(திருக்குறள், சங்க இலக்கிய விழுமியங்கள் – 1/2 : வெ.அரங்கராசன் தொடர்ச்சி)

திருக்குறள், சங்க இலக்கிய விழுமியங்கள் – 2/2

   

6.0.விருந்தோம்பல் என்னும் அருந்திறல் விழுமியம்

        அருந்தமிழர்தம் தனிச்சிறப்புக்களுள் ஒன்று விருந்தோம்பல் என்னும் பெருந் திறல் விழுமியம் ஆகும். முற்காலத்தில் முன்பின் தெரியாதவர்களே விருந்தினர்கள் எனப்பட்டனர்.

இதனைத் தொல்காப்பியர்,

        விருந்தே தானே புதுவது கிளந்த

       யாப்பின் மேற்றே.          [தொல்.செய்.540] 

என்னும் நூற்பாவழி நுவல்கிறார்.

       இரவானாலும் பகலானாலும் புதியவர்கள்   இல்லத்திற்குப் பசியோடு வரும் போது விருந்து புறந்தருதலைப் பெருங்கடமையாகக் கொண்டனர். அதன்வழி உறவு களை உருவாக்கினர்; நட்புக்களை நாடினர். அதனால், பெருமகிழ்வு பெற்றனர்.

       இதனை,

        அல்லி லாயினும் விருந்துவரின் உவக்கும்

       முல்லை சான்ற கற்பின் மெல்லியல்.

 என நற்றிணைப் பாடல்  [42]  தெற்றெனத் தெளிவுறுத்தும்.

 6.1.வள்ளுவத்தில் விருந்தோம்பல்

       திருவள்ளுவம் விருந்தோம்பல் பற்றி விருந்தோம்பல் என்னும் 9–ஆவது அதிகாரத்தில் மட்டுமல்லாமல், அதுபற்றிய கருத்தாக்கங்களைப் பல்வேறு அதிகார ங்களிலும் நுட்பமாகவும் திட்பமாகவும் பேசுகிறது. சான்றாக ஒரு குறள்மணியை இங்கு ஒலிக்கச் செய்வோம்.

      செல்விருந்து ஓம்பி வருவிருந்து பார்த்[து]இருப்பான்

     நல்விருந்து வானத்த வர்க்கு.                                        [குறள்.86]

 

6.2.பொருள் உரை விரிவாக்கம்

        இரவு நேரமானாலும், பகல் நேரமானாலும் வந்த விருந்தினர்க்கு நல்ல விருந்து படைத்து மகிழ்வித்து அனுப்பிவிட்டு, இனி யாராவது விருந்தினர் வருகின்றனரா என எதிர்பார்த்துக் காத்திருக்கின்றவர், வானவர்கள் விரும்பி வரவேற்றுப் போற்றும் நல்ல விருந்தினர் ஆவார்.      

 7.0.விழுமியங்களின் தொகுப்பே வழுவில் வள்ளுவம்

   உள்ளத்தாலும் வள்ளுவம் உள்ளாத உயிர்க்கொலை  புலால் உண்ணல், வரைவின் மகளிர் நாட்டம், கள் உண்ணல், நாடு பிடிக்கும் பேராசையால் நடக்கும் போர்கள், போர்களால் ஏற்படும் உயிர், பொருள் இழப்புகள்போன்ற விழுமியங்கள் சாராத சில செயற்பாடுகள் சங்கக் காலத்தில் இருந்தன என்பது தெளிவு.

   சான்றாகப் புலால் உண்ணல்பற்றிப் பத்துப்பாட்டில் ஒன்றான பெருங்குன்றூர் கெளசிகனாரது  மலைபடுகடாத்தின் ஒரு பகுதியைக் கீழே காண்போம்.

    தினை அரிசியைச் சோறு ஆக்கி, நெய்யில் புலாலைப் பொரித்துத் தாமும் உண்டு, தம்மை நாடி வருகின்றவர்களுக்கும் இனிய மொழிந்து உண்ணக் கொடுத்தனர்.

இதனை,

 

மான விறல்வேள் வயிரியர் எனினே

நும்இல் போல நில்லாது புக்குக்

கிழவிர் போலக் கேளாது கெழீஇச்

சேண்புலம்[பு] அகல இனிய கூறிப்

பரூஉக்குறை பொழிந்த

நெய்க்கண் வேவையோடு

குரூஉக்கண் இறடிப் பொம்மல் பெறுகுவீர்

 

என மொழிகிறது மலைபடுகடாம்.      

 

7.1.திருக்குறளில் கொல்லாமை,

   புலால் மறுத்தல் என்னும் விழுமியங்கள்        

        திருக்குறள் புலால் உண்ணலையும் உயிர்க்கொலையையும், ஏற்றுக்கொள்ளவே இல்லை. புலால் மறுத்தலையும் கொல்லாமையையும் திருக்குறள், தன் உயிர்க் கோட்பாடாகவே கொண்டுள்ளது. அவற்றை 26-ஆவது அதிகாரம் புலால் மறுத்தலி லும், 33-ஆவது அதிகாரம் கொல்லாமையிலும் மிகக் கடுமையாக  எதிர்ப்பதைக் கண் ணுறலாம்.

சான்றாகப்  புலால் மறுத்தல் குறள் ஒன்று:

      உண்ணாமை வேண்டும் புலாஅல், பிறி[து]ஒன்றின்

      புண்அது உணர்வார்ப் பெறின்.                                     [குறள்.257]

 

7.2.பொருள் உரை விரிவாக்கம்               

   “இறைச்சி பிறிதோர் உயிரினது புண்ணே ஆகும்” என்னும் அருவருப்புத் தன்மையை உள்ளத்தால் உணர்கின்றவர்களை உலகம் பெற்றுவிட்டால், அந்த அருவருப்பான இறைச்சியை எவருமே உண்ண மாட்டார்கள்.

 

7.3.வள்ளுவத்தில் கொல்லாமை

        இனிக் கொல்லாமை என்னும் அதிகாரத்திலிருந்து  ஒரு சான்றினைக் காண்போம்

        தன்உயிர் நீப்பினும் செய்யற்க தான்பிறி[து]

      இன்உயிர் நீக்கும் வினை.                                   குறள்.327]

 

7.4.பொருள் உரை விரிவாக்கம்

        “மற்றோர் உயிரால்தான் தம் உயிரைக் காத்துக்கொள்ளல் வேண்டும்” என்னும் ஓர் இக்கட்டான — இடர்ப்பாடான சூழ்நிலை உண்டானாலும், “தம் உயிரைக் காத்துக் கொள்ளல் வேண்டும்” என்பதற்காக, அந்த இனிய உயிரைப் போக்கும் கொடிய கொலைச் செயலைச் செய்யாதிருத்தல் வேண்டும்.

 8.0.நிறைவுரை

    திருக்குறளை அளவுகோலாகக் கொண்டால், சில விழுமியங்களும் விழுமியம் சாராத சில பழுதுமிகு செயற்பாடுகளும் சங்க இலக்கியங்களில் இருக்கின்றன.

       பொய்தீர் ஒழுக்க நெறிகளை எல்லாம் ஆராய்ந்து தொகுத்த  வாழ்வியலாசான் வள்ளுவனார் விழுமியம் சாராத அச் செயற்பாடுகளை எல்லாம் அறவே நீக்கிவிட்டு விழுமியங்களின் முழுத்தொகுப்பாகவே திருக்குறளை உருவாக்கி அருளியுள்ளார்.

       மாசுகளையும் ஆசுகளையும் அறவே அகற்றிவிட்டுத் தூய அறவியல் நூலாக வள்ளுவத்தை ஆக்கி வழங்கியுள்ளார் அவர்.

9.0.பார்வை நூல்கள்

9.1.. திருக்குறள் தமிழ் மரபுரை      — மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர்

9.2.திருக்குறள் தெளிவுரை           — மூதறிஞர் வ.சுப.மாணிக்கர்

9.3.திருக்குறள் நுண்பொருள் உரை       — தமிழண்ணல்

9.4.திருக்குறள் வாழ்வியல் உரை — புலவர் இரா.இளங்குமரனார்                                                                                           9.5.திருக்குறள் விளக்க உரை        — முனைவர் பா.வளன் அரசு

9.6.திருக்குறள் மக்கள் உரை         — முனைவர் கு.மோகனராசு

9.7.திருக்குறள் அறுசொல் உரை     — பேராசிரியர் வெ.அரங்கராசன்

 10.0.பயன்பட்ட நூல்கள்

10.1.தொல்காப்பியம்

10.2.புறநானூறு

10.3.நற்றிணை

10.4.பெரும்பாணாற்றுப்படை

10.5.மலைபடுகடாம்

10.6.திருக்குறள்

       பேராசிரியர் வெ.அரங்கராசன்

[முன்னாள் தமிழ்த் துறைத் தலைவர்

       கோ.வெங்கடசுவாமி(நாயுடு) கல்லூரி

       கோவிற்பட்டி – 628502]

       5 / 826, முதல் தெரு, ஐயப்பாநகர்,

       மடிப்பாக்கம், சென்னை600091

      கைப்பேசி: 9840947998

       மின்னஞ்சல்: arangarasan48@gmail.com