வள்ளுவர் குலவினம் – பேராசிரியர் ஞா.தேவநேயப்பாவாணர்
உள்படுதலாவது அணுக்கமாதல். உலக வழக்கு நோக்கின், வள்ளுவரென்பார் வழிவழிகணிய (சோதிட)த் தொழில் செய்து வரும் தூய தமிழ்க் குலத்தாராவர். கணியத்திற்கு இன்றியமையாதது சிறந்த கணித அறிவு. கணித அறிவிற்கு இன்றியமையாது வேண்டுவது நுண்மாண் நுழைபுலம் என்னும் கூர்மதி. வள் =கூர்மை வள்ளுவன் = கூர்மதியன்.
பண்டைத் தமிழகத்திற் பொது மக்களும் புரவலரும் நாளும் வேளையும் பார்த்தே எவ்வினையையும் செய்து வந்தமையின் பட்டத்து யானை மீதேறி அரசன் கட்டளைகளைப் பறையறைந்து நகர மக்கட்கு அறிவித்த அரசியல் விளம்பர அதிகாரியும் வள்ளுவக் குடியைச் சேர்ந்த கணியனாகவே இருந்திருக்கலாம். இனி, வள், வள்பு என்பன தோல்வாரைக் குறிக்கும். சொற்களாதலால், வள்ளினாற் கட்டப்பட்ட முரசத்தை அறைபவன் வள்ளுவன் என்றுங் கொள்ளலாம். ‘வள்ளுவர் முரசம்’ என்பது சிந்தாமணி.
இனி, ‘வருநிமித்திகன்பேர் சாக்கை வள்ளுவனென்று மாகும்’’ என மண்டல புருடன் சூடாமணி நிகண்டில் வருவதால், வள்ளுவனுக்கே சாக்கைப் பெயரும் உண்டோ என ஐயம் நிகழ்கின்றது. ஆயினும், வேத்தியற் கூத்தனைச் சாக்கை அல்லது சாக்கையன் எனச் சிலப்பதிகாரம் கூறுவதாலும், சூடாமணி நிதண்டு மிகப் பிற்காலத்தாதலாலும் பிங்கலம் கூறும் ‘வள்ளுவன் சாக்கை’ என்னும் தொடரை உம்மைத் தொகையாகக் கொள்வதே பொருத்தமென்று தோன்றுகின்றது.
வள்ளுவர் என்பார் ஒரு குடியினராதலாலும் அக்குடியினர் அனைவரும் வேத்தியல் விளம்பர அதிகாரிகளாக வியலாதாதலாலும், திருவள்ளுவர் வள்ளுவர் குடியினராயிருந்து தம் குடிக்குரிய வள்ளுவ (கணிய)த் தொழிலையோ வேறான் நெசவுத் தொழிலையோ செய்து வந்த ஓர் அறிஞராகவிருந்திருக்கலாம். இக்கருத்து, மாமூலனார் பெயரால் வழங்கும்,
‘அறள் பொருள் இன்பம் வீடென்னுமிந் நான்கின்
திறந்தெரிந்து செப்பிய தேவை மறந்தேயும்
வள்ளுவ னென்பானோர் பேதை அவன்வாய்ச் சொல்
கொள்வார் அறிவுடையார்’
திருவள்ளுவமாலைச் செய்யுளாலும் ஏலேல சிங்கன் கதையாலும் பெறப்படுகின்றது.
இனி, வள்ளுவன் என்பது நாஞ்சில் வள்ளுவன் என்பது போல் ஓர் இயற் பெயராகவும் இருந்திருக்கலாம். வள்ளுவன் என்று ஓர் இயற்பெயர் இன்றும் நெல்லை மாவட்ட நாட்டுப்புற மக்கள் பெயர் வழக்கில் இருந்து வருகின்றது. மகரம் வகரமாகத் திரிவது இயல்பு. வள்ளுவன் என்பது குடிப் பெயரன்றி இயற் பெயராயின், திருவள்ளுவர் குடியை அறியும் சான்று எதுவுமில்லை என்ற முடிவிற்கே வருதல் வேண்டும். ஆயினும், ஆரியக் கலப்பற்ற தூய தமிழர் என்று கொள்ளுதற்கு ஏதும் தடையல்லை. அவர் ஆரியத் தொடர்புள்ளவராயின்,
‘‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா
செயதொழில் வேற்றுமை யான்’’
‘‘ஒழுக்கமுடைமை குடிமை யிழுக்கம்
இழிந்த பிறப்பாய் விடும்’’
‘‘அந்தண ரென்போர் அறவோர்மற்றெவ்வுயிர்க்கும்
செந்தண்மை பூண்டொழுக லான்’’.
எனக் கூறியிரார்.
சிலர், திருவள்ளுவர் வள்ளுவக் குடியினரல்லார் என்பதற்கு, குடிப்பெயர் சிறப்புப் பெயராதலில்லையெனக் கருவியம் (காரணம்) காட்டுவர். வெண்ணியக்குயத்தியார், இளவேட்டனார் என்று அக்காலத்திலும், ஏ.எல்., முதலியார் சி. டி.நாயுடு என்று இக்காலத்திலும், வழக்குண்மையால், அது போலி என்க. சிலர், திருவள்ளுவர் நெய்தல் தொழில் செய்து வந்த பறைக் குலத்தினர் என்பதற்கு,
‘‘பூவில் அயனும் புரந்தரனும் பூவுலகைத்
தாவி அளந்தோனும் தாமிருக்க – நாவில்
இழைநக்கி நூல்நெருடும் ஏழையறிவேனோ
குழைநக்கும் பிஞ்ஞகன்றன் கூத்து’’
என்னும் (திருவள்ளுவர் பெயரால் வழங்கும்) தனிப் பாடலையும், தொன்று தொட்டு நெசவுத் தொழில் செய்து வரும் கோலிகப் பறையர் குடியையும், சான்றாகக் காட்டுவர்.
இவ்வாறு, ஆரியக் கலப்பினராகவும் இழிகுலத்தாராகவும் திருவள்ளுவரைக் கூறுவது தமிழர்க்கு இழுக்கெனக் கருதி, சிலர் அவர் வேளாளர் குலத்திற் பிறந்து மார்க்கசகாயர் என்னும் வேளாளப் பெருமகன் மகளாகிய வாசுகியை மணந்தாரென்று கூற முற்படுவர்.
இவையெல்லாம் அகச்சான்றும் நம்பத்தக்க புறச்சான்றும் இல்லாதனவாதலின், இவற்றையெல்லாம் அறவே விடுத்து,
‘‘எப்பொருள் யார் யார் வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு’’.
என்னும் வள்ளுவர் நெறிமுறையைக் கடைப்பிடித்து அவர் எக்குலத்தார் என்னும் ஆராய்ச்சியில்லாது அவர் கூறிய வாய் மொழியையே மேற்கொள்வோமாக.
Leave a Reply