? 62 . திருவருட்பாவைத் தமிழ்ச்சனாதனம் எனச் சேக்கிழான் என்பவர் கூறுகிறாரே! – இலக்குவனார் திருவள்ளுவன்

(சனாதனம் – பொய்யும் மெய்யும் 60-61 தொடர்ச்சி)
சனாதனம் – பொய்யும் மெய்யும் 62
- ? 62. திருவருட்பாவைத் தமிழ்ச்சனாதனம் எனச் சேக்கிழான் என்பவர் கூறுகிறாரே!
வாடிய பயிரைக் கண்டபோ தெல்லாம்
வாடினேன்; பசியினால் இளைத்தே
வீடுதோ ரறிந்தும் பசியறா தயர்ந்த
வெற்றரைக் கண்டுளம் பதைத்தேன்!
நீடிய பிணியால் வருந்துகின் றோர்என்
நேர்உறக் கண்டுளந் துடித்தேன்;
ஈடின்மா னிகளாய் ஏழைகளாய்நெஞ்
சிளைத்தவர் தமைக்கண்டே இளைத்தேன்!
(திருவருட்பா- 3471)
- இதனைப் பசிக்கொடுமையை நீக்கும் இந்து வாழ்வியல் அறம் என்றும் தமிழ்ச்சனாதனம் என்றும் அதே சேக்கிழான் கூறுகிறாரே!
அற்றார் அழிபசி தீர்த்தல் அஃதொருவன்
பெற்றான் பொருள்வைப் புழி. (திருக்குறள் – 226)
பொருளைச் சேமிக்குமிடம் வைப்பகமோ வங்கியோ வேறு சேமிப்பகமோ அல்ல. ஒன்றுமில்லாதவரின் கொடும் பசியை நீக்குவதே பொருளைச் சேமிக்கும் இடம் என்கிறார் திருவள்ளுவர். இது தமிழ் நெறி. அப்பொழுது இந்து மதம் என்ற ஒன்றே தமிழ்நாட்டில் இல்லை. வேண்டுமென்றே தமிழ் நெறியை ஆரியநெறியாகத் திரிக்கும் ஆரிய வாதிகளின் பொய்க்கூற்றே இது.
அருட் பண்பில் சிறந்து விளங்கியவர் தமிழர். ‘அருளுடைமை’ என ஓர் அதிகாரத்தையே திருவள்ளுவர் வழங்கியுள்ளார்.
அன்பு பெற்ற மகவாகிய அருள் அறியாதவரிடத்தும் அனைத்து உயிர்களிடத்தும் தோன்றுவதாகும்.
“அன்பு தொடர்புடையாரிடத்து காட்டப்படும் பற்று; அருள் என்பது தொடர்பில்லாத பிற உயிர்களிடத்தும் பரந்து செல்லும் கருணை அல்லது இரக்கக் குணம் ஆகும். இது பிற உயிர்களின் துயர் போக்குதல், பிற உயிர்களுக்குத் துன்பம் இழையாமை, பிற உயிர்களைக் கொல்லாமை ஆகிய பண்புகளைக் குறித்து நிற்கும்” என அருள்குறித்துக் குறள் திறன் விளக்குகிறது.
மன்னுயிர் ஓம்பி அருளாள்வாற்கு இல்என்ப
தன்னுயிர் அஞ்சும் வினை (திருக்குறள் 244)
என்கிறார் திருவள்ளுவர்.
எல்லா உயிர்களையும் பேணும் அருளாளனாக இருக்கத் திருவள்ளுவர் வலியுறுத்துகிறார்.
பயிர்களுக்கும் உயிர் உண்டு எனத் தொல்காப்பியர் காலத்திற்கு முன்பே தமிழ்மக்கள் உணர்ந்திருந்ததைத் தொல்காப்பியம் உணர்த்தும். எனவே, உயிர் என்பது மக்கள் உயிரையும் விலங்கின பறவையின உயிரையும் மட்டுமல்லாமல் பயிர் உயிரையும் குறிக்கும்.
ஓருயிருக்குத் துன்பம் நேரும் பொழுது அதனைத் தனக்கு ஏற்பட்ட துன்பமாகக் கருதி அருளுள்ளம் கொண்டு கலங்குவர் உயிர்களை நேசிப்பவர்கள் என அறிஞர்கள் விளக்குவர்.
உடாஅ, போரா ஆகுதல் அறிந்தும், 10
படாஅம் மஞ்ஞைக்கு ஈத்த எம் கோ,
கடாஅ யானைக் கலி மான் பேகன்,
என மயிலுக்குப் போர்வை கொடுத்த வையாவிக் கோப்பெரும் பேகன் பாராட்டும் உலகம் முல்லைக்குத் தேர் கொடுத்த பாரியையும் குறித்துப் பாராட்டியுள்ளது.
“சுரும்பு உண நறுவீ யுறைக்கு நாக நெடுவழிச்
சிறுவீ முல்லைக்குப் பெருந்தேர் நல்கிய
பிறங்குவெள் ளருவி வீழுஞ் சாரற்
பறம்பிற் கோமான் பாரி“
எனச் சிறுபாணாற்றுப்படையில் இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் குறிப்பிடுகிறார்.
படர்வதற்குக் கொழுகொம்பின்றி வாடிய முல்லை கொண்டு வருந்திய மன்னன் பாரி, தான் வந்த தேரையே அம்முல்லைக்கொடிக்கு வழங்கியதை வரலாறு சொல்கிறது.
“கண் மூடிப் பழக்கம் எல்லாம் மண் மூடிப் போக”
எனச் சனாதனத்திற்கு எதிராகக் குரல் கொடுத்த வள்ளலார் இராமலிங்க அடிகளைச் சனாதனவாதியாகக் கூறுவது கொடுஞ்செயலாகும்.
வழி வழி வரும் தமிழ் மரபின் அடிப்படையிலேயே வள்ளலார், வாடிய பயிரைக் கண்ட பொழுதெல்லாம் வாடும் தன் வேதனையைத் தெரிவிக்கிறார். இதனைச் சனாதனமாகச் சொல்வது அறிவின்மையா? அல்லது மெய்யின்மையா? என்பதை மக்கள் உணர்வர். இதனைத் தமிழ் கூறும் சனாதனம் என்பார் கடைந்தெடுத்த கயமைத்தன்மை மிக்கவர் என்பதன்றி வேறென்ன சொல்வது?
சனாதனம் பிராமணருக்குப் பிச்சை அளித்தால் புண்ணியம்; மேலுலகம் கிடைக்கும் என்றும் பிற வருணத்தாருக்குப் பிச்சை இட்டால் மேலுலகம் கிடைக்காது; நரகம் கிடைக்கும் என்றும் கூறுகிறது.
வேறுபாடின்றிப் பசித்தோரின் பசியாற்றச் சொல்லும் தமிழ் நெறிக்கும் அதனை வலியுறுத்தும் வள்ளலாருக்கும் சனாதனத்திற்கும் தொடர்பு இல்லையே.
மேலும், இந்த வருணாசிரமத்திற்கு எதிராகத்தான் – சனாதனத்திற்கு எதிராகத்தான் – திருவள்ளுவர்
நல்லாறு எனினும் கொளல்தீது மேலுலகம்
இல்லெனினும் ஈதலே நன்று. (திருக்குறள் 222)
என்கிறார்.
(தொடரும்)
இலக்குவனார் திருவள்ளுவன்
சனாதனம் – பொய்யும் மெய்யும் பக். 87-90
Leave a Reply