திருக்குறள் அறுசொல் உரை – வெ. அரங்கராசன்: 004. அறன் வலியுறுத்தல்
(அதிகாரம் 003. நீத்தார் பெருமை தொடர்ச்சி)
001 அறத்துப் பால்
01 பாயிர இயல்
அதிகாரம் 004. அறன் வலியுறுத்தல்
‘சிந்தனையும், சொல்லும், செயலும்
தூயதாய் இருக்க’ என வற்புறுத்தல்
- சிறப்(பு)ஈனும்; செல்வமும் ஈனும்; அறத்தின்ஊங்(கு)
ஆக்கம் எவனோ உயிர்க்கு…..?
சிறப்பும், செல்வமும் தருஅறத்தைவிட,
வளமும் நலமும் வே[று]இல்லை.
- அறத்தின்ஊங்(கு), ஆக்கமும் இல்லை; அதனை,
மறத்தலின் ஊங்(கு)இல்லை கேடு.
அறத்தைவிட, நல்லதும், அதனை
மறத்தலைவிடக், கெட்டதும், இல்லை.
- ஒல்லும் வகையான், அறவினை ஓவாதே,
செல்லும் வாய்எல்லாம் செயல்.
இயன்ற வகையில், அறச்செயல்களை,
இடைவிடாது, எங்கும் செய்க.
- மனத்துக்கண் மா(சு)இலன் ஆதல், அனைத்(து)அறன்;
ஆகுல நீர பிற.
மனத்துள் எவ்அழுக்கும் இல்லாமை
அறம்ஆம்; மற்றவை வெளிப்பகட்டு.
- அழுக்கா(று), அவா,வெகுளி, இன்னாச்சொல், நான்கும்,
இழுக்கா இயன்ற(து) அறம்.
பொறாமையும், பேராசையும், சீற்றமும்,
கடுஞ்சொல்லும் இல்லாமையே, அறம்.
- “அன்(று)அறிவாம்” என்னா(து), அறம்செய்க; மற்(று),அது,
பொன்றும்கால், பொன்றாத் துணை.
“பின்னர்ச் செய்வோம்” என்[று]எண்ணாது,
செய்அறமே, அழியாத் துணைஆம்.
- “அறத்(து)ஆ(று) இது”என வேண்டா, சிவிகை
பொறுத்தானோ(டு) ஊர்ந்தான் இடை.
பல்லக்குப் பயணி, சுமப்போர்
கண்டு, அறநெறியை மதிப்பிடாதே.
- வீழ்நாள் படாமைநன்(று) ஆற்றின், அஃ(து)ஒருவன்,
வாழ்நாள் வழிஅடைக்கும் கல்.
நாள்தோறும் செய்அறம், துன்பங்கள்
வருவழிகளை அடைக்கும் கல்.
- அறத்தான் வருவதே இன்பம்;மற்(று) எல்லாம்
புறத்த; புகழும் இல.
அறத்தினால் வருவதே, இன்பம்;
பிறஎலாம், துன்பம்; புகழுமில்லை.
- செயல்பால(து), ஓரும் அறனே; ஒருவற்(கு),
உயல்பால(து), ஓரும் பழி.
செய்யத் தக்கது அறமே;
செய்யாது விடத்தக்கது பழியே.
– பேராசிரியர் வெ. அரங்கராசன்
Leave a Reply