(அதிகாரம் 078. படைச் செருக்கு தொடர்ச்சி)

attai-kuralarusolurai

02. பொருள் பால்
11. நட்பு இயல்     
அதிகாரம் 079. நட்பு  

இணைஇலா நலம்தரும் துணையாக

 விளங்கும் வளர்நட்பின் இலக்கனம்.

 

  1. செயற்(கு)அரிய யாஉள நட்பின்? அதுபோல்,

   வினைக்(கு)அரிய யாஉள காப்பு?

 

       நட்புபோல் அரியதோர் நல்உறவும்,

       பாதுகாப்பும், வேறு எவை?      

 

  1. நிறைநீர, நீரவர் கேண்மை; பிறைமதிப்

   பின்நீர, பேதையார் நட்பு. 

 

       அறிஞரின் நட்பு, வளர்பிறை;

       அறிவிலியின் நட்பு தேய்பிறை.

 

  1. நவில்தொறும் நூல்நயம் போலும், பயில்தொறும்

   பண்(பு)உடை யாளர் தொடர்பு.

 

       படிக்கும்தோறும் நூலும், பழகும்தோறும்

       பண்பாளர் நட்பும், இன்பம்.   

 

  1. நகுதல் பொருட்(டு)அன்று, நட்டல்; மிகுதிக்கண்,

   மேற்சென்(று) இடித்தல் பொருட்டு.    

 

       சிரித்துப் பழகமட்டுமா நட்பு….?

       தவறும் போது கண்டிக்கவும்தான்.

 

  1. புணர்ச்சி பழகுதல் வேண்டா, உணர்ச்சிதான்,

     நட்(பு)ஆம் கிழமை தரும்.

 

       தொட்டுப் பழகுவதைவிட, ஒத்த

       உணர்வே, நட்புஉரிமை தரும்.

 

  1. முகநக நட்பது, நட்(பு)அன்று; நெஞ்சத்(து)

   அகநக நட்பது, நட்பு.           

 

       முகமலர்ச்சி நட்பைவிட, உள்மன

       மலர்ச்சி நட்பே, மெய்ந்நட்பு.

 

  1. அழிவின் அவைநீக்கி, ஆ(று)உய்த்(து), அழிவின்கண்

   அல்லல் உழப்ப(து)ஆம், நட்பு. 

 

       கேடுநீக்கி, நல்வழிப்படுத்தித், துன்பத்தில்,

       தானும் துன்புறுவான், நண்பன்.

 

  1. உடுக்கை இழந்தவன் கைபோல, ஆங்கே

   இடுக்கண் களைவ(து)ஆம் நட்பு.

                               

       உடைஇழந்தான் கைபோல், உயர்நட்பும்,

       நண்பன் துயரை உடன்நீக்கும்.

 

  1. நட்பிற்கு வீற்(று)இருக்கை யா(து)?எனின், கொட்(பு)இன்றி,

   ஒல்லும்வாய் ஊன்றும் நிலை.

 

       நட்பிற்கு உயர்இருக்கை, மாறுபடாது

       முடிந்தவரை தாங்கும் நிலை.

 

  1. “இனையர் இவர்எமக்(கு), இன்னம்யாம்” என்று

 புனையினும், புல்என்னும் நட்பு.

 

“இவர்இன்னார், நான்இன்னான்” என்ற

பிரிப்புச்சொல் நட்புக்குச் சிறுமை.

பேராசிரியர் வெ. அரங்கராசன்

(அதிகாரம் 080. நட்பு ஆராய்தல்)