தலைப்பு-பெரியார்நோக்கில்திருக்குறள் - thalaippu_periyaarnoakkil_thirukkural

 

பெரியார் நோக்கில் திருக்குறள்

பெரியாரின் பெரும் பாராட்டைப் பெற்ற ஒரே நூல் திருக்குறள். தன் பாராட்டுக்கான காரணங்கள் பலவற்றை அவர் அடுக்குகிறார்.

அவற்றுள் சில:

  1. திருக்குறள் பாமரர்க்குப் புரிவது, அறிஞரும் ஏற்பது.
  2. வள்ளுவர்க்கு யாரும் ஞானப்பால் ஊட்டவில்லை.
  3. “பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்” என வருணாசிரமத் தருமத்தை எதிர்க்கிறது.
  4. உயிர்ப்பலியிடும் வேள்வியை எதிர்க்கிறது.
  5. அறிவியலுக்குப் புறம்பான கருத்துகள் அதிகம் இல்லை.
  6. ஒழுக்கத்தை வலியுறுத்துகிறது.
  7. மூடநம்பிக்கை இல்லை.
  8. மனிதச் சிந்தனைகளுக்கு எதிரான மத ஆதிக்கக் கருத்து இல்லை.
  9. ‘பிராமணன்’ என்ற சொல் கையாளப் படவில்லை.

மேலும், “பிறர் மனத்தையும் நோகச் செய்யாத நயத்தக்க நாகரிகம்; பொதுத்தொண்டு செய்வார்க்கு மான உணர்வு தேவையில்லை; ஒருவன் பிச்சை எடுப்பது கடவுள் செயலாயின் அக்கடவுள் ஒழியட்டும்” என்ற கருத்துகள் அடங்கிய குறள்கள் அவரைப் பெரிதும் கவர்ந்தன.

  கடவுளை மறுக்கும் பெரியார், ‘கடவுள் வாழ்த்து’ அதிகாரத்திற்குப்  ‘பண்புச் சிறப்பு’ எனப் பெயரிட்டதுடன், அதிலுள்ள குறள்களுக்குப் புத்துரையும் எழுதியுள்ளார். “ஊழ்’ என்ற சொல்லுக்குப் ‘பிறவிக்குணம்’ என்றும், ‘மறுபிறவி’ என்பதற்குப் ‘பண்பு மாற்றங்கள்’ என்றும் புதுப்பொருள் கூறுகிறார்.

-புலவர் மு.இரத்தினம்:

பெரியார் ஈ.வெ.இராவின் இலக்கியக் கொள்கைகள்:

சிந்தனையாளன், பொங்கல் சிறப்பு மலர், 2002

பக்கம்.80-81