(வள்ளுவர் சொல்லமுதம் -4 : அ. க. நவநீத கிருட்டிணன் : மனையும் மக்களும்.2 – தொடர்ச்சி)

வள்ளுவர் சொல்லமுதம்
4
. கல்வியும்‌ கேள்வியும்‌


மக்களை மாக்களினின்றும்‌ பிரித்துக்‌ காட்டுவது அவர்‌ பெற்ற கல்வியறிவே. பல்வேறு நூல்களைக்‌ கற்றலால்‌ பெற்றிடும்‌ அறிவே கல்வியாகும்‌. கற்றறிந்த நல்லார்‌ சொல்லக்‌ கேட்டலால்‌ பெற்றிடும்‌ அறிவு கேள்வியாகும்‌. பலகால்‌ பழகிய பழக்க முதிர்ச்சியின்‌ விளைவாலாகிய அறிவு அனுபவமாகும்‌. இங்ஙனம்‌ அறிவை முக்கூறு படுத்தலாம்‌.
முதற்கண்‌ கல்வியறிவை நோக்குவோம்‌. கல்‌ என்ற சொல்‌, தோண்டு என்ற பொருளைத்‌ தருவது. உள்ளத்தில்‌ ஆழ்ந்த அறியாமையைக்‌ தோண்டி அகற்றி, அறிவைக்‌ கொளுத்துதல்‌ வேண்டும்‌. இயற்கையான அறிவு நம்‌ இதயத்தில்‌ ஆழ்ந்து கிடக்‌கிறது. மேலே அறியாமை என்னும்‌ மண்‌ மூடி. யுள்ளது. அவ் அறியாமை மண்ணை அகழ்ந்து, அறிவை விளங்குமாறு செய்வதே கல்வி என்பது பொருந்தும்.

இக்‌ கல்வி அறிவைப்‌ பெறுவது எங்ஙனம்‌ ? தக்க நல்லாசிரியனை நாடி, அவன்பால்‌ “ உற்றுழி உதவியும்‌ உறுபொருள்‌ கொடுத்தும்‌ பிற்றைநிலை முனியாது கற்றல்‌ வேண்டும்‌.” குலத்தாலும்‌ நலத்தாலும்‌ சிறந்த ஆசிரியனைக்‌ கொள்ளவேண்டும்‌. அவன்‌ கலைபயில்‌ தெளிவும்‌ கட்டுரை வன்மையும்‌ உடையவனாக விளங்க வேண்டும்‌” பொறுமையும்‌ பெருமையும்‌ நேர்மையும்‌ சீர்மையும்‌ நிறைந்தவனாக இருக்க வேண்டும்‌. உலகியல் அறிவும்‌ உடையவனாக ஒளிர வேண்டும். இத்தகைய நல்லாசிரியனுக்குப் பணிந்து கல்வியைப் பயிலுதல் வேண்டும்.

உடையார்முன் இல்லார்போல் ஏக்கற்றும் கற்றார்

கடையரே கல்லா தவர்.

இங்ஙனம் தெய்வப்புலவர் கல்வி பயிலும் முறைமையை வரைவார். செல்வர் முன் பணிந்து இரந்து நிற்கும் ஏழையாரைப் போல, ஆசிரியன்பால் மாணவன் பணிந்து நின்று பாடங் கேட்டல் வேண்டும். அவ்வாறு கற்றவனே கலை வல்ல தலைவனாவான். அங்ஙனம் கல்லாதவர் எல்லாரும் கடையர் என்பது வள்ளுவர் கருத்து.

மாணவன் கற்பனவற்றைக் கசடறக் கற்றல் வேண்டும். ஐயம் திரிபுகளாகிய குற்றங்கள் அகலக் கற்கும் கல்வியே பயனுடையதாகும். ஆதலின், “கற்க கசடறக் கற்பவை” என்பார்.

கற்ற கல்வியே உளத்திற்குத் தீஞ்சுவை பயக்கும். உலகில் எண்ணிறந்த நூல்கள் உள்ளன. பரந்த கடலைப் போன்று விரிந்து நிறைந்துள்ளன. அத்தனையும் கற்றல் எத்தஎையார்க்கும் ஏலாத செயலே. ஆதலின் வள்ளுவர், கற்பவை என்ற சொல்லால் நூல்களைப் பாகுபாடு செய்கின்றார். கற்றற்குரிய நூல்களையே கற்றல் வேண்டும் என்பதை வற்புறுத்துகிறார். அறம், பொருள், இன்பம், வீடு ஆகிய உறுதிப் பொருள்களை உணர்த்தும் நூல்களையே ஓதி யுணர்தல் வேண்டும்.

அலகுசால் கற்பின் அறிவு நூல் கல்லா(து)

உலகநூல் ஒதுவ தெல்லாம்-கலகல

கூஉம் துணையல்லால் கொண்டு தடுமாற்றம்

போஒம் துணையறிவார் இல்”

என்று நாலடியார் நவிலும். உறுதிப் பொருள்களை அறிவுறுத்தும் உண்மையான நூல்களையே கற்றல் வேண்டும். பிற உலக ஞானத்தைப் பெருக்கும் நூல்களை ஒதுவதெல்லாம் மறுமை இன்பம் பெறுதற்கு உறுதுணை புரிவனவல்ல. பிறவிப் பிணியாகிய தடுமாற்றத்தைப் பெயர்த்தெறியும் பெற்றி அவ் வுலக நூல்களுக்கு இல்லை. கல்வியோ கரையற்ற கடல் போன்றது. அதனைக் கற்பவராய மக்கள் வாழ்நாளே மிக்க குறைவு. அங்ஙனம் குறைந்த வாழ்நாளுள்ளும் பல் வேறு பிணிகள் வந்து பற்றிக் கொள்கின்றன. ஆதலின், ஆராய்ந்து அமைவுடைய நூல்களையே ஆன்றோர் கற்பர். இம்முறையில் கற்றவரையே மற்றவர் மதிப்பர். எக்குடிப் பிறப்பினும் யாவரே. யாயினும் கல்விச் சிறப்புடையாரையே எவரும் வருக வென்று ஏற்றுப் போற்றுவர். ‘கற்ருரை யான் வேண்டேன், கற்பனவும் இனி அமையும்’ என்று, சிலர் ஒரு சில நூல்களைக் கற்றவளவில் அமைதியுற்று விடுகின்றனர். இறக்கும் வரைக்கும் கற்றாலுங்கூட முற்ற உணர்தல் முடியாது. இதனாலேயே பேரறிஞர்கள் என்றும் மாணவராக இருக்க விழைந்தனர். இடையறாது, ஓய்ந்த வேளை யெல்லாம் ஆய்ந்து கற்றல் வேண்டும் என்பதே வள்ளுவர் கருத்து. ஆதலின்,

  • “யாதானும் நாடாமால் ஊராமால் என்னொருவன்

சாந்துணையும் கல்லாத வாறு ”

என்று சொல்லியருளினார். ஒருவன் எத்தனை நூல்களைக் கற்கிறானோ, அத்துணை அறிவு வளர்ச்சியடைவான். மணலில் தோண்டும் ஆழத்தின் அளவாகவே தண்ணீர் ஊறுவதைக் கண்ணுறக் காண்கிறோம். அதுபோலவே கற்ற அளவே கலைநலம் பெருகும் என்பது தெளிவு.

இவ்வாறு கற்றுணர்ந்த கல்வி அறிவே என்றும் அழியாத விழுச்செல்வம். மற்றைய பொன்னும் பொருளும் மாடும் மனையும் ஆகிய செல்வங்கள் அழிந்து போகும் நிலையாமை உடையன. ஒரு பிறப்பில் கற்றுப் பெற்ற கல்வி, எழு பிறப்பும் தொடர்ந்து வந்து இன்பத்தை ஊட்டும். இம்மை இன்பம் நம்மை அடையுமாறு செய்வது நல்ல கல்வியே. மாணவர்க்கோ, மனத்தோடு கேட்பார்க்கோ சொற் கொடை புரிவதால் வருவதொரு கேடும் இல்லை. மன்னா உலகத்து மன்னிய புகழை கண்ணுமாறு பண்ணும். மம்மர் அறுக்கும் மருந்தாக விளங்கும். இத்தகைய கல்வி அழகே அழகு” என்று கற்றறிந்தார் போற்றுவர்.

கற்றல் கேட்டல் உடையார் பெரியர்” என்று பாடுவார் ஞானசம்பந்தர். கற்றலிற் கேட்டலே நன்று” என்பது பழமொழி. ஒருவன் பல நூல்களைக் கற்றல் மட்டும் போதாது. கற்றுணர்ந்த நல்லார் சொல்லக் கேட்டல் வேண்டும். அங்ஙனம் கேட்குங் காலையில்தான் கற்றகல்வி, கருத்து விளக்கம் பெறும். ஐயம் திரிபுகள் மெய்யாகவே அகலும். பலகால் கற்றுணரும் கருத்தொன்றைத் தக்கார் வாயிலாக ஒருகால் கேட்டதுணையானே உள்ளத்தில் பதித்துக் கொள்ளலாம். பல்லாண்டு முயன்று பயின்று உணரும் அரிய உண்மைகளை எல்லாம்  சிறிய கால அளவுக்குள் சிறந்தார்வாய்க் கேட்டலால் எளிதில் தெரிந்து மகிழலாம். இதேைலயே தெய்வப் புலவராய திருவள்ளுவர்,

  • செல்வத்துன் செல்வம் செவிச்செல்வம் அச்செல்வம்

செல்வத்துள் எல்லாம் தலை ” என்று இயம்பியருளினார்.

கேள்வியால் பெறும் அறிவைச் செவிச் செல்வம் என்று போற்றினார் நம் புலவர். அதுவே தலையாய செல்வம் என்றும் குறித்தார். இதனைச் செவி உணவு என்றும் கூறினார். செவியுணவாய கேள்வி அறிவைப் பெற்றவர், அவியுணவைக் கொள்ளும் ஆன்றோராகிய தேவரோடு ஒப்பர் என்று உரைத் தருளினார். தவலரும் தொல் கேள்வித் தன்மை உடையார், தம்முட் கூடி உரையாடி மகிழும் இன்பம் உம்பர் உலகினும் காண இயலாது என்று சொல்லும் நாலடியார். சொல்லின் செல்வராய நல்லார் ஒருவர், தம் காவன்மை சிறக்கச் செந்தேன் ஒழுகக் கேட்பவர் சிங்தை குளிரச் சீரிய பேருரை வழங்குவராயின், மக்கள் மதுவுண்ட வண்டென மயங்கி இருத்தலைக் காண்கின்றோம் அன்ருே அத்தகைய கேள்வி என்னும் செவிக்குணவு இல்லாத போழ்துதான் சிறிது வயிற்றுக்கு உணவு வழங்குதல் வேண்டும் என்பர் வள்ளுவர்.

இத்தகைய கேள்வி அறிவு, கல்வி அறிவைத் தெளிவு படுத்திக் கலைநலத்தை வளமுறுத்தும் வன்மை உடையது. பணிவும் இன்சொல்லும் கனியும் உயர்பண்பை நனிவளர்ப்பது. வாழ்வில் தளர்ச்சி வந்தபோழ்து, அதனை அகற்றி உள்ளக் கிளர்ச்சியினை ஊட்டவல்லது. வழுக்குடைய நிலத்தில் ஊன்று கோல் உதவுமாறுபோல, உறுபயன் விளக்கும் பெருநலம் உடையது அக் கேள்வி. ஆதலின் ‘கற்றிலன் ஆயினும் கேட்க” என்றும், “எனைத்தானும் நல்லவை கேட்க‘ என்றும் வள்ளுவர் வற்புறுத்துவா றாயினர். இத்துணைக் கூறியும் அறியாது வாய்ச்சுவை ஒன்றே கண்டு உண்டு உழலும் மக்களை மாக்கள் என்று பழித்துரைத்தார் நம் புலவர் பெருமான். அவர்கள் இருந்தாலென்ன இறந்தாலென்ன என்று கடிந்து மொழிந்தார்.

செவியிற் சுவையுணரா வாயுணர்வின் மாக்கள்

அவியினும் வாழினும் என்?

என்பது வள்ளுவர் வாய்மொழி. இங்ஙனம் கல்வி கேள்வி அறிவுகளைப் பெற்றவரே உலகத்தோடு பொருந்த ஒழுகுவர். உயர்ந்தோரைப் பின்பற்றி ஒழுகத் தெரியாத மக்கள் எவ்வளவு கல்வியைக் கற்றும் எள்ளளவும் பயனில்லை. பல கற்றும் அறிவிலாதார்” என்றே பழிக்கப் படுவர். “ஊருடன் கூடிவாழ்” என்று சுருங்கச் சொல்லி விளங்க வைத்தார் தமிழ்மூதாட்டியார். ‘ஊருடன் பகைக்கின் வேருடன் கெடும்’ என்றும் கூறினார். ஊருடன் கூடி, உலகுடன் ஒத்து வாழக் கல்வியும் கேள்வியும் உற்ற துணைக்கருவிகளாகும்.

(தொடரும்)

வள்ளுவர் சொல்லமுதம்

வித்துவான் நவநீத கிருட்டிணன்