(ஒளவையார்: 2: ந. சஞ்சீவி தொடர்ச்சி)

 

சங்கக்காலச் சான்றோர்கள் – 12

2. ஒளவையார் (தொடர்ச்சி)


வள்ளன்மையில் தலை சிறந்து விளங்கிய அதியமான் வீரத்திலும் நிகரற்ற பெருவிறல் வேந்தனாகக் காட்சியளித்தான். ஒரு நாளில் எட்டுத் தேரை இயற்றும் கைவல் தச்சன் ஒருவன் ஒரு திங்கள் முழுதும் அரும்பாடு பட்டுத் தேர்க்கால் ஒன்றை மட்டும் செய்வானாயின், அத்தேர்க் கால் எத்துணை வலிவுடையதாகும்? அத்துணை உடல் வலி பெற்ற வல்லாண்மைக் குரிசிலாய் விளங்கினான் அதிகமான். அவன் படை வலி கண்டு அஞ்சாத திக்கில்லை; தன்மை தெரியாது,
‘இளையன் இவன், என இகழ்ந்த மாற்றாரையெல்லாம் ‘இருங்களிறு அட்டு வீழ்க் கும் ஈர்ப்புடைக்கராம்’ போலக் கொன்று வீழ்க்கும் கடுந்திறல் படைத்து விளங்கினான். அத்தகை நெடுவேலோன் நாட்டில் எறிகோலுக்கு அஞ்சாது சீறிப்பாயும் அரவினை ஒத்த மள்ளர் கூட்டம்-மழவர் கூட்டம்-மண்டிக் கிடந்தது. அவன் கனன்றெழுந்தால், மாற்றார் மதில்கள் நொறுங்கும்; ஒன்னார் படையெல்லாம் ஓடிச் சிதறும். கேளாருக்குக் காலனை ஒத்த அதிகன் கோபங் கொள்ளின், அவன் குருதிக் கொதிப்பேறிய கண் தன் அருமைக் குழந்தையைக் காணினும் குளிராது. அத்தகு ‘போரடு திரு’வினாய் விளங்கினான் அதிகமான். அதிகமான் தகடூரை ஆட்சி புரிந்து வந்த அந்நாளில் மலையமான் திருமுடிக்காரி என்பான் கோவலூரை ஆட்சி புரிந்து வந்தான். இம்மலையமான் திருமுடிக்காரியும் மாற்றார் அஞ்சும் போர் வலி மிக்கவனாய் விளங்கியதோடன்றி,

‘வாலுளைப் புரவியொடு வையக மருள
ஈர நன்மொழி இரவலர்க்(கு) ஈந்த
. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .
கழல்தொடித் தடக்கைக் காரி’
(சிறுபாணாற்றுப்படை : அடி, 92-95)

எனக் காசினி போற்றக் கடையெழு வள்ளல்களுள் ஒருவனாய்த் திகழ்ந்தான். ஈரத்தாலும், வீரத்தாலும் இணையற்று விளங்கிய அவனது படையாற்றலின் பெருமையுணர்ந்து முடியுடை வேந்தரும் தம் பகைவரை வெல்ல அவன் அரும்பெறல் துணையையே ஆர்வத்துடன் எதிர் நோக்கி நின்றனர். இத்தகு வலி மிக்க மன்னன் திருமுடிக்காரிக்கும், பல்வேல் தானை அதிகனுக்கும் இடையே மலையமான் கொண்ட படை வலிச் செருக்காலோ-அதிகமானது செருவேட்ட நெஞ்சத்தாலோ-யாது காரணம் பற்றியோ எழுந்த கடும்பூசல் முற்றி, நாளடைவில் கொடும்போராய் மூண்டது.

இந்நிலையைக் கண்டார் தமிழ்ச் சான்றோராகிய ஒளவையார்; இதயம் புண்ணாணார். “அந்தோ! தமிழகமே! யாது குறை செய்தனையோ நீ? உன் புகழ்க் கோயிலினையும் கோட்டையையும் பொசுக்கும் தீயாக அன்றோ இப் போர்த்தீ உள்ளது? அயலவரால் அழிக்க நினைக்கவும் ஒண்ணா உன் அரணம் உன்னவரா லேயே அழிந்து விடுமோ! போரின் பெயரால் எண்ணற்ற தமிழ் வீரரின் தலை தமிழகத்தில் தமிழர்களாலேயே உருளுவதோ! கொடுமை! பெருங்கொடுமை! அறத்தை நம்பாது அம்பையே நம்பும் சிறுமையினை என்னென்று உரைப்பேன்!” என இவ்வாறு பலவும் எண்ணி அவரது தாய்மையுள்ளம் ஆருயிர்கள் மேல் வைத்த கருணையாலும் அருமைத் தமிழகத்தின் மேல் வைத்த பற்றாலும் துடித்திருக்க வேண்டும். அந்நிலையில் போர்க்களம் புகுந்து அறிவுரை கூறி அமைதி கூட்ட அவர் விரைந்தார்; அதிகனை எதிர்த்துநின்ற மன்னனை நோக்கிப் பின் வருமாறு கூறினார்:

“அதிகமான் போரைச் செய்தற்கு உறை கழித்த வாள்கள் பகைவர் அரணை அழித்தலால், அவர் தசையின் கண்ணே உறக் குளித்துக் கதுவாய் போய் வடி விழந்தன. அவன் வேல்கள் குறும்பர் அரண்களை வென்று அவர் நாட்டை அழித்தலால், சுரை பொருந்திய கரிய காம்புடனே ஆணி கலங்கி நிலையழிந்தன. அவன் களிறுகள், கணைய மரத்தால் தடுக்கப்பட்ட கதவைப் பொருது அப்பகைவரது களிறுடை அரணழித்தலால், மருப்பின் கிம்புரிகள் கழலப்பெற்றன. அவன் குதிரைகள் பகை நாட்டு வீரர் பொலந்தார் மார்பம் உருவழிய மிதித்து ஓடலால், குருதிக்கறை படிந்த குளம்புடையவாயின. அவனும், மண்ணுலகையே தன்னுள் அடக்கும் கடலனைய படையையும், அம்புகள் துளைத்த பரிசையையும் உடையவன். அத்தகையவனால் வெகுளப்பட்டார் பிழைத்தல் ஆகுமோ! இகல் வேந்தரே, உங்கள் அகல் நாடு உங்கட்கே வேண்டுமாயின், அதிகனுக்குத் திறை தந்து உய்யுங்கள். இல்லையேல், அவன் ஆறாச் சினம் மாறாது. இவ்வாறு யான் சொல்லவும் தெளியீராயின், நீங்கள் உங்கள் குறுந்தொடி மகளிர் தோளைப் பிரிதல் வியப்பன்று!”

இவ்வாறு வெல்போர் அதிகனது வீரத் திறன்களையெல்லாம் எடுத்துரைத்து, “பகை மன்னரே, எம் ஒளிறிலங்கு நெடுவேல் தலைவனை நேரில் கண்டிலீர் நீர்; கண்டால், மனமொடிந்து போவீர். ஆகலின், அவனைக் காணா நிலையில் கரவா நாவினராய்க் கண்டதும் கூறிச் சோகாக்கும் நிலையடையாதீர்!” என எச்சரித்தார்.

‘யாவின் ஆயினும், கூழை தார்கொண்(டு)
யாம்பொருதும்,’ என்றல் ஒம்புமின்; ஓங்குதிறல்
ஒளிறிலங்கு நெடுவேல் மழவர் பெருமகன்
கதிர்விடு நுண்பூண் அம்பகட்டு மார்பின்
விழவுமேம் பட்ட நற்போர்
முழவுத்தோள் என்னையைக் காணா வூங்கே.’         (புறம், 88)

ஆன்ற புலமை நல்லிசைச் சான்றோரின் பொன் மொழிகளெல்லாம் பயனற்றுப் போயின. போர் புரியவே விரும்பினான் மலையமான். அதிகமானோ, அது கண்டு அஞ்சிப் பின் வாங்குபவன்! தமிழ்க்குடி வீரம் அவனுக்கு மட்டும் விதி விலக்கோ? ஆயினும், அவன் ஒளவையாரின் அருள் மொழிகட்கு அடங்கிப் பொறுத்திருந்தான்; ஒளவையாரின் சொல்லையும் மதியானாயினன் மலையமான் என்பதை அறிந்ததும், ஆற்றொணாக் கோபத்துடன் காற்றோடு கலந்த கடுந்தீப்போலப் போர்க்களத்தில் பாய்ந்தான். கரியொடு கரியும், பரியொடு பரியும், தேரொடு தேரும் மோதின. கணக்கற்ற வீரர்களின் தலைகள் உருண்டன. குருதி வெள்ளம் பெருக்கெடுத்தோடியது. போரின் முடிவு யாதாமோ எனக் கற்றோரும் மற்றோரும் கலங்கி நின்றனர். ஆருயிர்க்கு இரங்கும் ஒளவையாரின் தமிழ் நெஞ்சம் பாகாய் உருகியது.

அதிகமான் நெஞ்சில் எழுநாவிட்டு எரியும் செந்தழ லன்ன சிற்றத் தீயினைக் கண்ட ஒளவையார், “அந்தோ! போர் முனையில் பகைவர் மாறுபாடு ஒழியப் பொருதலால் தேய்ந்து குறைந்த கோடுகளையுடைய நின் யானைக் கூட்டம் போகக் காணில், பகைவர் தம் மதில் வாயில் உள்ள பழைய கதவங்களையும், கணைய மரங்களையும் மாற்றிப் புதியன இடுவர்; மாற்றார் சேனை வீரர் பிணம் சிதறியழியப் போர்க் களத்தை உழக்கிச் செல்லுதலால் குருதிக்கறை படிந்த நின் குதிரைக் கூட்டம் போகக்கண்டால், நின் பகைவர் காட்டு வாயில்களையும் வேலமுள்ளால் அடைத்துக் காப்பர் : பகைவர் மார்பைத் தைத்து ஊடுருவிப்போன உறையின்கண் செறித்தலில்லாத நின் வேலைக் கண்ட பகைவர், தம் கிடுகைக் காப்புடனே கைநீட்டுச் செறிப்பர்; வாள் வாய்க்கத் தைத்த வடுப்படிந்த நின் மைந்துடை வீரரைக் கண்டால், குருதி படிந்த அம்பைத் தூணியுள் அடக்குவர். ஆனால், நீயோ, காவலாக வெண்சிறு கடுகைப் புகைக்கவும் மனம் தரியாது, மாற்றாரின் உயிரைக் கொடுபோகும் கூற்றம் ஒப்பாய். ஆகலின், அதிகமானே, நெற்கதிர் சுழலும் கழனியொடு பெரும்புனல் வளமிக்க நின் பகைவரின் அகல் நாடு இரங்கிக் கெட்டு ஒழிவதோ!” என எண்ணி மனம் உருகினார்.

(தொடரும்)

முனைவர் . சஞ்சீவி

சங்கக்காலச் சான்றோர்கள்