திருக்குறள் முழக்கமும் நகைச்சுவை விளக்கமும் :

 நூலாசிரியர் உரை

     ஞானப் பெருநூலாம் திருக்குறள் மேடை முழக்கமாக இல்லாமல், வாழ்வியல் வழக்கமாதல் வேண்டும். அந்த ஞானப் பெருநூல் ஞாலம் முழுதும் பரவும் வகை செய்தல் வேண்டும். திருக்குறளின் திருக்குரல்  ஞாலம் முழுதும் ஓங்கி ஒலித்தல் வேண்டும். ஏனெனில், அது ஞாலப் பொதுமை நூல்; வாழ்வியல் பயன்பாட்டு நூல்.

  இந்த அருநூல் குழந்தைகள், சிறுவர்கள், படித்தவர், படியாதவர், பாமரர் என்னும் எவ்வித வேறுபாடுகளோ மாறுபாடுகளோ இல்லாமல், ஞாலம் முழுதும் பரவுதல் வேண்டும், அதற்கு என்னென்ன வழிமுறைகளைக் கையாளுதல் வேண்டும் என்பதை ஆய்வாளர்கள் சிந்தித்தல் வேண்டும்.

     திருக்குறளையும் அதன் அரிய கருத்தியல்களையும் விளக்கிப் பேசினால், எழுதினால்  மட்டும,  அப் பெரும்பணி முடிந்துவிடாது. அப் பணியைப் பணியாகக் கருதாமல், பெருந்தொண்டாக – தொழுகையாகக் கருதிச் செயற்படுதல் வேண்டும்.   

     ஞாலத்தில் உள்ள அனைத்து உள்ள – உடல் நோய்களுக்கும் மாமருந்தாக அமையும் தகுதிப்பாடு மிக்க அந்தத் திருநூல் வாழ்வியல் பயன்பாட்டு நூல் – மன்பதைப் பயன்பாட்டு நூல்  என்பதை மெய்ப்பித்தல் வேண்டும். அதற்கு ஏற்பப் பேச்சையும் எழுத்தையும் அமைத்து, மூச்சு உள்ளவரை முழுதுறப் பரப்பும் தொண்டைச் செய்தல் வேண்டும்.

     அந்த  வகையில் யான் சில வழிமுறைகளைச்  சிந்தித்தேன். அவ் வழிமுறைகளிலேயே ‘திருக்குறள் முழக்கமும் நகைச்சுவை விளக்கமும்’ என்னும்  இந்த நூலை அமைத்துள்ளேன்.

     அவ் வழிமுறைகளாவன:

  1. புரிதலுக்கு எளிமையாக இருக்கும் வண்ணம் திருக்குறளைச் சொற்பிரிப்புடன் வழங்குதல்
  2. பொருள்கோளை விரிவாக வழங்குதல்
  3. பொருளை உரையை விரிவாக, விளக்கமாக வழங்குதல்
  4. அது சமுதாயப் பயன்பாட்டு நூல் என்பதை மெய்ப்பிக்கும் வகையில் திருக்குறளை வாழ்வியலாகக் கொண்டு வாழ்ந்த   பெரியோர்கள்,  சான்றோர்கள், ஆன்றோர்கள், அறிஞர்கள்,அறிவியல் வல்லுநர்கள், அரசியலார்கள்,  ஆசிரியர்கள், பேராசிரியர்கள்போன்ற  அரியவர்களது வாழ்க்கையில் நடந்த உண்மை நிகழ்வுகள் பலவற்றை அவர்களது படங்களுடன் வழங்குதல்
  5. உண்மை நிகழ்வுகளை அடிப்படையாகக் கொண்ட பிறர் எழுதிய சிறுகதைகளை வழங்குதல்
  6. பொருத்தமான கற்பனைக் கதைகளை வழங்குதல்
  7. எல்லாவற்றிற்கும் மேலாகத் திருக்குறள் கருத்தாங்கங்களை எளிதாகவும் ஆழமாகவும் மனத்தில் சென்று பதியும் வகையில் நல்ல நகைச்சுவைகள்வழி வழங்குதல்
  8. வரலாற்றுப் பெரியோர்கள் வாழ்வில் நடந்த நிழ்வுகளைப் பொருத்தமான இடங்களில் வழங்கல் .
  9. சங்க காலப் புலவர்களது பாடல்கள் முதல் இன்றைய கவிஞர்களது கவிதைகள் வரை பல்வேறு பாடல்களும் கவிதைகளும் வழங்குதல்
  10. திருக்குறள் கருத்துகளில் உள்ள உணர்வுகளுக்கும் உணர்ச்சிகளுக்கும் ஏற்பப் பொருத்தமான இணைய வலைத் தளங்களிலிருந்து எடுக்கப்பட்ட படங்களும்  ஓவியங்களும் வழங்குதல்
  11. இயன்ற வரை எளிய நடையில் அனைத்தையும் எழுதி வழங்குதல்
  12. அனைவரும் வாங்கிப் படிக்கும்படி நூலின் அளவு இருக்க வேண்டும் என்பதைக் கருத்தில் கொள்ளுதல்
  13. குறட் கருத்துக்களோடு ஒத்துள்ள சான்றோர்களின் பொன்மொழிகள், பழமொழிகள், அறவுரைகள், அறிவுரைகள் ஆகியவற்றையும் சுட்டிக்காட்டுதல்
  14. மறுபக்கக் குறட் பாக்கள், துணைநலக் குறட் பாக்கள் என அமைத்துத் திருக்குறட் பாக்களின் கருத்துக்களை எளிதாகப் புரிவதற்கு வழிவகை செய்தல்
  15. நகைச்சுவைகள் முதலானவற்றை உடன்பாட்டில் அமைத்து நன்மைகளை வெளிக்காட்டுதலும் எதிர்மறையிலும் அமைத்துத் தீமைகளை வெளிப்படுத்தும் வகை எடுத்துக் காட்டுதல்
  16. சான்றோர்கள் வாழ்வில் நடந்த நகைச்சுவை நிகழ்ச்சிகளைப் பொருத்தமான இடங்களில் அமைத்துக் காட்டுதல்
  17. திருக்குறட் கருத்துகளை விளக்குவதற்கு அகச் சான்றுகளையும் புறச் சான்றுகளையும் வழங்குதல்
  18. நய உரைகள், விளக்க உரைகள், நுண்பொருள் உரைகள், குறிப்பெச்ச உரைகள், ஊடுபொருள் உரைகள், பெறுபொருள் உரைகள் போன்ற பல்வேறு கோணங்களில் உரைகள் அமைத்துத் திருவள்ளுவப் பெருந்தகையாரின் பொருள் புலப்பாட்டுத் திறன்களை எல்லாம் புவிக்கு உணர்த்துதல்
  19. முக்காலத்திற்கும் பொருந்தும் தக்கதோர் முத்தான முழுநூல் என்பதை வெளிக்காட்டும் நோக்கில் அனைத்துக் கூறுகளையும் சிந்தித்துத் தெளிவுற வழங்கி விழிப்புணர்வை வையகம் முழுதும் ஏற்படுத்துதல்

இவற்றைக் குறிக்கோளாகக் கொண்டு இயன்வரை இந்த நூலில் வழங்கியுள்ளேன்.

இதற்கு முன்னர் நான் எழுதிய திருக்குறள் மாமேதை   பேராசிரியர் முனைவர் கு.மோகனராசு அவர்கள் தலை மையில் வள்ளுவர் கோட்டத்தில்  வெளியிடப்பட்ட கீழ்க்காணும்

  1. திருக்குறள் அறுசொல் உரை
  2. குறள் பொருள் நகைச்சுவை
  3. குறட்சுவையும் நகைச்சுவையும்
  4. திருக்குறள் விருந்தும் நகைச்சுவை விருந்தும்
  5. முப்பால் மூலம் — சொற்பிரிப்புடன்
  6. வள்ளுவம் வகுத்த வகையும் நகைச்சுவையும்
  7. வள்ளுவமும் கொல்லும் சினமும் நகைச்சுவையும்

[இது மட்டும் சென்னை வாணுவம்பேட்டையில் திருக்குறள் இலக்கிய மன்றத்தில் திருக்குறள் பண்பாட்டுச் சிற்பி கோ.பார்த்தசாரதி அவர்கள் தலைமையில் வெளியிடப்பாது.]

8.உள்ளுந்தோறும் வள்ளுவம்

என்னும் எட்டு நூல்களுக்கும் ஆய்வாளர்கள்,  அறிஞர்கள், ஆர்வலர்கள்,  கவிஞர்கள், சுவைஞர்கள், நண்பர்கள் முதலானோர் கொடுத்த பேராதரவைப் போலவே, இந்தத் ‘திருக்குறள் முழக்கமும் நகைச்சுவை விளக்கமும்’  என்னும் இந்த 9-ஆவது நூலுக்கும்   கொடுத்தருள வேண்டும் என்பது என் பணிவன்பான வேண்டுகோள்.

  “தாங்கள்மட்டுமே திருக்குறள் தொடர்பான  நூல்களை எழுதிக் குவிக்க வேண்டும்; தாங்கள்மட்டுமே அதில் சாதனைகள் புரிய வேண்டும்” என்று நினைப்பவர்கள்தான் மிகவும் அதிகம். ஆனால், மற்றவர்களும் நூல்களை எழுத வேண்டும்; அதில் சாதனைகள் புரிய வேண்டும்”  என்னும்  நல்நோக்கோடு அனைவரையும்  பல்முறை வற்புறுத்தி எழுதத் தூண்டுகின்ற பெருந்தன்மையர்  கைம்மாறு வேண்டாக் கடப்பாட்டாளர் பேராசிரியர்  முனைவர் கு.மோகனராசு அவர்கள்.

  அந்தப்  பெருந்தன்மையே பெருந்தண்மையே என்னையும் திருக்குறள் தொடர்பு நூல்களை எழுத ஊக்கியது; என் மலைப்பைப் போக்கியது; என்னை நூல் ஆக்குவோன் ஆக்கியது. என்னை ஓர் அடிக்கு மேலே தூக்கியது. நான் அவருக்கு  என்றென்றும் நன்றிக் கடன்பட்டவன்.

  “ஏதோ வாங்கினோம்; ஏதோ படித்தோம்; ஏதோ எழுதினோம்; கொடுத்தோம்” என்று இல்லாமல், ஒரு நூலுக்கு அணிந்துரை எழுதித் தரும்படி வேண்டினால், மிகவும் நெருக்கடியான திருக்குறள் ஆய்வுப் பணிகளுக்கிடையேயும் கொடுத்த நூலை ஆழமாகப் படிப்பார். அதனைக் கூர்ந்து ஆராய்வார். அதன்பின்னரே அந்த நூலுக்கு ஓர் அழகான ஆய்வுரையை அருமையான அணிந் துரையாக ஒரு  மணியான உரையாக எழுதித் தருவார்.

  அந்த வகையில் ‘திருக்குறள் முழக்கமும் நகைச்சுவை விளக்கமும்’   என்னும்  இந்த நூலுக்கும் பேராசிரியர் முனைவர் கு.மோகனராசு அவர்கள்  அதே முறையில் ஓர் அருமையான அணிந்துரையினை வரைந்து வழங்கியுள்ளார். அவருக்கு என் நன்றி அறிதலைப் பெருமகிழ்வோடு  இங்குப் பதிவு செய்கின்றேன்.

  செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தில் பதிவாளராகப்பணியாற்றும் தமிழ்த் திரு  பேராசிரியர் முகிலை இராசபாண்டியன் அவர்களிடம் இந்த நூலுக்கு ஆய்வுரை  எழுதித் தர வேண்டும் என வேண்டிக் கொண்டேன். அவருக்கிருந்த பணி நெருக்கடிக்கு இடையிலும் என் வேண்டுகோளை உடனே மகிழ்வோடு ஏற்றுக் கொண்டு ஓர் ஆய்வுரையை எழுதிக் கொடுத்தார்.

 அவருடைய ஆய்வுரையைப் படித்தேன்; எழுத்தெண்ணிப் படித்திருக்கின்றார் என்பதைப் புரிந்துகொண்டேன். நான் நகைச்சுவைகளிலும் கதைகளிலும்  பயன்படுத்தியிருக்கும் திருக்குறளில் வரும் சொற்களின் அடிப்படையில் அமைந்த பெயர்களை எல்லாம் தொகுத்து இந்த ஆய்வுரையில் வழங்கியுள்ளார் என்பதே அதற்குச் சான்று.

  இந்த நூலில் நான் பயன்படுத்திய படங்களை எல்லாம் ஊன்றிக் கவனித்திருக்கின்றார் என்பதை அவர் அவற்றிற்குத் தந்துள்ள விளக்கங்களே மற்றும் ஒரு சான்று.

  அருமையும் அழகும் இலக்கிய நயமும் பொலியும் வண்ணம்   இந்த நூலுக்கு  வழங்கியுள்ள ஆய்வுரை,  எனக்கு மேன்மேலும் திருக்குறள் தொடர்பு நூல்களைப் படைக்க வேண்டும் என்னும் எண்ணத்தை விதைத்துள்ளது. அவருக்கு என் நன்றி அறிதலை பெருமிதத்தோடு பதிவு செய்கின்றேன்.

  நான் நூல்கள் எழுதுவதைப் பெருமையாகக் கருதி, எனக்கு வேண்டிய எல்லா உதவிகளைச் செய்பவர்,  உற்ற துணையாகத் திகழ்பவர், மனைத் தக்க மாண்பினர், என் வாழ்க்கைத் துணைநலத்தர் திருமதி அர.புட்பம் அவர்களுக்கு என் நன்றி அறிதலைப் பதிவு செய்வதில் பெருமகிழ்வு கொள்கின்றேன்.

  இந்த நூல் இத்துணை அழகோடும் அருமை யோடும் வெளிவருவதற்குப் பெரிதும் துணை நின்றவர், தமிழ் நூல் பதிப்புத் துறைச் சாதனையாளர்,   கனிவுச்  சொல்லர்,     நனிநல்லவர், புகழணி  வல்லவர்,     நற்றமிழ்  போற்றும்  வெற்றி    பதிப்பகம், மணிவாகர் பதிப்பகத்தின் உரியமையாளர், உயர்வு உள்ளும் உள்ளத்தர் முனைவர் ச. மெ. மீனாட்சி சோமசுந்தரம் அவர்களுக்கும் நன்றி அறிதலைப் பதிவு செய்வதில் பெருமிதம் கொள்கின்றேன்.

 தமிழ் நூல் பதிப்பியல்  மேலாண்மையில் பேராற்றல் மிக்கவர், அன்பர், பண்பர், நண்பர், பழகுதற்கு இனியர், எளியர், திருக்குறள் பதிப்பு மாமணி  மணிவாசகர் பதிப்பகத்தின் மேலாளர் தமிழ்த்திரு இராம. குருமூர்த்தி அவர்களுக்கும் நன்றி அறி தலைப் பதிவு செய்வதில் அளவிலாக் களிப்பெய்திப் பெருமை கொள்கின்றேன்.

 என் ஒவ்வொரு நூலுக்கும் அழகு மிளிரும் வண்ணம் முன்அட்டையை வடிவமைத்துத் தரும் ,வண்ண அட்டைப் படஅமைப்பு வல்லுநர், ஓவியர் திருமிகு (உ)லோகேசு அவர்களுக்கும் நன்றி அறிதலைப் பதிவு செய்துகொள்வதில் மிக மகிழ்கின்றேன்.

  இந்த நூல் வலிவும் பொலிவுமுற வெளிவருவதற்குப் பின்நின்று அரும்பணி ஆற்றிய மணிவாசகர் பதிப்பகத்தின் தனிமதிப்பிற்கு உரிய அனைத்துப் பணியாளர்களுக்கும்  நன்றி அறிதலைப் பதிவு செய்து மகிழ்கின்றேன்.

என்றும் குறளின் குரலுடன்

வெ. அரங்கராசன்

நிறைகள் இருப்பின்,

திருவள்ளுவரைச் சாரும்;

குறைகள் இருப்பின்,

அரங்கராசனைச் சாரும்.

 

தமிழ் நிதி

குறளாய்வுக் குரிசில்

நகைச்சுவை நாயகர்

திருக்குறள் தேனீ

பேராசிரியர்

வெ.அரங்கராசன்