முனைவர் கு.மோகனராசின் திருவள்ளுவர் அகப்பொருள் நெறி

நூலாய்வுக் கட்டுரை – 1/4

  1. நுழைவாயில்:

            1-8-1973 ஆண்டு முதல் 4-2004 வரை சென்னைப் பல்கலைக் கழக இலக்கியத் துறையில் திருக்குறள் ஆய்வுப் பகுதியில் தகுதிமிகு பேராசிரியராகப் பணியாற்றிய 31 ஆண்டுகளில் திருக்குறள் ஆய்வில் உலகச் சாதனைகள் பற்பல புரிந்த  உயர்சாதனையர் நூலாசிரியர் முனைவர் கு. மோகனராசு அவர்கள்.

இந்நூல் வெளியிட்டப்பட்ட 4.2004 வரை நூலாசிரியரது சாதனைகள் 17. அவற்றின் பட்டியல் நூலின் பின்னட்டையில் பதிவு பெற்றுள்ளது. அவற்றை இங்குக் காண்போம்.

  1. திருக்குறள் நான்காவது எழுச்சிக் காலத்தின் தந்தை    
  2. திருக்குறள் ஆய்வு மற்றும் பரப்பும்  பணிகளில் முதல்வர்
  3. உலகின் முதல் திருக்குறள் தலைமைத் தூதர்
  4. உலகத் திருக்குறள் மைய நிறுவனர்

1.1.0.0.இவர் பெற்றுள்ள சில விருதுகள்:

  1. திருக்குறள் ஞானபீட விருது
  2. தமிழக அரசின் ‘திருவள்ளுவர் விருது’
  3. திருக்குறள் ஞானி முதலான 20க்கு மேற்பட்ட விருதுகள்
  4. இரண்டு திருக்குறள் நூல்களுக்குத் தமிழக அரசின் பரிசுகள்
  1. 2.0.0. இவரின் சாதனைகளுள் சில: 1.300க்கு மேற்பட்ட திருக்குறள் மாநாடுகள், கருத்தரங்குகள் நடத்தியமை
  • 2. 600க்கு மேற்பட்ட ஆய்வரங்குகளில் பங்கேற்றமை
  • 3. 400க்கு மேற்பட்ட புதிய ஆய்வு முடிவுகள் வழங்கியமை
  • 4. 100க்கு மேற்பட்ட நூல்கள் (அவற்றுள், 90% திருக்குறள் தொடர்பானாவை)
  • 5. ‘திருவள்ளுவர் அகப்பொருள் நெறி’யை 133 நூற்பாக்களாக வடித்தமை
  • 5. ஏறத்தாழ  2,00,000 பேருக்குப் பலவேறு நோக்குகளில் திருக்குறள் விருதுகள் வழங்கியமை
  • 6. 103 கிராமங்களில் ‘திருக்குறள் கருத்து விளக்கப் பயணங்கள்’ மேற்கொண்டு அவற்றைத் ‘திருக்குறள் திருத்தலங்கள்’ ஆக்கியமை
  • 7. ‘குறள்ஞானியின் குறள்யாப்பு அளவுகோல்’ என இவர் பெயரால் ஒர் ஆய்வு வரைவு

2.0.0.0. எள்ளிலிருந்து எண்ணெய் – இலக்கியத்திலிருந்து இலக்கணம்:

கவிதைக்கும் காப்பியத்திற்கும் சிறுகதைக்கும் புதினத்திற்கும் இலக்கண நெறிகள் வரையறுக்கப்பட்டுள்ளன. ஓர் இலக்கியத்திற்கு இலக்கண நெறி இயம்பியோர், இவ்வுலகில் உளரோ..? யான் அறிந்தவரை எவரும் இலர்.

உள்ளார் ஒருவர். அவர்தான் முனைவர் கு.மோகனராசு அ வர்கள். ஆம்..! எள்ளிலிருந்து எண்ணெய்யைப் பிழிந்து எடுப்பது போலத் திருவள்ளுவர் கொடுத்த காமத்துப் பாலிலிருந்து திரு வள்ளுவர் அகப்பொருள் நெறி என்னும் இலக்கண நூலைப் பிழிந்து எடுத்துக் கொடுத்துள்ளார் அவர். 

3.0.0.0. நூல் உருவாக்கப் பின்புலம்:

ஒரு நூலை உருவாக்கும் நூலாசிரியருக்கு ஒரு மேலான பின்புலம் இருக்கும். அது, சமுதாயம், நாடு, உலக நாடுகள் சார்ந்த முன்னெடுப்பாகச் சிறக்கலாம். முனைவர் கு.மோகனராசு  அவர்க ளின் நூல் உருவாக்கப் பின்புலம்,

தாம்இன்[பு] உறுவ[து] உல[கு]இன்[பு] உறக்கண்டு

காம்உறுவர் கற்[று]அறிந் தார்                                   [குறள்.399]

என்னும் அருங்குறளின் அடிப்படையில் சிறப்புடன் அமைந்துள்ளது என்பதைக் கீழ்க்காணும் அவரது கூற்று மெய்ப்பிக்கும்.  

“திருவள்ளுவப் பெருமகனார் கண்ட உலகப் பொதுமறையான அகப்பொருள் நெறிகளை நுண்ணிதின் அறிந்து, தெளிந்து, கண்டறிந்த முடிவுகளை, நூற்பாக்களாக உருவாக்கம் செய்து, வழங்க வேண்டும் என்னும் வேட்கையின் விளைவே இந்த நூல் முயற்சி.” [பக்.8].

  • 4.0.0.0. நூற் பெயர்ப் பொருத்தம்:

அடுத்தது காட்டும் பளிங்குபோல் நூலில்

கொடுத்தது காட்டும் பெயர்.

            உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசும் கள்ளப் பெயராக நூற் பெயர் இல்லாமல், உள்ளொன்று வைத்ததையே புறத்தும் விளக்கும் வகையில் நல்ல நூற் பெயர் அமைதல் வேண்டும்.

ஒரு நூலின் பெயரைப் படிக்கும்போதே அதன் உள்ளடக்கமான நல்லடக்கப் பொருண்மை, உடனே புலப்படும்படி உருவாக்கப்படல் வேண்டும்.  

            அரும்பொருள் ஆயும் திருவள்ளுவர் உருவாக்கிய பெரும் பொருள் காமத்துப்பாலில் உள்ள அகப்பொருள் நெறிகளையும் மரபுகளையும் ஆழ்ந்து அறிந்த நூலாசிரியர், அவற்றை ஒரு நூலாக நெய்தார். அதற்குத் “திருவள்ளுவர் அகப்பொருள் நெறி” என்னும் அருமையான ஒரு பெயரையும் மன்னும்படி அமைத் துள்ளார்.

இது திருவள்ளுவர் உருவாக்கிய காமத்துப்பாலில் உள்ள அகப்பொருள் நெறிகளை  அறிவிக்கும் நூல் எனத் தெளிவாகத்  தெரிவிக்கிறது. இது நூலாசிரியரின் நூற் பெயரிடுதிறனை நுவலும் தன்மையதாகவும் நிலவுகிறது.     

5.0.0.0. நூல் அமைப்பியல் முறைமை:

எந்த ஒரு நூலுக்கும் இரு வகைக் கட்டமைப்பியல் முறை மைகள் உண்டு. அவை:

5.1.0.0. புறக்கட்டமைப்பியல் முறைமை

5.2.0.0. அகக்கட்டமைப்பியல் முறைமை

இவ்இரு கட்டமைப்பியல் முறைமைகளும் இந்நூலில் அமைவு பெற்றுள்ளமையை இனிப் பார்ப்போம்.

  • புறக்கட்டமைப்பியல் முறைமை:

            முன்னட்டையில் “திருவள்ளுவர் அகப்பொருள் நெறி” என்னும் நூற் பெயர், திருவள்ளுவரது இரு வகை வண்ணப் படங்கள், வண்ணத் தாமரை, மணிவாசகர் பதிப்பக முத்திரை, முனைவர் கு. மோகனராசு என்னும் நூலாசிரியர் பெயர் ஆகியன எண்ணைத்தையும் கண்ணையும் கவரும்  வண்ணம், வண்ணம் கொண்டு மின்னுகிறது.  

முதல் பக்கத்தில்

133 நூற்பா வடிவிலான அகப்பொருள் நெறி மூலம்,  நூலாசிரியர் பெயர், மணிவாசகர் பதிப்பக முகவரி ஆகியன உள்ளன.

இரண்டாவது பக்கத்தில்

முதல் பதிப்பு: ஏப்பிரல் 2004, திருவள்ளுவர் ஆண்டு 2035, உரிமை ஆசிரியருக்கு, விலை: உரூ.6, மணிவாசகர் வெளியீட்டு எண் 1065, பதிப்பாசிரியர் முனைவர் ச. மெய்யப்பன் பற்றிய குறிப்பு, மணிவாசக நூலகத்தின் கிளைகளின் முகவரிகள் உள்ளன. 

(தொடரும்)

     முன்னாள் தமிழ்த் துறைத் தலைவர்

              பேராசிரியர் வெ.அரங்கராசன்

    கோ.வெங்கடசுவாமி நாயுடு கல்லூரி                      

  கோவிற்பட்டி – 628 502, கைப்பேசி: 9840947998

   மின்னஞ்சல்: arangarasan48@gmail.com