(வள்ளுவர் சொல்லமுதம் 10 : அ. க. நவநீத கிருட்டிணன் : சொல்லும் செயலும் 2- தொடர்ச்சி)

வள்ளுவர் சொல்லமுதம்
அ. கொடைநலமும் படைவலமும்


ஈகையும் வீரமும் தமிழரின் இணையற்ற பண்புகள் ஆகும். பழந்தமிழ்நாட்டு மன்னர் பலரும் கொடை கலத்திலும் படை வலத்தினும் சிறந்து விளங்கினர். இவ் உண்மையைச் சங்க இலக்கியங்கள் பல பாடல்களில் இனிது விளக்கும். பண்டைப் புலவரெல்லாம் மன்னர் கொடைநலத்தையும் படை வீரத்தையுமே கொண்டாடித் தண்டமிழ்ப்பாக்கள் பாடினர். திருவள்ளுவரும் தம் நூலுள் இத்திறங்களை நயம்பட உரைக்கிறார்,

தமிழ்நாட்டுக் கொடையின் பெருமையைக் குறிக்கத் திருவள்ளுவர் ஈகை, ஒப்புரவறிதல், அருள் முதலாய பல அதிகாரங்களை வகுத்துள்ளார். இல்லறத்தார் இனிது போற்றவேண்டிய அறம் ஈகையே. இவ் ஈகையின் இலக்கணமாக வள்ளுவர், “வறியார்க்கு ஒன்று ஈவதே ஈகை” என்று வரையறுத்துக் கூறினார். வறியர் அல்லாதவர்க்கு ஒரு பொருளைக் கொடுப்ப தெல்லாம் குறியெதிர்ப்பைக் கைம்மாறு கருதலே ஆகும். அளவு குறித்து ஒரு பொருளை மற்றவர்க்குக் கொடுத்து அவ்வளவே மீண்டும் அவர்பால் பெறுவது குறியெதிர்ப்பை ஆகும்; இங்ஙனம் பயனை எதிர்பார்த் துக் கொடுக்கும் கொடை, ஈகையின்பாற் படாது என்பர். ஈகை அறத்தின் சிறப்பினை விளக்கப் புகுந்த பொய்யில் புலவராகிய வள்ளுவர், –

நல்லாறு எனினும் கொளல்திது மேலுலகம்

இல்லெனினும் ஈதலே நன்று”
என்று சொல்லியருளினார். பிறரிடமிருந்து பொருளைப் பெறுதல் பேரறம் ஆகும் என்று சிலர் சொல்லினும் கொள்ளுதல் தீதே, கொடுப்பதுதான் நன்று என்றார். பிறர்க்குக் கொடை வழங்குவதால் பேரின்ப உலகம் சாருதல் சாலாது என்னினும் ஈதலே நல்லது என்பது அப்புலவரது உறுதியான கருத்து. மாவலி மன்னன் மாயவனாய வாமனனுக்கு மூன்றடி மண் வழங்குதற்கு முற்பட்டபோழ்து, வெள்ளி விரைந்து வந்து தடுத்தான். கொடுப்பதைத் தடுப்பது கண்ட மாவலி மன்னன், குருவின்மேல் கொடுஞ் சினம் கொண்டான். அவ் வெள்ளியை அறிவிலி யென இகழ்ந்து பேசினான். “கொடுப்பதைத் தடுக்கும் கொடியவனே உடுப்பதுவும் உண்பதுவும் இன்றி உலைவாய்!” என்று சபித்தான்.

வெள்ளியை யாதல் விளம்பினை மேலோர்

வள்ளிய ராக வழங்குவ தல்லால்

எள்ளுவ என் சில இன்னுயி ரேனும்

கொள்ளுதல் தீது கொடுப்பது நன்றால்”

என்று மாவலியின் வாயிலாகக் கம்பர், இக்கருத்தை நன்கு வலியுறுத்தினர். சிறந்த குடியில் பிறந்த வள்ளல்களின் நல்லியல்புகளை எல்லாம் வள்ளுவர் ஒரே குறட்பாவில் திறம்பட நயம்பெறத் தெளிவுறுத்துகின்றார். .

இலனென்னும் எவ்வம் உரையாமை ஈதல்
குலனுடையான் கண்ணே உள”

– என்பது வள்ளுவரின் தெள்ளமுத வாக்கு. இப் பாட லில் நம் தெய்வப்புலவர், பழந்தமிழ் நாட்டில் திகழ்ந்த பல்வேறு திறமுடைய வள்ளல்களையும் படம் பிடித்துக்காட்டுகிறார். இந்த உண்மையை உயர்ந்த உரையாசிரியராகிய பரிமேலழகர் வாயிலாகத் தெரிந்து மகிழலாம்.

தமிழர், இல்லை, என்ற சொல்லையே இழிந்த சொல்லாகக் கருதினர். இல்லாதவன் என்னும் சொல், இரப்பான் கூறும் இழிசொல்லாகும். அவ் இழி சொல்லை, நல்லகுடிப் பிறந்தார் நல்கூர்ந்தாரானாலும் சொல்லுதற்கு மனம் கொள்ளமாட்டார்கள். அதனைத் தம்பால் சொன்னவர்க்கு அன்பால் ஈவர். இங்ஙனம் அன்றி, இலன், என்ற இழிசொல்லைப் பிறன், தம் பால் சொல்வதற்குமுன், அவன் அகக் குறிப்பை முகக் குறிப்பால் அறிந்து கொடுக்கும் சிறப்புடைய ராயும் கொடையாளர் பண்டு விளங்கினர். மேலும் அவ் இழிசொல்லப் பிறன் ஒருவன்பால் சென்று, அவன் உரையாத வகையில் பெருங்கொடை வழங்கினர் சிலர். யான் இதுபொழுது பொருளுடையேன் அல்லேன் என்று வஞ்சநெஞ்சமுடையார் வழங்கும் இழிமொழியைச் சொல்லாது நல்ல உள்ளத்துடன் இரந்தார்க்கு நல்கினர். இங்ஙனம் பல்வேறு திறத்தினராகிய வள்ளல்களின் உயர்பண்பை எல்லாம், வள்ளுவர் சிறிய குறட்பாவில் செறித்துக் காட்டினார்.

கொடையில் சிறந்தவன் கன்னன் என்று கொண்டாடுவர் பண்டை அறிஞர். பாரதப் போரில் கன்னன் படைக்கலம் தாங்கி, வில்லின் வல்ல விசய னுடன் கடும்போர் புரிந்தான். கன்னன் உடம்பு முழுதும் விசயனது கடுங்கணைகள் தைத்து முள்ளம்பன்றி யைப்போல் காட்சி அளித்தான்; அம்பு தைத்த இட மெல்லாம் குருதிவெள்ளம் சொரிய, மெய் தளர்ந்து தேரின் மேல் சாய்ந்தான் ; ஆயினும் அவனது உடம்பைவிட்டு உயிர் அகலவில்லை. அக் கன்னன் பண்ணிய எண்ணரிய புண்ணியங்கள், அவனது உயிரை அகலவொட்டாது காத்து நின்றன. இந்த உண்மையைக் கண்ணன் கண்டான். விசயனைத் தேர் மிசை நிறுத்தித் தவவேதியன் வடிவு தாங்கிக் கன்னனை நண்ணினான்.

கன்னனை அடைந்த கண்ணன், “இமயத்தில் தவம் இயற்றிய ஏழையேன், நின் கொடைத்திறம் அறிந்து இங்கு வந்தடைந்தேன் இயைந்ததொரு பொருளை இக்கணத்தே ஈவாய்,” என்று வேண்டி நின்றான். தவவேதியன் கூறிய மொழிகள், கன்னன் இருசெவிக்கு அமுதென இனித்தன. நன்றென. நகைத்தான் நல்லருள் வள்ளலாகிய கன்னன். நான் தரத்தக்க பொருளை நவில்க !’ என்று இயம்பினன் மாயவன் ஆகிய மாதவன், “நீ இதுகாறும் பண்ணிய புண்ணியம் அனைத்தும் தருக,” என்று கூறினான். அதுகேட்ட கன்னன் களிகூர்ந்து,

ஆவியோ நிலையில் கலங்கிய தியாக்கை அகத்ததோ புறத்ததோ அறியேன்

பாவியேன் வேண்டும் பொருளெலாம் நயக்கும் பக்குவம் தன்னில்வந் திலையால்

ஓவிலா தியான்செய் புண்ணியம் அனைத்தும் உதவினேன் கொள்கநீ உனக்குப்

பூவில்வாழ் அயனும் நிகரலன் என்றால் புண்ணியம் இதனினும் பெரிதோ!’

என்று கூறித் தான்செய்த புண்ணியம் அனைத்தையும். தவவேதியனுக்குத் தந்தான். கன்னனது புண்ணியத்தை அவன்பால் இரந்து பெற்ற கண்ணன், “அதனைத் தாரை வார்த்துத் தருக” என்று வேண்டினன். போர்க்களத்தில் ஆரு யிர் ஊசலாடும் வேளையில் தாரை வார்க்க நீருக்கு என்ன செய்வான் கன்னன்? தனது மார்பில் தைத்த பகழியொன்றை விரைந்து பறித்தான். அப் புண்ணிலிருந்து இரத்தமாகிய செந்நீர் பெருகி வழிந்தது. அதனைத் தன் அங்கையால் ஏந்தி, முனிவனது அங் கையில் பெய்து மகிழ்ந்தான். இவ்விடத்தே வில்லி புத்தூரார் கன்னனது கொடைவீரத்துடன் அவனது படைவீரத்தையும் குறிப்பாகப் போற்றுகிறார்.

கைவேல் களிற்றொடு போக்கி வருபவன்
மெய்வேல் பறியா நகும்
” என்ற தமிழ் மறவனது வீரத்தைக் கன்னன் பால் கண்டு களிக்கச் செய்கிறார்.

உயிரைக் காத்து நின்ற புண்ணியத்தையும் உவப்புடன் வழங்கிய வள்ளலாகிய கன்னனது பன்னரிய கொடைத்திறத்தைக் கண்ணன் கண்டு கழிபேருவகை கொண்டான். “நீ விரும்பிய வரங்களை விளம்புக; உனக்குத் தருவோம்” என்று உரைத்தருளினான். ‘

அல்லல்வெவ் வினையால் இன்னம்.உற் பவமுண் டாயினும் ஏழெழு பிறப்பும்

இல்லையென்(று) இரப்போர்க்(கு) இல்லையென் றுரையா இதயம்நீ அளித்தருள் என்றான்”

“வினைப்பயன் காரணமாக, மீண்டும் யான் உலகில் தோன்றினால், இல்லை என்று சொல்லி இரப்போர்க்கு, யானும் இல்லை என்று சொல்லாத நல்ல உள்ளத்தை நல்கியருள்வாய்”, என்று கண்ணன்பால் கன்னன் வரம் வேண்டினன். இங்ஙனமாயின் கன்னனது இன் னருட் கொடைத்திறத்தை என்னென்று இயம்புவது!

தமிழகத்தே வாழ்ந்த கடை எழு வள்ளல்கள் கொடையில் சிறந்து விளங்கினர் என்பதைச் சங்க இலக்கியங்கள் நன்கு பறை சாற்றும். குறுநில மன்னர்களாய் வாழ்ந்த அப்பெரு வள்ளல்களின் கொடை நலத்தை நடைபயின்ற நற்றமிழ்ப் பாக்களால் பழங் தமிழ்ப் புலவர்கள் பாராட்டினர். பாரியும் பேகனும் பகுத்தறிவற்ற சிற்றுயிர்க்கும் பரிந்தருள் புரிந்தனர். முல்லைக்குத் தேரும் மயிலுக்குப் போர்வையும், எல்லை நீர் ஞாலத்து இசைவிளங்க அம் மன்னர்கள் வழங்கி மகிழ்ந்தனர்.

பாரிவள்ளல் தனது பேரருள் கொடைத்திறத்தால் பார்முழுதும் போற்றும் பரந்த புகழை அடைந் தான். குறுநில மன்னன் ஒருவன் பெரும்புகழ் கொண்டு விளங்குவதைக் கண்ட தண்டமிழ் நாட்டு முடிமன்னர் மூவரும் பொறாமை கொண்டனர். அவனது பறம்பு மலையை மூவரும் படையொடு சூழ்ந்து முற்றுகை இட்டனர். பாரியின் ஆருயிர் நண்பராகிய கபிலர் என்னும் கவிஞர் பெருமான், பறம்பினை முற்றிய மூவேந்தர்க்கும் பாரியின் சீரிய வண்மையை யும் வன்மையையும் கூறத்தொடங்கினார்:

“நீங்கள் மூவிரும் நீள்படை குழப் பன்னெடு நாட்கள் பாரியின் பறம்பு மலையை முற்றுகையிட்டாலும் பாரியை வெற்றி கொள்வதோ, பறம்பினைப்பற்றுவதோ நுங்களால் ஆகாது. இத் தண்பறம்பு நன்னாடு முந்நூறு ஊர்களை உடையது. அனைத்தையும் பாரியைப் பாடி வந்த பரிசிலர் பெற்றுக் கொண்டனர். இனி, அவனும் யாமுமே இருக்கின்றோம். நீரும் அப்பரிசிலர் போலப் பாடியாடி வருவீராயின் எம்மை யும் எஞ்சி நிற்கும் பறம்பு மலையையும் பெற்று மகிழ லாம்,”என்று கபிலர் முடிமன்னர் மூவர்க்கும் மொழிந் தருளினார். கவிஞர் கூறிய இம்மொழிகளில் பாரியின் கொடைகலமும் படைவலமும் ஒருங்கு விளங்கக் காணலாம்.

(தொடரும்)

வள்ளுவர் சொல்லமுதம்

வித்துவான் அ. க. நவநீத கிருட்டிணன்