ஒரு போரால் மட்டுமே தோற்று விடுவதில்லை…2/2 – புகழேந்தி தங்கராசு
2/2
தமிழர் தாயகத்தைக் காப்பது…
தமிழ் தேசிய அடையாளங்களைக் காப்பது…
தமிழரின் தன்னாட்சி உரிமையை மீட்பது…
இவைதாம் பிரபாகரன் என்கிற அப்பழுக்கற்ற மனிதனின் நோக்கங்களாக இருந்தன. சிங்களக் குமுகாயத்தை அழித்து ஒழிப்பது எந்தக் காலத்திலும் புலிகளின் நோக்கமாக இருந்ததில்லை. தமிழ்க் குமுகாயத்தின் மானத்தை மீட்பதென்கிற பெயரில், அடுத்தவரின் மானத்துக்குக் கறை ஏற்படுத்துகிற செயலில் பிரபாகரனின் தோழர்கள் ஒருபோதும் ஈடுபட்டதில்லை.
வெற்றி பெற்ற போர்முனை ஒன்றில், உணர்ச்சிவயப்பட்ட நிலையில் சிங்களத் தேசியக் கொடியை எரித்த போராளிகளைக் கடுமையாகக் கண்டித்த பிரபாகரனின் நேர்மையைப் புரிந்தும் புரியாதவர்களாகப் பன்னாட்டுக் குமுகம் (சமூகம்) நடந்து கொண்டது ஏன் என்கிற கேள்வி இன்றைக்கும் எழுப்பப்பட்டு வருகிற, இதுவரை பதிலளிக்கப்படாத கேள்வி.
இந்திய அமைதிப்படை என்கிற பெயரில் இலங்கைக்கு வந்த சாத்தானின் படையில் யாழ்ப் பகுதித் தளபதியாக இருந்த துணைநிலைத்தளபதி(இலெப்டினன்ட் செனரல்) சர்தேசு பாண்டே (Lieutenant General S.C. Sardesh Pande), பின்னாளில் எழுதிய நூலில் விடுதலைப் புலிகள் குறித்துத் தெரிவித்த கருத்தை இந்தச் சமயத்தில் நினைவுகூர வேண்டியிருக்கிறது. அது மனச்சான்றுள்ள மனிதர் ஒருவரின் வாக்குமூலம்.
“விடுதலைப் புலிகளின் கட்டுப்பாடு, எதற்கும் தம்மைக் காணிக்கையாக்கும் தன்மை, உறுதி, குறிக்கோளில் தெளிவு, தொழில்நுட்ப அறிவு… இவற்றுக்காக அவர்களைப் பெரிதும் மதிக்கிறேன்!…
தமிழரிடையே நிலவும் உணர்வலைகளின் எதிரொளிப்பே புலிகள்… அந்த உணர்வலைகள் தணியாத வரை புலிகளை அழிக்க முடியாது. இந்தக் கருத்துடனேயே யாழ்ப்பாணத்திலிருந்து திரும்பினேன்…..“
சந்தேசு பாண்டேவைப் போலவே, மனச்சான்றுள்ள ஒவ்வொருவரும் விடுதலைப் புலிகள் என்கிற தாயக விடுதலைப் போராளிகளின் போர் ‘அறம் சார்ந்த போர்‘ என்பதை அறிந்தே வைத்திருந்தனர்.
உலக வரலாற்றைத் திரும்பிப் பார்க்கும் எவரும், ஒரு மறுக்க முடியாத உண்மையை உணர்ந்து கொள்ள முடியும். நீதிக்கு எதிரான போராட்டங்களைத்தான் அழிக்க முடியும்… நீதிக்கான போராட்டங்களை அழிக்க உலகின் எந்த ஆற்றலாலும் முடியாது. அறம் சார் போராட்டங்களும் போர்களும், நீதி கிடைக்கும் வரை முடிவுக்கு வந்ததில்லை.
“பிரான்சு போன்ற ஒரு நாடு, ஒரு போரால் மட்டுமே தோற்று விடுவதில்லை” என்று சார்லசு டீ’கால் சொன்னதை உலகம் மறந்துவிட முடியாது. 1940இல் பிரான்சு அடிபணிய வேண்டியிருந்தது. தன்னுடைய சாம்பலிலிருந்தே உயிர்த்தெழுகிற பீனிக்சுப் பறவையைப் போல, அந்த வீழ்ச்சியிலிருந்துதான் எழுந்து நின்றது பிரான்சு.
நாடு கடந்து இங்கிலாந்தில் வாழ்ந்த பிரான்சுப் படையினரை ஒன்று திரட்டி டீ’கால் அமைத்த ‘பிரெஞ்சு விடுதலைப் படை’ பிரான்சை விடுவித்தது. பாரீசு நகரை மீட்ட பிறகு டீ’கால் நிகழ்த்திய உரை, உலக வரலாற்றின் பக்கங்களில் உதிரத்தால் எழுதப்பட வேண்டிய உரை.
“பாரீசு பாழாக்கப்பட்டது…
பாரீசு தகர்க்கப்பட்டது…..
பாரீசு கொடுமையான படுகொலைகளைப் பார்த்தது…..
இவ்வளவுக்கும் பிறகும், பாரீசு விடுதலை பெற்றிருக்கிறது…..
விடுதலைப் படையும் ஒட்டுமொத்த பிரான்சும் உதவியிருந்தாலும் கூட, இந்த வெற்றி ‘விடுதலை பெற்றே தீர்வோம்’ என்கிற பாரீசு மக்களின் உறுதிக்குக் கிடைத்த வெற்றி… இது பாரீசு மக்கள் தங்களுக்குத் தாங்களே தேடிக் கொண்டிருக்கும் விடுதலை”…….
சார்லசு டீ’காலின் உரை, ஒரு வரலாற்றுக் கருவூலம். அதன் ஒவ்வொரு சொல்லும், ஓராயிரம் பொருட்களில் மின்னுகின்றன. அதிலிருக்கும் ஒவ்வோர் எழுத்தும், ஆயுத எழுத்து.
எந்த இனத்தின் விடுதலையும் அரைக்கப்பட்ட சந்தனத்தைப் பன்னீரில் குழைத்து எழுதப்படுவதில்லை. ஆயிரமாயிரம் வீரர்கள் சிந்திய செந்நீரால்தான் எழுதப்படுகிறது. எம் இனத்தின் ஈடு இணையற்ற மாவீரர்களில் ஒருவரான கிட்டு சொன்னதைப் போல, “எந்த நிலத்தில் தமிழரின் குருதி(இரத்தம்) சிந்தியிருக்கிறதோ, அந்த நிலமெல்லாம் தமிழீழத் தாய்மண்!” சொந்த இனத்துக்காகத் தம்மைக் காணிக்கையாக்கியவர்களின் நினைவைப் போற்றுகிறபோதெல்லாம் விழி வழி வெள்ளம் பெருக்கெடுக்கலாம். அந்தக் கண்ணீர்த் துளிகள்தாம், எம் இனத்தின் ஓர்மத்தை வலுப்படுத்தும் என்று உறுதியாக நம்புகிறேன்.
ஆனையிறவுக்கான முதல் போரில் உயிரிழந்த நாயகர்(கேப்டன்) வானதி, இந்த நம்பிக்கையோடுதான் எழுதினாள். வானதி, ஆயுதங்களை மட்டுமின்றிப் பாவியப் (கவிதை) புல்லாங்குழலையும் இதயத்துக்குள் சுமந்த பாக்குயில்.
எழுதுங்களேன்…
நான் எழுதாது செல்லும்
என் கவிதையை எழுதுங்களேன்…!
சீறும் துப்பாக்கியின் பின்னால்
என் உடல்
சின்னாபின்னமாகியிருக்கலாம்…
ஆனால்
என் உணர்வுகள் சிதையா…
உங்களைச் சிந்திக்க வைக்கும்…
அப்போதேனும் எழுதுங்களேன்
நான் எழுதாது செல்லும்
என் கவிதையை…!
ஆனையிறவுக் களத்திலேயே வானதி என்கிற பாக்குயில் எழுதிய இந்தப் பா, போர்க்களத்தில் பூத்த பூ.
அந்த அப்பழுக்கற்ற வீரர்களின் நினைவைப் போற்றும் ஒவ்வொரு நொடியிலும், அவர்களது தாயகக் கனவு நெஞ்சில் நிறைகிறது. அவர்களுக்குச் செலுத்துகிற உண்மையான அஞ்சலி, தாயக விடுதலையாக மட்டுமே இருக்க முடியும்.
இனப்படுகொலைக்கு நீதி கேட்கும் நமது போராட்டம், விடுதலைப் போராட்டத்தின் வேறொரு வடிவம். எந்தத் தோல்வியும் நமது இலக்கை எட்டத் தடையாக இருந்துவிடப் போவதில்லை. சோர்வறியா ஓர்மம் எந்த முட்டுக்கட்டையையும் தகர்த்தெறிந்துவிடும். ‘பிரான்சு போன்ற ஒரு நாடு, ஒரு போரால் மட்டுமே தோற்று விடுவதில்லை’ என்று டீ’கால் சொன்னது, ஈழத்துக்கு மட்டும் பொருந்தாதா என்ன!
பின்குறிப்பு: ‘தமிழக அரசியல்’ வாயிலாக, ஈழம் தொடர்பான செய்திகளையும் அது குறித்த அலசல்களையும் உங்களுடன் பகிர்ந்து கொள்ள இசைந்த ஆசிரியர், பதிப்பாளர் முதலான ஒவ்வொருவருக்கும் நான் நன்றி தெரிவித்தாக வேண்டும். என்னை ஊக்குவித்த உங்களுக்கும்! ஒரு சிறிய இடைவெளிக்குப் பிறகு மீண்டும் உங்களைச் சந்திப்பேன் – என்கிற வாக்குறுதியுடன் விடைபெறுகிறேன். நன்றி!
– ஈழநலப் படைப்பாளி புகழேந்தி தங்கராசு
— தமிழக அரசியல் – கார்த்திகை 13, 2046 / 29.11.2015
தரவு : மடிப்பாக்கம் அறிவொளி
Leave a Reply