தொல்காப்பிய விளக்கம் 15 – பேராசிரியர் சி. இலக்குவனார்
(சித்திரை 21, தி.ஆ.2045 / 06, மே 04, 2014 இதழின் தொடர்ச்சி)
3. பிறப்பியல்
தமிழ் மொழிக்குரிய எழுத்தொலிகளைப் பற்றியும் அவை பயிலு மாற்றையும் முன் இரு இயல்களில் ஆசிரியர் தொல்காப்பியர் கூறினார். இனி அவை தோன்றும் முறை பற்றிக் கூறத் தொடங்குகின்றார். எழுத்தொலிகள் பிறக்கும் முறைபற்றி மேலை நாட்டு மொழி நூலார்களும் இந்நூற்றாண்டில் கூறத் தொடங்கியுள்ளனர். எழுத்துகளின் பிறப்பிடங்களைக் கொண்டே எழுத்துகளை, மிடற்றினம், பல்லினம், இதழினம், அண்ண இனம் என்றெல்லாம் பெயரிட்டுள்ளனர். ஆசிரியர் தொல்காப்பியர் அவ்வாறு பெயரிடாது போயினும், அவர் எழுத்தொலிகள் பிறக்கும் முறையைக் கூறும் பான்மை, மேலைநாட்டு மொழி நூற்புலவர்களின் பிறப்பியல்முறைக் கூற்றை ஒத்துள்ளமை அறிந்து மகிழத்தக்கது.
சில நூற்பாக்களில் கூறப்பட்டுள்ளவை வடமொழி நூற்களில் கூறப்பட்டுள்ளவற்றோடு ஒத்திருப்பது கண்ட சிலர், ஆசிரியர் தொல்காப்பியர் வடமொழி நூல்களைத் தழுவித்தான் எழுதியுள்ளார் என்று கருதிவிட்டனர். அண்மைக்காலத்தில் தோன்றியுள்ள மேலைநாட்டு மொழி நூற்போக்கை ஒத்திருப்பதனால், இனி மேலை நாட்டு மொழி நூற்களைத் தழுவித்தான் ஆசிரியர் தொல்காப்பியர் எழுதியுள்ளார் என்று கூறுவர் போலும். ஆகவே தொல்காப்பியர் அவர் தம் காலத்துக்குப் பிற்பட்டுத் தோன்றிய வடமொழி நூற்களைத் தழுவி எழுதியுள்ளார் என்பது உண்மைக்கு மாறுபட்டதாகும்.
எல்லா எழுத்துகளும் பிறக்கும் முறை
83. உந்தி முதலா முந்து வளி தோன்றித்
தலையினும் மிடற்றினும் நெஞ்சினும் நிலைஇப்
பல்லும் இதழும் நாவும் மூக்கும்
அண்ணமும் உளப்பட எண்முறை நிலையான்
உறுப்புற்று அமைய நெறிப்பட நாடி
எல்லா எழுத்தும் சொல்லுங் காலைப்
பிறப்பின் ஆக்கம் வேறு வேறு இயலத்
திறப்படத் தெரியும் காட்சியான.
உந்தி முதலா = கொப்பூழ் அடியாக, முந்துவளி தோன்றி = முற்படுகின்ற காற்றுப் புறப்பட்டு, தலையினும், மிடற்றினும், நெஞ்சினும், நிலைஇ = தலையினும் கழுத்தினும் நெஞ்சினும் நிலைபெற்று, பல்லும் இதழும் நாவும் மூக்கும் அண்ணமும் = பல், உதடு, நாக்கு, மூக்கு மேல்வாய், உளப்பட = முதலியன அடங்க, எண்முறை நிலையான் = எட்டு வகைப்பட்ட நிலைமையினையுடைய, உறுப்புற்று = உறுப்புகளைப் பொருந்தி, அமைய = உண்டாக, நெறிப்பட நாடி = ஒழுங்கு பட ஆராய்ந்து, எல்லா எழுத்தும் = எல்லா எழுத்துகளைப் பற்றியும், சொல்லுங்காலை = பிறப்புமுறை சொல்லுமிடத்து, பிறப்பின் ஆக்கம் = பிறப்பின் தோற்றங்கள், வேறு வேறு இயல = பல்வகையாக உண்டாக, திறப்படத் தெரியும் காட்சியான = அறிவால் கூறுபட விளங்கும்.
கொப்பூழ் அடியில் தோன்றும் காற்று நெஞ்சு, மிடறுதலைவழியாகச் செல்லும், உதடுகள், பற்கள், நாக்கு, மூக்கு மேல்வாய் முதலியவற்றில் பொருந்தும். ஒவ்வொரு எழுத்தும் ஒவ்வொரு வகையாகத் தோன்றும். எழுத்தொலி ஆராய்ச்சியறிவுமிக்கோர்க்கு ஒவ்வொரு எழுத்தொலி முறையும் கூறுபட விளங்கும்.
உயிர் எழுத்துக்கள் பிறக்கும் முறை.
84. அவ்வழிப்
பன்னீருயிரும் தந்நிலை திரியா
மிடற்றும் பிறந்த வளியின் இசைக்கும்
அவ்வழி = மேற்கூறிய முறையில், பன்னீருயிரும் = பன்னிரண்டு உயிர்களும், தந்நிலைதிரியா = தத்தம் நிலைமையில் மாறுபடாதனவாய், மிடற்றுப் பிறந்த = குரல் வளையில் தோன்றிய, வளியின் = காற்றால், இசைக்கும் = ஒலிக்கும்.
பன்னிரண்டு உயிர் எழுத்துகளும் பொதுவாகக் குரல் வளையில் தோன்றும் என்பதாம்.
85. அவற்றுள்.
அ, ஆ, ஆயிரண்டு அங்காந்து இயலும்.
அவற்றுள் = மேற்கூறப்பட்ட உயிர் எழுத்துகள் பன்னிரண்டனுள், அ, ஆ, இரண்டு = அ, ஆ, எனப்படும் அவை இரண்டும், அங்காந்து = வாயைத் திறந்து கூற, இயலும் = பிறக்கும்.
அ, ஆ, இரண்டையும் ஒலிப்பதற்கு வாயைத் திறத்தலே போதுமானது.
86. இ, ஈ, எ.ஏ, ஐ யென இசைக்கும்
அப்பால் ஐந்தும் அவற்றோரன்ன
அவைதாம்,
அண்பல், முதல்நா, விளிம்புறல் உடைய.
இ, ஈ, எ, ஏ, ஐ என இசைக்கும் = இ, ஈ, எ, ஏ, ஐ என்று ஒலிக்கும், அப்பால் ஐந்தும் = அப்பகுதிப்பட்ட ஐந்து எழுத்துக்களும், அவற்றோரன்ன = மேற்கூறப்பட்ட அ, ஆ வைப்போன்ற வாயைத் திறக்க உண்டாகும். எனினும், அவைதாம்= அவ்வைந்தும், அண்பல் = பல்லினடியும், முதல்நாவிளிம்பு = அடிநா ஓரமும், உறல் உடைய = பொருந்தப் பிறக்கும் தன்மையன.
87. உ, ஊ, ஒ, ஓ ஔ என இசைக்கும்
அப்பால் ஐந்தும் இதழ் குவிந்து இயலும்
உ, ஊ, ஒ, ஓ, ஒள என = உ, ஊ, ஒ, ஓ, ஔ என்று சொல்லப்பட்ட, இசைக்கும் = ஒலிக்கும், அப்பால் ஐந்தும் =அக்கூற்றுப்பட்ட ஐந்து எழுத்துகளும், = இதழ் குவிந்து = உதடுகள் குவித்துக் கூற, இயலும் = பிறக்கும்,
இவற்றை ஒலிப்பதற்கு வாயைத் திறத்தலோடு உதடுகளையும் குவித்தல் வேண்டும்.
(தொடரும்)
Leave a Reply