தொல்காப்பிய விளக்கம் – 11 (எழுத்ததிகாரம்)

  தொல்காப்பியச் செம்மல் பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனார்

(பங்குனி 23, தி.ஆ.2045 / 06, ஏப்பிரல் 2014 இதழின் தொடர்ச்சி)

 ‘வல்லின மெல்லினமாறுகை’ (Convertablilty of surds and sounds) பழந்தமிழில் இல்லையென்பார் இந்நூற்பாவின் பொருளை நோக்குதல் வேண்டும். ஒலிப்பு வகையான் எழுத்தொலி சிறிதளவு மாறுபடுவதைக் கண்ட ஆசிரியர் தொல்காப்பியர், ஐயம் அறுத்தற்காகவே இந்நூற்பாவை இயற்றியுள்ளார்.

  ஒலிப்பு வகையான் எழுத்தொலி சிறிது மாறுபடினும் எழுத்துகள் வல்லினம், மெல்லினம், இடையினம் என்று கூறப்பட்ட தம் இயல்புகளில் மாறுபடா என்பதே இதன் பொருள்.

54. அகரம் இகரம் ஐகாரம் ஆகும்.

  அகரம் இகரம் = அகரமும் இகரமும் சேர்ந்து ஐகாரம் ஆகும் = ஐகாரம் போன்று ஒலிக்கும்.

காட்டு : ஐயர் = அஇயர்

55. அகரம் உகரம் ஔகாரமாகும்.

அகரம் உகரம் = அகரமும் உகரமும் சேர்ந்து  ஔகாரமாகும்= ஔகாரம் போன்று ஒலிக்கும்.

காட்டு ஔவை = அஉவை

  இவ்விரண்டு (54, 55) நூற்பாக்களையும் பிராகிருத மொழியில் உள்ள நூற்பாக்களைத் தழுவியன என்பார் வையாபுரியார். (History of Tami language and Literature, Page 68)

  ஆசிரியர் தொல்காப்பியர், தமிழ் மொழியில் பயின்ற எழுத்துகளின் ஒலி நுட்பம் கண்டு கூறியுள்ள பெரும்புலவராவார். ‘பிராகிருதம்’ என்பது வட இந்தியர்களின் பேச்சுமொழியாகும். ஆரியம் வருவதற்குமுன் தமிழே பரதகண்டம் முழுவதும் பயின்ற மொழியாகும். ஆரியம் வந்தபின்னர் ஆங்கு வழங்கிய தமிழ் ஆரியக் கலப்பால் பலமொழிகளாகச் சிதைவுற்றது. அவற்றுள் ஒன்றே பிராகிருதம். ஆரியம் புலவர் மொழியாகவும், பிராகிருதம் பொதுமக்கள் மொழியாகவும் உருப்பெற்றன. ஆகவே தமிழிலும் பிராகிருதத்திலும் பல ஒற்றுமையியல்புகள் காணப்படலாம். அவ்விதம் காணப்படுமேல் அவ்வியல்பு தமிழினின்று பிராக்கிருதத்துக்குச் சென்றதாகக் கொள்ள வேண்டுமேயன்றி, அதற்கு மாறுபாடாகக் கருதுதல் கூடாது.

  வையாபுரியார் தமிழின் சிறப்பியல்புகளுக்கு மூலம் பிற மொழிகளில் தேடும் இயல்புடையார். ஆதலின் அவர் கூற்று தள்ளற்பாலதாகும்.

56. அகரத்து இம்பார் யகரப் புள்ளியும்

      ஐஎன் நெடுஞ்சினை மெய்பெறத் தோன்றும்.

அகரத்து இம்பர் = அகரத்தின் பின்னர், யகரப் புள்ளியும் = இகரமேயன்றி யகர மெய்யும், ஐஎன் நெடுஞ்சினை = ஐ என்ற நெட்டெழுத்தாம், மெய்பெறத்தோன்றும் = வடிவுபெறத் தோன்றும்.

காட்டு: ஐயர் = அய்யர்

‘அகரத்து இம்பர் வகரப் புள்ளியும்

ஔ என் நெடுஞ்சினை மெய்பெறத் தோன்றும்’ என நூற்பா ஏடு பெயர்த்து எழுதுவோரால் விடப்பட்டிருத்தல் வேண்டும். அதனால் உரையாசிரியர்கள் ‘மெய்பெறத்தோன்றும்’ என்றதனால் அகரத்தின் பின்னர் வகரப்புள்ளி சேர்ந்த ஔகாரமாகும் என்றனர்.

காட்டு: ஔவை= அவ்வை.

57. ஓரளபாகும் இடனுமா ருண்டே

   தேருங்காலை மொழிவயினான.

தேருங்காலை = ஆராயுமிடத்து, மொழிவயினான = சொற்களின் கண், ஓரளபாகும் = ஐ, ஔ, ஓரளபாக ஒலிக்கும். இடனுமாருண்டே = இடனும் உண்டு.

இரண்டு மாத்திரையுள்ள ‘ஐ’யும் ‘ஔ’வும் ஒரு மாத்திரையாகச் சில இடங்களில் ஒலிக்கும் என்பதாம்.

58. இயகரம் யகரம் இறுதி விரவும்.

இறுதி = சொல்லின் இறுதியில், இகரம் யகரம் = இகரமும் யகரமும் விரவும் = ஒன்று நிற்குமிடத்தில் இன்னொன்று வரும்.

காட்டு: நாய் = நாஇ

59. பன்னீர் உயிரும் மொழிமுதலாகும்.

பன்னீர் = பன்னிரண்டு, உயிரும் = உயிர் எழுத்துக்களும், மொழி முதல் ஆகும் = சொற்களுக்கு முதலாக ஆகிவரும்.

60. உயிர்மெய் அல்லன மொழிமுதல் ஆகா.

உயிர்மெய் அல்லன = உயிரோடு சேர்ந்துவரும் மெய் எழுத்துக்கள் அல்லாத தனிமெய் எழுத்துக்கள், மொழிமுதல் ஆகா = சொற்களுக்கு முதல் எழுத்துக்களாக வாரா.

  தமிழில் மெய் எழுத்து மொழிக்கு முதலாகி வராது. உயிரோடு சேர்ந்து உயிர்மெய்யாகத்தான் வரும். வடமொழி ஆங்கிலம் முதலிய மொழிகளில் மெய்யும் மொழிக்கு முதலாகிவரும். ‘ஸ்தலம்’ என்ற வடசொல்லில் ‘ஸ்’ என்பதும் ‘Stand’ என்ற ஆங்கிலச் சொல்லில் ‘S’ என்பதும் வந்துள்ளமை காண்க. மெய் எழுத்தை முதலாக உடைய வேற்றுமொழிச் சொற்களைத் தமிழில் எழுத நேரிட்டால் மெய்யை விட்டு விட வேண்டும். அல்லது மெய்யுடன் உயிர் சேர்த்து எழுதுல் வேண்டும்.

காட்டு: ஸ்தலம் = தலம்

Clive = கிளைவ்.

(தொடரும்)

குறள்நெறி  ஆனி 2, தி.பி.1995 / 15.06.64