(வள்ளுவர் சொல்லமுதம் -1 : அ. க. நவநீத கிருட்டிணன்: திருக்குறள் தெள்ளமுதம்-தொடர்ச்சி)

உ. இறையருளும் நிறைமொழியும்

இறைவன் எங்கும் நிறைந்தவன். பார்க்கும் இடம் எங்கும் நீக்கமற நிறைகின்ற பரம்பொருள். அவன் இல்லாத இடமே இல்லை. உயிருள் உயிராகியும் அணுவுள் அணுவாகியும் ஒளிர்பவன். அவனன்றி ஒரணுவும் அசைவதில்லை. அறக் கடலாகவும் அருட்பெருங் கடலாகவும் அறிவுருவாகவும் திகழ்பவன். விருப்பு வெறுப்பு இல்லாத விமலன். இருவினைகள் சேராத இயல்பினன். தனக்கு உவமை இல்லாத தனிப் பெருமை உடையவன்.

இத்தகைய இறைவன் திருவடி, பிறவிப் பிணிக்கு மருந்தாய் விளங்குவது. அதனை வணங்குதலே அறி வுடையார் செயல். அதுவே கல்விப்பயன் ஆகும். அப்பெருமானின் திருவடிகளே இடையறாது சிந்திப்பார் இன்ப உலகில் இனிது வாழ்வர். அவர்கள் எப்போதும். எவ்விடத்தும் இன்னல் எய்தமாட்டார். இறைவன் திருப்புகழை விருப்புடன் ஒதுவார்க்கு இருவினைத் துன்பங்கள் வருவனவல்ல. அவர்கள் நிலைபெற்ற நல்வாழ்வு பெறுவர். பிறவிக்கடலை நீந்திப் பேரின்பக் கரையேறி மகிழ்வர். இருமைப் பயன்களையும் ஒருங்கு நல்கும் இறைவன் தாளை வணங்காத் தலை பாழுந்தலை என்று இறை உண்மையையும் அவன் அருள் வன்மையையும் இனிது விளக்குவார் தெய்வப் புலவர் திருவள்ளுவர்.

இறைவனது திருவருள் வடிவாகப் பொழிவதே மழை. ஆதலின் தமது திருக்குறட் பெருநூலில் கடவுள் வாழ்த்தை அடுத்து வான்சிறப்பை வலியுறுத்தினார்.’ மழையின்றி மாநிலத்தார்க்கு இல்லை’ என்பர் அறிஞர். மழை பொழிவதனாலேயே உலகம் வாழ்கிறது. உயிர்கள் தழைக்கின்றன. ஆதலின் மழையே மாநிலத்தார்க்கு அமிழ்தம் என்று போற்றும் மாண்புடையது. மழைத்துளி வீழாதாயின் பாரில் பசும்புல்லின் தலையையும் பார்த்தல் இயலாது. நெடுங் கடலும் தன் நீர்வளம் குன்றிவிடும். உழவர் நிலத்தை உழுது பயிர் செய்தலை ஒழிவர். பரந்த உலகத்தைப் பசித்துயரம் பற்றிக்கொள்ளும். தெய்வங்கட்கு விழவும் வழிபாடும் கடவாது ஒழியும். தானமும் தவமும் தாரணியில் நடவா. ‘அவனருளாலே அவன் தாள் வணங்கி’ என்னும் மணிமொழி எவ்வளவு உண்மை யானது !


‘மழையும் தவமிலார் இல்வழி இல்லை என்பர் நல்லறிஞர். நல்லார் ஒருவர் உளரேல் அவர்பொருட்டு எல்லார்க்கும் பெய்யும்மழை என்பார் தமிழ் மூதாட்டியார். இறைவன் திருவருனைப் பெறுதற்கென்றே அரிதின் முயன்று பெருந்தவம் கிடப்பார் முனிவர் பெருமக்கள். அவர்களையே நம் தெய்வப்புலவர் நீத்தார் என்ற பெயரால் குறித்தருளினர். முற்றும் துறந்த முனிவர்பெருமை மொழியவொண்ணாது. பாரனைத்தும் பொய்யெனவே பற்றற்று நின்று, பற்றற்ற பரம்பொருளைப் பற்றிய அன்னார் முற்றுணர்ந்த மூதறிஞர் ஆவர். அவர்கள் செயற்கரிய செயல் புரியும் பெரியர். குணமென்னும் குன்றேறி நின்ற குளிர் தவச் செல்வர். செந்தண்மை பூண்ட அந்தணாளர். உரன் என்னும் தோட்டியால் ஒரைந்தும் காத்த உத்தமர்.
திருவருள் கைவரப்பெற்ற துறவியராகிய அறவோர் பெருமை அளப்பரியது. உலகில் பிறந்து இறந்த மக்களை எண்ணுதல் கூடுமோ? அதுபோலவே தான் துறந்தார் பெருமையை அளந்தறிதல் இயலாது.

துறந்தார் பெருமை துணைக்கூறின் வையத்து
இறந்தாரை எண்ணிக்கொண் டற்று’

என்பது வள்ளுவர் வாக்கு.

இத்தகைய பெருமை வாய்ந்த அருந்தவச் செல்வர் திருவாய்ப் பிறக்கும் மொழிகளே நிறைமொழி யெனவும் மறைமொழியெனவும் போற்றும் ஆற்றல் உடையன. நீத்தாரை நிறைமொழி மாந்தர் என்றே வள்ளுவர் போற்றுவார். அவர்கள் அருளிக் கூறினும் வெகுண்டு கூறினும் அவ்வப்பயன்களைப் பயந்தே விடும் இயல்புடையன அவர் மொழிகள். அவையே மந்திரம் என்று முன்னேர் பொன்னேபோல் போற்றிய மொழிகள். இதனைத் தொன்மைத் தமிழ் இலக்கணம் ஆகிய தொல்காப்பியம் நன்கு வலியுறுத்தும்.

நிறைமொழி மாந்தர் ஆணையிற் கிளந்த

மறைமொழி தானே மந்திரம் என்ப’
என்று தொல்காப்பியர் சொல்லிப் போக்தார்.
சந்தனப்பொதிகைச் செந்தமிழ் முனிவனாகிய அகத்தியன் ஆறு முனிவர்களுடன் இந்திரப்பேறு பெறுதற்கு விரைந்தேகும் நகுடனது சிவிகையைத் தோளில் சுமந்து சென்றான். காமவேட்கை மீதூர்ந்த நகுடன், இந்திராணியின் மீது கொண்ட அந்தமிலாக் காதலான், சர்ப்ப சர்ப்ப’ என்று சத்தமிட்டான். நகுடனது அறியாமை மிக்க காம மயக்கினைக் கண்ட தண்டமிழ் முனிபுங்கவனகிய அகத்தியன், சர்ப்ப மாகக்கடவாய் ! எனக் கோபங்கொண்டு சாபமொழி பகர்ந்தான். காமப் பித்தகிைய நகுடன் கானகத்து உழலும் பாம்பாகிக் கடுந்துயர் உழந்தான். தமிழ் முனிவனாகிய அகத்தியன் அகத்தெழுந்த கோபமொழி நிறைமொழியன்ருே ! இறையருள்பெற்ற நிறைமொழியாளராகிய ஞான சம்பந்தர் மதுரைத் திருமடத்தில் தங்கியிருந்தகாலைச் சமணர்கள் அங்கே தீக்கொளுவினர். அச்செயலுக்கு மூலகாரணமாய் இருந்தவன் மதுரை மன்னன் ஆகிய கூன்.பாண்டியனே என்பதை உணர்ந்த அப்பெரு மான், பையவே சென்று பாண்டியற்காகவே’ என்று இயம்பியருளினார். அவரின் மொழிகள் நிறைமொழிகளாதலின் திருமடத்தில் பற்றிய தீயின் வெம்மை தென்னவன் உடம்பில் வெப்புநோயாகப் பரவியது.

சமணருடன் வாதுசெய்யத் திருவுள்ளம் கொண்ட ஞானசம்பந்தர், பாண்டியனது வெப்புநோயை நீக்க முற்பட்டார். ஆலவாய்ப் பெருமான் திருவருனைச் சிந்தித்து, மந்திரமாவது நீறு என்று தொடங்கிச் செந் தமிழ்த் திருப்பதிகம் பாடியருளினர். ஆலவாயான் அருள் கலந்த திருநீற்றை அரசன் உடம்பில் பூசி யருளினார். அவனது வெப்புநோய் அகன்றது. வேந்தனும், ஒங்குக!’ என்று வாழ்த்தியருளினர். அப் பெருமானது நிறைமொழியின் ஆற்றலால் மன்னனது உடற்கூனும் மாறியதன்றோ! –

திருமருகல் என்னும் தலத்தே பாம்பு தீண்டி மாண்ட வணிகன் மீண்டும் உயிர்பெற்று எழுமாறு பாடியருளிய ஞானசம்பந்தர் வாக்கு நிறைமொழியாவ தன்றோ! அப்பூதியடிகள் மைந்தன் அங்ஙனமே நச் சரவம் தீண்டி நல்லுயிர் நீத்தகாலை நாவுக்கரசர், அவன் உயிர்பெற்று எழுமாறு பாடியருளிய பாக்கள் இறையருள் கலந்த நிறைமொழிகள் அன்றோ !

திருமறைக்காட்டில் வேதத்தால் அடைக்கப் பெற்ற திருக்கோவில் கதவங்கள் திறக்குமாறு திருநாவுக்கரசர் பாடிய பாசுரங்களும், மீண்டும் அவை அடைக்குமாறு திருஞானசம்பந்தர் அருளிய பாக்களும் அருள் கலந்த நிறைமொழிகள் அன்றோ ! சுந்தரர் அவிநாசித் திருப்பதியில் முதலை உண்ட பாலனை அழைக்க, முழுமுதற் பெருமானை நினைந்து, ‘கரைக்கால் முதலையைப் பிள்ளை தரச்சொல்லு கால னேயே’ என்று அருளிய திருவாக்கு நிறைமொழி யாவதன்றோ !

(தொடரும்)
வள்ளுவர் சொல்லமுதம்
வித்துவான் அ. க. நவநீத கிருட்டிணன்