(பேராசிரியர் சி.இலக்குவனாரின் பன்முக ஆளுமை திருக்குறள் ஆராய்ச்சி 4/6 தொடர்ச்சி)

தலைப்பு-இலக்குவனாரின் பன்முக ஆளுமை, இ,திருவள்ளுவன் ; thalaippu_ilakkuvanarin_panmuka_aalumai_ilakkuvanar-thiruvalluvan

 

பேராசிரியர் சி.இலக்குவனாரின் பன்முக ஆளுமை திருக்குறள் ஆராய்ச்சி

5/6

கல்விக்கான விளக்கம்

‘கல்வி’ என்னும் அதிகாரத்தை விளக்கும் பொழுது தாய்மொழிவாயிலான கல்வியையே பெரும்பேராசிரியர் விளக்குவது வேறு யாரும் தெரிவிக்காத ஒன்றாகும். அவரின் விளக்கம் வருமாறு: கற்றற்குரிய நூல்களைக் கற்றல் கல்வியாம். இங்குக் ல்வியென்பது தாய்மொழி வாயிலாகக் கற்பதுதான். மக்கள் ஆட்சி நன்கு நடைபெற மக்கள் எல்லாரும் கல்வி கற்றவர் ஆக வேண்டுமென்றால் அவர்கள் தம் தாய்மொழியில் கற்றலைத்தான் குறிக்குமேயன்றி வேற்று மொழி வாயிலாகக் கற்றலன்று. அந்தந்த நாட்டுமொழியே கல்வி கற்பிக்கும் மொழியாகவும் அரசியல் மொழியாகவும் இருத்தல் வேண்டும்.”

ஊழலுக்கு எதிரான கல்வி

ஒழுக்கத்திற்கு ஊன்றுகோலாகவும் ஊழலுக்கு எதிரானதாகவும் கல்விப்பயிற்சி அமைதல் வேண்டும் எனத் திருக்குறள்அறிஞர் இலக்குவனார் பின்வரும் வகையில் விளக்குகிறார்: இடுக்கட்படினும் இளிவந்த செய்யாத உளப்பாங்கை இளமை யிலிருந்தே கொள்ளுமாறு கல்விப் பயிற்சியளித்தல் வேண்டும். மனத்துக்கண் மாசிலாத வாழ்வுக்குத் தம்மை உரிமையாக்கிக் கொள்ளுமாறு செய்தல் வேண்டும். கற்றவர் கற்றவாறு ஒழுகுவதற்குத் துணிவு பெறல் வேண்டும். கற்றவர் கற்றவாறு ஒழுகாமையால்தான் இன்று பல ஒழுக்கக்கேடுகள் நிலை பெற்றுள்ளன. ஆதலின் கற்றவாறு ஒழுகுதலையே கல்விப் பயிற்சியாகக் கொள்ளும் கல்வித் திட்டம் வகுத்தல் வேண்டும். இளமையிலிருந்தே திருக்குறளைப் பயிலுமாறு செய்து அதன் நெறியில் ஒழுகும் பயிற்சியை அளித்தல் வேண்டும்.

ஈன்றாள் பசி காண்பான் ஆயினும் செய்யற்க
சான்றோர் பழிக்கும் வினை[14]

என்பதனை உறுதிமொழிக் கொண்டு வாழ்தல் வேண்டும். இவ்வாறு வினைத் தூய்மை பெற்று வாழ்ந்தால்அன்றிக் கையூட்டு ஒழிப்புக் குழுக்கள் கணக்கின்றித் தோன்றியும் பயனின்று. [15]

திருவள்ளுவர் சமயம் கடந்தவர்

தெய்வப்புலவர் திருவள்ளுவரை ஒவ்வொரு சமயத்தவரும் தத்தம் சமயத்தவராகக் கூறுகையில் அவரைச் சமயங்களுக்கு அப்பாற்பட்டவராகப் பேராசிரியர் விளக்குகிறார்.

அனைவருக்கும் கல்வி உரிமை

கண்உடையர் என்பவர் கற்றோர்; முகத்து இரண்டு
புண்உடையர் கல்லா தவர்     (திருக்குறள் 393) என்னும் குறளை விளக்கும் பொழுது,

‘‘பிறநாட்டு அறிஞர்கள், கல்வியை உணவுக்கும் காற்றுக்கும், ஞாயிற்றின் ஒளிக்கும் ஒப்பிட்டுள்ளனர். காற்றும், உணவும், ஞாயிற்றின் ஒளியும் மக்கள் உயிர்வாழ்க்கைக்கு எவ்வளவு இன்றியமையாதனவோ அவ்வளவு இன்றியமையாதது கல்வியும் என்று கருதினர். ஆனால் வள்ளுவர் கல்வியைக் கண்ணுக்கு ஒப்பிட்டுள்ளமை மிகமிகப் போற்றுதற்கு உரியது. காற்றும் உணவும் வெயிலும் பெறுவதில் மக்களிடையே வேறுபாடு இருத்தல் முடியும். செல்வர்கட்கு ஒருவகையும் அல்லாதவர்கட்குப் பிறிதொரு வகையும் பெறலாம். ஆண்கள் ஒருவகையாகவும் பெண்கள் ஒருவகையாகவும் பெறலாம். ஆனால் கண்களைப் பெறுவதில் வேறுபாடு இருத்தல் முடியாது அன்றோ. செல்வர்க்கு ஒருவிதமான கண்ணும் ஏழைகட்கு இன்னொரு விதமான கண்ணும் இல்லையே.’’[16] என்னும் பேராசிரியர்,  உயர்ந்தவர், தாழ்ந்தவர், ஆண், பெண் என்ற வேறுபாடின்றி அனைவருக்கும் கல்வியைப் பெறும் உரிமை உண்டு என்பதைப் படிப்பவர் உள்ளத்தில் பதிக்கின்றார்.

எழுத்தைக் காக்க வள்ளுவர் ஆணை

எண்என்ப; ஏனை எழுத்துஎன்ப இவ்விரண்டும்
கண்என்ப வாழும் உயிர்க்கு.              (திருக்குறள் 392)

இக்குறள் மூலம் எண்ணையும் எழுத்துவடிவத்தையும் காக்க வேண்டித் தெய்வப்புலவர் திருவள்ளுவர் வலியுறுத்துவதைப் பேராசிரியர் விளக்குகிறார்.[17]
இலக்குவனார் திருவள்ளுவன்

நன்றி :  சென்னை வானொலி நிலையம்

         ‘நட்புஇணைய இதழ்

 

எண் குறிப்பு:

[14] திருக்குறள் 656

[15] வினைத்தூய்மை (ஆசிரியருரை):குறள்நெறி மலர் 1 : இதழ் 10; வைகாசி 19, 1995 (1.6.1964)

[16] வள்ளுவர் வகுத்த அரசியல்

[17] வள்ளுவர் வகுத்த அரசியல்