(23 மார்ச்சு 2014 இதழின் தொடர்ச்சி)

B__NATARAsAN01

அரசு அமைப்பும் இயல்பும்:

  வள்ளுவர் அரசின் உருவத்தைப்பற்றிக் கவலை கொள்ளவில்லை. அதன் உட்பொருளைப் பற்றியே எண்ணலானார். அரச அமைப்பைவிட ஆட்சி நலத்தையே ஆய்கின்றார். ஏனெனில் எந்த உருவத்தில் அரசிருந்தாலும் மக்கள் பொருளாதார வாழ்வு சிறப்பதற்கு, அந்த அரசின்பால் சிற்சில தகுதிகள் இருக்க வேண்டும். அத்தகுதிகள் இருக்குமானால் மக்களுக்கு இறுதியாக வேண்டும் இன்பவாழ்வு வந்தெய்தும் என்பதே அவர் கோட்பாடாக இருந்தது எனக் கொள்ள வேண்டியிருக்கிறது.

  எந்த அரசியல் அமைப்பாயினும் என்ன, ஆட்சி ஆதிக்கம் ஒரு தலைவன் கையில் இறுதியாகத் திரளும் வகையில்தானே இருக்கிறது. எனவே அவனை நல்லாட்சிக்கு ஏற்றவனாய் எவ்வாறு அமைப்பது? இதுவே வள்ளுவர் கவலை. அலக்சாண்டர் போப் என்ற ஆங்கிலக் கவிஞர் பாடுவார்:

‘‘அரசியல் உருவகம்பற்றி அறிவிலார் இகலட்டும்

நல்லாட்சி வழங்கும் அரசியலே நல்ல அமைப்பாகும்’’

For form of Government let fools contest

That which is administered best is best is best.

அரசும் ஊழும்:

  அரசியல் அமைப்பின் உருவம் பற்றிக் கருதாது உட்பொருள் பற்றி வள்ளுவர் கருதியது எதனாலென்றால், இறுதியில் ஆட்சித் தலைமையும் அதனைச் சார்ந்த அதிகாரமும் எந்த உருவமாயினும் ஒருவனிடத்தே அமைந்தே ஆகவேண்டியிருக்கவும் அவ்வாறு அமைவதும் ஊழின் பாற்பட்டதாக இருக்கின்றது. ஊழோ தடுத்தற்கரியதொன்று. ஆகவே ஊழ்வலியால் வரும் ஆட்சியை எங்ஙனம் நல்லாட்சியாக மாற்றுவது என்பதுபற்றிதான் கூறமுடியுமேயன்றி அரசியல் உருவத்தைப்பற்றிக் கூறுவதால் பயன் என்ன?

  அறத்துப்பால் கூறிமுடித்த வள்ளுவர் அடுத்து உடனேயே அரசியல்நெறி கூறும் பொருட்பால் கூறப்புகுமுன் இடையே ஒரு கணம் சிந்தனை செய்கிறார். இதுகாறும் கூறிய அறத்தால் உலக இன்பத்திற்குத் துணைக் காரணமாகிய நல்ல அரசியல் அமைப்பு இயல்பாய் ஏற்படுவதாய்க் காணோமே! எவ்வெவர் கையிலோ ஆட்சித்திறன் அமைந்து வருகிறதே, அதன் காரணம் என்ன? ‘ஊழ்’ என ஒன்றுள்ளது. அதன் வலியாலேயே அரசியல் தலைமையும் அதனால் வரும் பொருளாதார முன்னேற்றமும் உளவாகும் என்று தோன்றுகிறது. அறம் செய்வோர் வேண்டுமானால் தெள்ளியராதல் கூடும். திரு அல்லது ஆட்சித் தலைமை பெறும் வாய்ப்பு வேறொரு காரணத்தால் வருகின்றது. ‘அதுவே ஊழ்’ என்பது போல்.

‘‘இருவேறு உலகத் தியற்கை, திருவேறு

தெள்ளிய ராதலும் வேறு’’

என்று கூறுவராயினர். (அரசியல் செல்வத்தைக் கம்பரும், ‘அறம் நிரம்பிய அருளுடைய அருந்தவர்க்கேனும்’ எனும் கவிதையில் ‘பெறலரும் திரு’ எனச் சுட்டுகின்றார்.)

அவ்வாறாயின் அறத்துக்கும் ஊழுக்கும் தொடர்பில்லையா? என்ற கேள்வி எழுகின்றது. கண்கூடான நேரடியான தொடர்பைக் காணவியலாமலிருக்கலாம். ஆனால் ‘ஊழ்’ எனப்படுவது, இருவினையின் பயன் செய்தவனையே சென்றடையும் எனப்படும் ஒரு தவிர்க்கலாகாத நியதியேயன்றி வேறாகாது. எனவேதான் வள்ளுவர் கருத்தையுணர்ந்த பரிமேலழகரும் ‘ஊழ்’ என்பது ‘மேற்கூறிய அறத்தோடு இயைபு உடைமையானும்’’ என்று சுட்டிச் சொல்வரானார்.

இங்கு எடுத்துக் கொண்ட பொருளுக்குச் சிந்தனை செய்யவேண்டுவது இதுவே. ஆட்சி நலம் எவ்வகையான அரசியலமைப்பிலும் ஒருவனை எங்ஙனமும் சார்கின்றது. அது ஊழான் வருவது, அவ்வாறு ஊழான் வந்த ஆட்சி நலத்தால் உலகு இன்பம் அடைய அவன் பெற வேண்டும் தகுதிகள் யாவை என்பதேதான்.

(தொடரும்)

– குறள்நெறி மாசி 3, 1995 / 15.02.1964