(அதிகாரம் 054. பொச்சாவாமை தொடர்ச்சி)

attai_kuralarusolurai97

02.பொருள் பால்

05.அரசு இயல்

அதிகாரம் 055. செங்கோன்மை

 

மக்களது நலன்களைக் கருதியே,

முறையோடு நடைபெறும் நல்ஆட்சி 

 

  1. ஓர்ந்து,கண் ணோடா(து), இறைபுரிந்து, யார்மாட்டும்,

      தேர்ந்து,செய்வ(து), அஃதே முறை.

 

ஆராய்ந்த, இரக்கம் காட்டாத

நடுநிலைத் தண்டனயே முறைஆம்.

 

  1. வான்நோக்கி, வாழும் உல(கு)எல்லாம்; மன்னவன்

      கோல்நோக்கி, வாழும் குடி.

 

உலகம் இன்மழையால் வாழும்;

மக்கள், நல்ஆட்சியால் வாழ்வார்.

 

  1. அந்தணர் நூற்கும், அறத்திற்கும், ஆதியாய்

      நின்றது, மன்னவன் கோல்,

 

அருளாளர் நூலுக்கும், அறத்திற்கும்,

அடிப்படை ஆவது நல்ஆட்சியே.

 

  1. குடிதழீஇக், கோல்ஓச்சும், மாநில மன்னன்

      அடிதழீஇ, நிற்கும் உலகு.

 

மக்களை அரவணைக்கும் ஆட்சியார்

வழிகளில் மக்களும் நடப்பார்.

 

  1. இயல்(பு)உளிக், கோல்ஓச்சும், மன்னவன் நாட்ட,

      பெயலும், விளையுளும் தொக்கு.

 

ஆட்சி இலக்கணப்படி, ஆள்வான்

நாட்டில், மழை,விளைவு  நிலைக்கும்.

 

  1. வேல்அன்று, வென்றி தருவது; மன்னவன்

      கோல்அதூஉம், கோடா(து) எனின்.

 

ஆட்சியர்க்கு வெற்றி, நல்ஆட்சி;

கோணும், வீழும் வல்ஆட்சி.

.

  1. இறைகாக்கும், வையகம் எல்லாம்; அவனை,

      முறைகாக்கும், முட்டாச் செயின்.

 

நாட்டைப் பாதுகாக்கும் நல்லதோர்

ஆட்சியானை, பேர்அறம் பாதுகாக்கும்.

 

  1. எண்பதத்தான் ஓரா, முறைசெய்யா மன்னவன்,

      தண்பதத்தான், தானே கெடும்.

 

எளிமையாகப் பேசான், ஆராயான்,

அறமுறை வழங்கான், கெடுவான்.

 

  1. குடிபுறம் காத்(து)ஓம்பிக், குற்றம் கடிதல்,

      வடுஅன்று; வேந்தன் தொழில்.

குடிகளைக் காத்தல், குற்றத்தாரைத்

தண்டித்தல், ஆட்சியார்தம் கடமை.

 

  1. கொலையில் கொடியாரை, வேந்(து)ஒறுத்தல், பைங்கூழ்

      களைகட்(டு) அதனொடு, நேர்.

 

கொடிய கொலையர்க்குக், கடிய

தண்டனை, களைஎடுப்புக்கு ஒப்பு.

 

 -பேராசிரியர் வெ. அரங்கராசன்

(அதிகாரம் 056. கொடுங்கோன்மை)