அறிந்தும்,

வெறுக்கார்எனப் பின்செல்கிறாய் நீ.

 

  1. ”கெட்டார்க்கு நட்டார்இல்” என்பதோ? நெஞ்சே!நீ

      பெட்(டு)ஆங்கு அவர்பின் செலல்.

       “இல்லார்க்கு உறவார் இல்லை”என்றா,

நெஞ்சே!நீ அவர்பின் செல்கிறாய்?

 

  1. இனிஅன்ன நின்னொடு, சூழ்வார்யார்? நெஞ்சே!

      துனிசெய்து, துவ்வாய்காண் மற்று.

நெஞ்சே! ஊடிப்,பின் கூடமாட்டாய்;

உனக்கு யார்தான் உதவுவார்?

 

  1. பெறாஅமை அஞ்சும்; பெறின்பிரி(வு) அஞ்சும்;

      அறாஅ இடும்பைத்(து),என் நெஞ்சு.

கூடாமைக்கும், கூடினால் பிரிவுக்கும்,

அஞ்சும் நெஞ்சால், துன்பம்தான்.

 

  1. தனியே இருந்து நினைத்தக்கால், என்னைத்

      தினிய இருந்த(து),என் நெஞ்சு.

தனிமையில், பிரிந்தாரை நினைந்தால்,

என்நெஞ்சே என்னைத் தின்றுவிடும்.

 

  1. நாணும் மறந்தேன், அவர்மறக் கல்லா,என்

      மாணா மடநெஞ்சில் பட்டு.

காதலரை மறக்கா மடமைகூர்

நெஞ்சால்தான், வெட்கத்தையும் விட்டேன்.

 

  1. ”எள்ளின், இளி(வு)ஆம்”என்(று) எண்ணி, அவர்திறம்

      உள்ளும், உயிர்க்காதல் நெஞ்சு.

”இகழ்தல் இழிவு”என்று, அவர்பண்பையே

உயிர்க்காதல் நெஞ்சும் எண்ணும்.

 

  1. துன்பத்திற்(கு) யாரே துணைஆவார்? தாம்உடைய

      நெஞ்சம், துணைஅல் வழி.

துன்பத்தில் தன்நெஞ்சே துணைஆகாப்

போது, வேறுயார்தான் துணைஆவார்?

 

  1. தஞ்சம் தமர்அல்லர் ஏதிலார்; தாம்உடைய

      நெஞ்சம், தமர்அல் வழி.

       தன்நெஞ்சே, உறவுஆகாத பொழுது,

மற்றவரும் உறவார் ஆகார்.

பேரா.வெ.அரங்கராசன்