(இலக்குவனாரின் ‘பழந்தமிழ்’ – 29 தொடர்ச்சி)

‘பழந்தமிழ்’ – 30

  தமிழில் தொல்காப்பியர் காலம்வரை  இன்ன இடைநிலைகள் இன்ன காலத்தை உணர்த்தும் என்ற வரையறை ஏற்படாமல் இருந்திருக்கலாம். பழந்தமிழில் சொற்களெல்லாம் ஓரசை, ஈரசை உடையனவாகவே இருந்தன. அவற்றுடன் துணை வினை சேர்ந்து காலம் அறிவித்தன. த் இறந்த காலத்தையும், உம் நிகழ் காலத்தையும் எதிர்காலத்தையும், வ், ப் எதிர்காலத்தையும், இன் அல்லது இ இறந்தகாலத்தையும், பகுதி இரட்டித்தலால் இறந்த காலத்தையும் வெளிப்படுத்தியுள்ளமை பழந்தமிழ் இலக்கியங் களாலும் தொல்காப்பியத்தாலும் அறியலாம். நிகழ்காலத்தை அறிவிக்கின்ற கிறு, கின்று, ஆநின்று ஆகிய இடைநிலைகள் பழந்தமிழில் பயின்றிடக் காணோம்.

  தன்மை, முன்னிலை, படர்க்கை ஆகிய இடங்களையும் ஒருமை பன்மைகளையும்,அறிவிக்கும் விகுதிகளைத் தொல்காப்பியர் குறிப்பிட்டுள்ளார்.

  தன்மைப் பன்மையை அறிவிப்பன  அம், ஆம், எம், ஏம், கும், டும், தும், லும், என்பனவாம்.

  தன்மை ஒருமையை அறிவிப்பன கு, டு, து, று, என், ஏன், அல் என்பனவாம்.

  படர்க்கையில் உயர்திணைப் பன்மையை அறிவிப்பன அர், ஆர், ப என்பனவாம்.

 படர்க்கையில் உயர்திணை ஆண் ஒருமையை அறிவிப்பன அன், ஆன் என்பன; பெண் ஒருமையை அறிவிப்பன அள், ஆள் என்பன  படர்க்கையில் அஃறிணைப் பன்மையை அறிவிப்பன அ,ஆ,வ என்பனவாம்; அஃறிணை ஒருமையை அறிவிப்பன து, று, டு என்பனவாம்.

 முன்னிலையில் உயர்திணை அஃறிணை வேறுபாடு கொண்டிலர். ஆகவே முன்னிலை விகுதிகள் இரு திணைக்கும் பொதுவாய் நின்றன. ஒருமையை இ, ஐ, ஆய் என்ற விகுதிகளும், பன்மையை இர், ஈர், மின்  என்ற விகுதிகளும் அறிவித்து நின்றன. மார் என்னும் விகுதி படர்க்கைப் பலர்பாலில் வந்துள்ளது. அது தானே நின்று முடியாது வினையைக்கொண்டு முடிந்துள்ளது.1

 யார் என்பது ஆண், பெண், பலர் எனும் உயர்திணை முப்பாற்கும் உரியது.

 எவன் என்பது ஒன்று, பல எனும் அஃறிணை இருபாற்கும் உரியது.

  வினை முற்றி நில்லாது எச்சமாக நிற்றலும் உண்டு. எச்சமாக நிற்பது பெயரையோ வினையையோ கொண்டு முடியும். அவை பெயர் எஞ்சு கிளவி என்றும்,  வினை எஞ்சு  கிளவி என்றும் அழைக்கப்பட்டன.

  பெயர் எச்ச வாய்பாடுகளையும் வினை எச்ச வாய்பாடுகளையும் தொல்காப்பியர் குறிப்பிட்டுள்ளார்.

  வியங்கோள்வினை தொல்காப்பியர்  காலம் வரையில் படர்க்கைக்கே உரியதாய் இருந்துள்ளது2

++++

1  எள்ளுமார் வந்தார் ;   கொள்மார் வந்தார்

2   அவற்றுள்

   முன்னிலை தன்மை ஆயீ  ரிடத்தும்

   மன்னா தாகும் வியங்கோள் வினை (தொல்.சொல்.226)

++

  நிகழ்காலத்தை அறிவிக்கும் செய்யும் என்னும் வாய்பாட்டு வினைமுற்று, படர்க்கைப் பலர்பாலிலும் தன்மை முன்னிலை களிலும் பயின்றிலது.

   வினைகளைச் சினை வினை என்றும் முதல் வினை என்றும் பகுத்திருந்தனர். சினையின் தொழிலை அறிவிக்கும்கால் சினை வினையாகவும், முதலின் தொழிலை அறிவிக்கும்கால் முதல் வினையாகவும் கருதப்படும்.

  கை முறிந்தது; கை முறிந்தான்.  இவற்றுள் முறிந்தது சினை வினை; முறிந்தான் முதல் வினை.

  வினையெச்சங்கள் பல ஒரு தொடரில் வந்து ஒரு முற்றுவினையைக் கொண்டு முடியலாம்.

  உண்டு, தின்று, படுத்து, ஓடி, பாடி, வந்தான். செய்யும் எனும் வாய்பாட்டுப் பெயரெச்சம் செய்ம் எனவும் வரும். போகும் குதிரை என்பதைப் போம் குதிரை என்றும் கூறலாம்.

 செய்து என்னும் வாய்பாட்டு இறந்த காலம் எதிர்காலத்தைக் கொண்டும் முடியும்: உண்டு வருவாய்.

 நடக்க இருப்பனவற்றையும், நடக்கின்றவற்றையும் விரைவுப் பொருளை வெளிப்படுத்த விரும்பினால் நடந்ததுபோல் இறந்த காலத்தில் கூறலாம். உண்ண அமர்ந்திருக்கும் ஒருவன், Esnz தொடங்குவதற்கு முன்பே உண்டுவிட்டேன் என்றலும், உண்ணுகின்றேன் என்றலும் விரைவு கருதிக் கூறப்படுகின்றனவாம்.

 மூன்று காலத்தும் நிலைத்துள்ள பொருள்களைப் பற்றிக் கூறுங்கால் நிகழ்காலத்துச்  சொல்லால் சொல்லுதல் மரபு. உலகப் பொது உண்மைகளை விளக்குங்கால் நிகழ்காலத்தால் சொல்லுதல் மரபாகும்.

 உழைப்பு உயர்வு தரும்: தரும் என்பது தொல்காப்பியர் காலத்தில் நிகழ்காலத்தை அறிவித்தது. இப்பொழுது எதிர்காலமாகக் கருதப்படுகின்றது.

  இயல்பாக நிகழக்கூடிய ஒன்றையும் உறுதியாக நிறைவேறக் கூடிய ஒன்றையும் கூறப்புகுங்கால் எதிர்காலத்துக் குரியதாய் இருப்பினும் இறந்தகாலத்துச் சொல்லாலும், நிகழ்காலத்துச் சொல்லாலும் சொல்லுதல் பொருந்தும்.

  திருடர்கள் மிகுந்த காட்டினுள் செல்லவிருக்கும் ஒருவனை நோக்கி இக் காட்டினுள் போனால் உடைமைகளை இழந்தாய்; இழக்கின்றாய் என்று கூறுதல் பொருந்தும். நஞ்சுண்டால் செத்தான்; சாகின்றான் என்பதும் இலக்கண நெறிக்கு ஒத்ததே.

  செய்யப்பட்ட ஒன்று செய்ததாகக் கூறும் மரபு தமிழில் தொல்காப்பியர் காலத்துக்கு முன்பிருந்தே வருகின்றது.

        செயப்படு பொருளைச் செய்தது போலத்

        தொழிற்படக் கிளத்தலும் வழக்கியன் மரபே

        (தொல்காப்பியம், சொல். 216)

எழுதிய எழுத்து, பேசிய பேச்சு, நடித்த நாடகம், மெழுகிய திண்ணை. இவை எழுதப்பட்ட எழுத்து, பேசப்பட்ட பேச்சு, நடிக்கப்பட்ட நாடகம், மெழுகப்பட்ட திண்ணை என்னும் பொருளைத் தரும். இவ்வாறு கூறுதலால் செயப்பாட்டு வினை தமிழில் இடம் பெற்றிலது என்று கருதிவிடுதல் கூடாது. தொல்காப்பியர் பல இடங்களில் செயப்பாட்டு வினையைப் பயன்படுத்தியுள்ளார். அன்றியும் தொழிற்படக் கிளத்தலும் என்ற உம்மையால் செயப்பாட்டு வினை உண்மையையும் அறிவித்துள்ளார். செயப்பாட்டு வினையால் கூறாமல் சில இடங்களில் செய்வினையால் கூறுவதால் எளிமையும் இனிமையும் தோன்றும்.

  பெயரும் வினையும் உருவாகிக் கருத்தை வெளிப்படுத்துதற்குத் துணையாய் இருப்பன இடைச்சொற்கள் எனப்பட்டன. தாமாக நின்று பொருள் உணர்த்திய சொற்களே காலப்போக்கில் தம் தனித்தன்மையை இழந்துவிட்டன.

(தொடரும்)

பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனார், பழந்தமிழ்