திருக்குறள் அறுசொல் உரை – வெ. அரங்கராசன்: 015. பிறன் இல் விழையாமை
(அதிகாரம் 014. ஒழுக்கம் உடைமை தொடர்ச்சி)
01.அறத்துப் பால்
02.இல்லற இயல்
அதிகாரம் 015. பிறன் இல் விழையாமை
மற்றவன் மனைவியை, மனத்தால்கூட,
முற்றும் விரும்பாத ஆளுமை.
- பிறன்பொருள்ஆள் பெட்(டு)ஒழுகும் பேதைமை, ஞாலத்(து),
அறம்பொருள் கண்டார்கண் இல்.
பிறனது மனைவியை விரும்பும்
அறியாமை, அறத்தாரிடம் இல்லை.
- அறன்கடை நின்றாருள் எல்லாம், பிறன்கடை
நின்றாரின் பேதையார் இல்.
பிறனது இல்லாளை விரும்புவோன்,
அறத்தை மறந்த அறிவிலாதோன்
- விளிந்தாரின், வே(று)அல்லர் மன்ற, தெளிந்தார்,இல்
தீமை புரிந்(து)ஒழுகு வார்.
பேரறிவுத் தெளிவரும், பிறன்இல்லில்
தீமை செய்தால், செத்தவர்தான்.
- எனைத்துணையர் ஆயினும், என்ஆம்….? தினைத்துணையும்
தேரான், பிறன்இல் புகல்.
எத்துணை மேலோர் ஆயினும்,
பிறன்வீடு புகுவோர், கீழோரே.
- “எளி(து)”என, இல்இறப்பான் எய்தும்,எஞ் ஞான்றும்
விளியாது நிற்கும் பழி.
மனைவியிடம் எல்லை கடந்து
நடத்தலும், அழியாத பழியே.
- பகை,பாவம், அச்சம், பழி,என நான்கும்,
இகவாஆம், இல்இறப்பான் கண்.
மனைவியிடம் எல்லை கடத்தலும்,
பகை,பாவம், அச்சம், பழியே.
- அறன்இயலான் இல்வாழ்வான் என்பான், பிறன்இயலாள்
பெண்மை நயவாத வன்.
பிறனது மனைவியை விரும்பாதான்,
அறநெறி வாழ்க்கையான் ஆவான்.
- பிறன்மனை நோக்காத பேர்ஆண்மை, சான்றோர்க்(கு)
அணிஒன்றோ? ஆன்ற ஒழுக்கு.
பிறன்இல்லாளை விரும்பாத ஆளுமை,
பெரியார்க்[கு] அழகும், ஒழுக்கமும்.
- ‘நலக்(கு)உரியார் யார்?’எனின், நாமநீர் வைப்பின்,
பிறற்(கு)உரியாள் தோள்,தோயா தார்.
பிறனுக்கு உரியாளைத் தழுவார்,
உலக நலத்திற்கு உரியார்.
- அறன்வரையான், அல்ல செயினும், பிறன்வரையாள்
பெண்மை நயவாமை நன்று.
அறன்மறந்து, தீமை செய்தாலும்,
பிறனது மனைவியை விரும்பாதே.
– பேராசிரியர் வெ. அரங்கராசன்
Leave a Reply