திருக்குறள் அறுசொல் உரை – வெ. அரங்கராசன்: 051. தெரிந்து தெளிதல்
(அதிகாரம் 050. இடன் அறிதல் தொடர்ச்சி)
02. பொருள் பால்
05. அரசு இயல்
அதிகாரம் 051. தெரிந்து தெளிதல்
எப்பணிக்கும், தக்காரை ஆராய்ந்து,
தெளிந்து, பணியில் அமர்த்தல்
- அறம்,பொருள், இன்பம், உயிர்அச்சம், நான்கின்,
திறம்தெரிந்து, தேறப் படும்.
அறமும், பொருளும், இன்பமும்,
உயிர்அச்சமும், ஆராய்ந்து தேர்க.
- குடிப்பிறந்து, குற்றத்தின் நீங்கி, வடுப்பரியும்,
நாண்உடையான் கட்டே, தெளிவு.
நற்குடிமை, குற்றம்இன்மை, பழிக்கு
வெட்குதல் பெற்றாரைத், தெளிக.
- அரியகற்(று), ஆ(சு)அற்றார் கண்ணும், தெரியும்கால்,
இன்மை அரிதே, வெளிறு.
அரியன கற்றுத் தெளிந்த
அறிவாரிடமும் அறியாமை உண்டு.
- குணம்நாடிக், குற்றமும் நாடி, அவற்றுள்,
மிகைநாடி, மிக்க கொளல்.
குணத்தை, குற்றத்தை ஆராய்க;
மிகுதியை மதிப்பிட்டுத் தெளிக.
- பெருமைக்கும், ஏனைச் சிறுமைக்கும், தம்தம்
கருமமே, கட்டளைக் கல்.
பெருமைக்கும், சிறுமைக்கும், அவர்அவர்
செயல்களே உரைகல் ஆம்.
- அற்றாரைத் தேறுதல் ஓம்புக, மற்(று)அவர்
பற்(று)இலர், நாணார் பழி.
ஒழுக்கம்இலாரைத் தெளியற்க; பற்றும்
கொள்ளார்; பழிக்கும் வெட்கார்.
- காதன்மை கந்து(ஆ), அறி(வு)அறியார்த் தேறுதல்,
பேதைமை எல்லாம், தரும்.
அன்பினால், அறிவிலியைத் தேர்தல்
அறியாமை; பணிகளும் கெடும்.
- தேரான், பிறரைத் தெளிந்தான், வழிமுறை,
தீரா இடும்பை தரும்.
ஆராயாது, ஒருவரைத் தெளிந்தால்,
தீராத் துன்பம்தான் சேரும்.
- தேறற்க, யாரையும் தேராது; தேர்ந்தபின்,
தேறுக, தேறும் பொருள்.
ஆராயாது யாரையும் தேராதே;
தேரின், தேர்ந்த பணிஒதுக்கு.
- தேரான் தெளிவும், தெளிந்தான்கண் ஐஉறவும்,
தீரா இடும்பை தரும்.
ஆராயாது தெளிதல், தெளிந்தபின்
ஐயம்கொள்ளல், தீராத் துன்பம்தான்
-பேராசிரியர் வெ. அரங்கராசன்
Leave a Reply