இந்த அரைநூற்றாண்டு காலமாக, மாறி மாறி அதிகாரப் பீடத்தில் ஏறிய சிங்கள இனவாதக் கட்சிகள் ஈழத் தமிழினத்தின் துயர் துடைக்க இதுவரை சாதித்தது என்ன?

தமிழர்களின் முறையான கோரிக்கை எதுவும் நிறைவேற்றப்பட்டதா?

தீப்பற்றி எரியும் தமிழரின் தேசியச் சிக்கலுக்கு தீர்வுகாணப்பட்டதா?

ஒன்றுமே நடக்கவில்லை.

மாறாக, இந்த நீண்ட காலவிரிப்பில், தமிழர்கள் மீது, துன்பத்தின் மேல் துன்பமாக, தாங்கொணாத் துயரப்

பளு மட்டுமே சுமத்தப்பட்டு வந்தது.

தமிழரின் நிலத்தைக் கவர்ந்து, தமிழரின் மொழியைப் புறக்கணித்து, தமிழரின் கல்வி, வேலைவாய்ப்பு

உரிமைகளை மறுத்து, தமிழரின் தேசிய வளங்களை அழித்து, தமிழரின்  குமுகாய, பொருளாதார வாழ்வைச்

சீரழித்து, தமிழர்களைப் பெரும் எண்ணிக்கையில் பேரழிவை மட்டுமே சந்திக்கச் செய்தது.

இந்த அழிவுப் பாதையைத் தேர்ந்தெடுத்து நிற்பது, சிங்களப் பேரினவாதிகளேயன்றி, நாமல்ல.

இராணுவ அடக்குமுறைக் கொள்கையால் சிங்களத் தேசம் தன்னைத்தானே அழித்துக்கொண்டிருக்கிறதே தவிர தமிழினத்தின்  விடுதலை எழுச்சியை அதனால் அழித்துவிட முடியாது. இந்த உண்மையைச் சிங்களப் பேரினவாதம் என்றோ ஒரு நாள் உணர்ந்தே தீரும். ஆயினும் இராணுவ வன்முறைப் பாதையைக் கைவிட்டு, சிங்களம் தமிழ் மக்களுக்கு நீதி வழங்குமென நாம் எதிர்பார்க்கவில்லை. அந்த எதிர்பார்ப்புடன் நாம் எமது விடுதலைப் போராட்டத்தைத் தொடங்கவில்லை.

தேச விடுதலை என்பது எதிரியால் வழங்கப்படும் சலுகையல்ல. அது, இரத்தம் சிந்தி, உயிர்விலை கொடுத்து, போராடிப் பெறவேண்டிய  தூய உரிமை.

எனவே, நாம் எமது விடுதலை இலட்சியத்தை அடைய தொடர்ந்து போராடுவோம்.

          மாவீரர் நாள் உரை 1997

எம் தலைவர் பிரபாகரன்

நீதியும்  வாய்மையும் தமிழர் பக்கமாகவே நிற்கின்றன. தமிழர்கள் வேண்டுவனவெல்லாம் தமக்கு உரித்தான

உரிமைகளேயன்றி வேறொன்றுமல்ல. அரசிய லறம் தமிழர்களுக்குச் சார்பாகவே இருக்கிறது.

நாம் எதனைக் கேட்கிறோம்? எதற்காக நாம் போராடி வருகிறோம்?

நாம் எமது மண்ணில், வரலாற்று அடிப்படையிலான  எமக்குச் சொந்தமான நிலத்தில், நாம் பிறந்து வாழ்ந்த

எமது தாயகப் பூமியில், நாம்  அமைதியாகமதிப்பாக, எவரது தலையீடுமின்றிக் கட்டுப்பாடற்று  உரிமையுடன்  வாழ்வதற்கு விரும்புகிறோம். நாமும் மனிதர்கள், மனிதர்களுக்கான அடிப்படை உரிமைகளைக் கொண்ட ஒரு மனித மன்பதை. தனித்துவமான மொழியையும், பண்பாட்டு வாழ்வையும், வரலாற்றையும் கொண்ட  ஒரு தனித்துவமான இனத்தைச் சார்ந்த மனிதர்கள் நாம். எம்மை ஒரு மனிதக் குமுகாயமாக, தனித்துவப் பண்புகளைக் கொண்ட மக்களாக ஏற்குமாறு கேட்கிறோம்.

எமது அரசியல் வாழ்வை நாமே தீர்மானித்துக்கொள்ளும் உரிமை எமக்குண்டு. இந்த உரிமையின் அடிப்படையில் நாமே எம்மை ஆளும் வகையில்  ஓர் ஆட்சிமுறையை அமைத்து வாழவே நாம் விரும்புகிறோம்.

இதைத்தான் எமது மக்கள் கேட்கிறார்கள். இதற்காகவே எமது மக்கள் போராடி வருகிறார்கள். இந்த நயன்மையான(நியாயமான), நாகரிகமான  வேண்டுகோளைச் சிங்களத் தேசம் மறுத்துக், கடுமையாக எதிர்த்து வருகிறது. இந்த நீதி முறையான வேண்டுகோளுக்காகச் சிங்கள ஆட்சியதிகாரம் எமது மக்களைத் துன்புறுத்தி வருகிறது.

கொடுமைப்படுத்தி வருகிறது; கொன்றொழித்து வருகிறது. எமது மக்களை அரவணைத்து, இணைத்து வாழவும் விரும்பாமல், பிரிந்துசென்று தனித்து வாழவும் விடாமல், எமது மக்களை அடிமைப்படுத்தி ஒழித்துக் கட்டவே சிங்கள அரசுகள் முனைந்தன. எனவேதான், அன்று தொட்டு இன்றுவரை ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக, நாம் போராடி வாழத் தள்ளப்பட்டோம். வரலாற்றின் கட்டாயங்களுக்கு ஏற்ப எமது போராட்ட வடிவங்கள் மாறிய போதும், எமது உரிமைகளுக்கான எமது  விடுதலை வாழ்விற்கான போராட்டம் தொடர்கிறது. இப் போராட்டம் வளர்ந்து விரிந்து இன்று இருதேசங்கள் மத்தியிலான போராகப் பேயுருவம் பெற்றிருக்கிறது.

இலங்கைத் தீவு இன்னும் வன்முறையின் கொப்பரையாக எரிந்து கொண்டிருக்கிறது என்றால், இதற்குக் காரணமாக விளங்குவது, சிங்கள-பௌத்த இனவாதத்தின் தமிழர்  பகைப் போக்கன்றி வேறொன்றுமல்ல.

தமிழர் தேசம் போரையும் வன்முறையையும் விரும்பவில்லை. அமைதி வழியில்  இன்னாசெய்யாமை வழியில் அறத்தை வேண்டி நின்ற எமது மக்கள் மீது வன்முறையைத் திணித்தவர்கள் யார்?

நாம் எமது உயிரையும் உடமைகளையும் பாதுகாக்க ஆயுதமேந்திப் போராட வேண்டியக் கட்டாயச்  சூழ்நிலையை உருவாக்கிவிட்டவர்கள் யார்?

சிங்கள- பௌத்த தீவிரவாதமே தமிழர்களை ஆயுதபாணிகளாக்கித் தேச விடுதலைப் போராட்டத்தில் குதிக்க வைத்தது.

          மாவீரர் நாள் உரை 1998

(தொடரும்)