(அதிகாரம் 023. ஈகை தொடர்ச்சி)

kuralarusolurai_mun attai

01. அறத்துப் பால்

02.இல்லற இயல்

அதிகாரம் 024. புகழ்

 

அழியும் உலகில், அறம்செய்து,

அழியாப் புகழைப் பெறுதல்.

 

  1. ஈதல், இசைபட வாழ்தல், அதுஅல்லது,

     ஊதியம் இல்லை உயிர்க்கு.

 

  கொடுத்தலும், கொடுத்தலால் வரும்

       புகழுமே, உயிர்வாழ்வின் பயன்கள்.

 

  1. உரைப்பார் உரைப்பவை எல்லாம், இரப்பார்க்(கு)ஒன்(று),

     ஈவார்மேல் நிற்கும் புகழ்.

 

  புகழ்வார் புகழ்ச்சொற்கள் எல்லாம்,

       கொடுப்பார்மேல், வந்து நிற்கும்.

 

  1. ஒன்றா உலகத்(து), உயர்ந்த புகழ்அல்லால்,

     பொன்றா(து) நிற்ப(து)ஒன்(று) இல்.

 

  நிலைஇல்லா இவ்உலகில், நிலைத்து

       நிற்பது, கொடைப்புகழ் மட்டுமே.

 

  1. நிலவரை நீள்புகழ் ஆற்றின், புலவரைப்

     போற்றாது புத்தேள் உலகு.

 

  வானவரும் ஈவாரையே புகழ்வர்;

       பாடும் புலவரைப் புகழார்.

 

  1. நத்தம்போல் கேடும், உள(து)ஆகும் சாக்காடும்,

     வித்தகர்க்(கு) அல்லால் அரிது.

 

  புகழ்,வளர்ச்சியில், பேர்அறிஞர் மகிழார்;

       ஏழ்மையில், சாவில், வருந்தார்.

 

  1. தோன்றின் புகழொடு தோன்றுக; அஃ(து)இல்லார்,

     தோன்றலின் தோன்றாமை நன்று.

 

  புகழ்வரும்படி வெளிப்படு; அல்லது,

       தகுதி பெற்றபின் வெளிப்படு.

 

  1. புகழ்பட வாழாதார் தம்நோவார்; தம்மை

     இகழ்வாரை, நோவ(து) எவன்….?

 

புகழ்தேடாதார், தம்மை நொந்துகொள்ளாமல்,

       இகழ்வாரை நோவது ஏன்….?

 

  1. வசைஎன்ப, வையத்தார்(கு) எல்லாம், இசைஎன்னும்,

     எச்சம் பெறாஅ விடின்.

 

   நிலைக்கும் புகழ்பெறா உலகோர்

       எல்லோர்க்கும் பழியே மிஞ்சும்.

 

  1. வசைஇலா வண்பயன் குன்றும், இசைஇலா

     யாக்கை, பொறுத்த நிலம்.

 

        புகழ்இல்லா உடலைச் சுமக்கும்,

       பழிஇல்லா நிலத்தில் வளங்குறையும்.

 

  1. வசைஒழிய வாழ்வாரே, வாழ்வார்; இசைஒழிய

     வாழ்வாரே, வாழா தவர்.

 

  பழிஇல்லாது வாழ்வாரே, வாழ்வார்;

       புகழ்இல்லாது வாழ்வாரே, வாழாதார்.

-பேராசிரியர் வெ. அரங்கராசன்

ve.arangarasan

(அதிகாரம் 025. அருள் உடைமை)