சல்லிக்கட்டா? ‘ல்லிக்கட்டா?

 

  தமிழர் திருநாளான பொங்கல் விழாவை ஓட்டித் தமிழகமெங்கும் சிற்றூர்ப் புறங்களில் பல்லாண்டுகளாய் நடந்து வரும் வீர விளையாட்டே சல்லிக்கட்டு என்பது. தமிழர்தம் முல்லைநில நாகரிகத்தில் பெண்ணை மணக்க விரும்பும் ஆடவர். மணப்பெண்வீட்டாரின் காளையை அடக்கி மணப்பர் என்று சங்க இலக்கியம் கொண்டு அறிகிறோம். இன்று இவ்வீரவிளையாட்டு திருமணத்துடன் உறவு கொள்ளாமல் இளைஞர்தம் மறப்பெருமையைப் பாரோர்க்கு எடுத்துக்காட்டும் ஒன்றாக மட்டுமே செயல்பட்டு வருகிறது. விளையாட்டுப் போட்டிகளில் பங்கு பெறும் காளைகள் ஒவ்வொன்றிற்கும் உரிய கட்டுத்  தொகை முடிவு செய்யப்படும். இத்தொகையைப் பண முடிப்பாகத் தருவர். காளையை அடக்கியோர் இத்தொகையினைப் பெறுவார். சிறிய மதிப்புள்ள காசினைச் சேர்த்துத் தொகுத்து ஓடும் காளை மாட்டிற்கு உரியதாகக் கட்டப்படும். இக்காசினைக் குறிக்கும் பிறிதொரு சொல்லான சல்லி என்பது கொண்டு இவ்விளையாட்டைச் சல்லிக்கட்டு என்று அழைக்கின்றனர். சல்லியைப் பந்தயமாக வைத்து விளையாடுவதால் சல்லிக்கட்டு என அழைக்கப்படுவது பொருத்தமாகும்.

  இவ்விளையாட்டு முதன் முதலாக கி.மு.2000இல் விளையாடப் பட்டதாகத் தெரிகிறது. தமிழர்களின் மரபுவழி வீர விளையாட்டுகளுள் ஒன்று. ஏறு தழுவுதல் என்றும் சொல்வர். ஏறு=காளைமாடு. மாட்டை ஓட விட்டு அதை மனிதர்கள் அடக்குவது, அல்லது கொம்பைப் பிடித்து வீழ்த்துவது தான் விளையாட்டு. இது விலங்கு வதையல்ல. மாறாக அவற்றைப் பாதுகாத்து வளர்ச்சியடையச் செய்யும் ஒரு குதூகலக் கொண்டாட்டம் எனலாம்.

அகத்திணைகருப்பொருள்

      அகப்பொருள் இலக்கியங்களிற் பேசப்படும் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என்ற அன்பின் ஐந்திணையும் முதற்பொருள், கருப்பொருள், உரிப்பொருள் ஆகிய பொருள் மூன்றானும் சொல்லப்படும். ஒவ்வொரு நிலத்திற்கும் பதினான்கு வகை கருப்பொருட்கள் உண்டு என்பது இலக்கணம். ஐந்திணைகளுள் முல்லைத்திணை, காடும் காடுசார்ந்த இடங்களைக் குறிப்பதாகும். அவ்வாறே ஒவ்வொரு நிலத்திற்கும் கருப்பொருள்கள் தெய்வம், உணவு, மா, மரம், புள், பறை, யாழ், தொழில் என்பன வேறுபடும். முல்லைத் திணைக்குரிய தொழில்களைக் குறிப்பிடுங்கால் ஆனினம் மேய்த்தல், கொல்லேறு தழுவுதல், என்பனவற்றைக் கூறுவர். சங்ககாலத்தில் ஏறு தழுவுதல் முல்லை நிலத்தில் ஒரு முக்கிய தொழிலாகக் கருதப்பட்டு வந்ததைத் தொல்காப்பியம் போன்ற இலக்கண நூல்கள் குறிப்பிடுகின்றன. எனவே, ஏறக்குறைய 5000 ஆண்டுகட்கு முற்பட்டதான பரம்பரையம் மிக்க ஒரு விளையாட்டு ஏறுதழுவுதல்.

சல்லிக்கட்டு

  சல்லி என்பது விழாவின் போது மாட்டின் கழுத்தில் கட்டப்படுகிற வளையத்திணைக் குறிக்கும். இவ்வழக்கம் இன்றும் இருக்கிறது. ஐம்பது ஆண்டுகட்கு முன்பு புழக்கத்தில் இருந்த சல்லிக்காசு என்னும் இந்திய நாணயங்களைத் துணியில் வைத்து மாட்டின் கொம்புகளில் கட்டிவிடும் பழக்கம் இருந்தது. மாட்டை அடக்கும் வீரருக்கு அந்தப்பண முடிப்பு சொந்தமாகும். இந்தப் பழக்கம் பிற்காலத்தில் சல்லிக்கட்டு என்ற மாறியது. பேச்சு வழக்கில் அது திரிந்து ல்லிக்கட்டு ஆனது என்றும் கூறப்படுகிறது.

சல்லி – சிறியது = காசு

   சல்லி என்ற சொல் புழங்கப்படும் பணத்தைக் காட்டிலும் மதிப்பாலும், அளவாலும் சிறியதாய் இருப்பதால் சல்லி என அழைக்கப்பட்டது. சல்லி என்ற சொல்லின் பகுதியாக இருக்கும் ‘சல்’ என்பதற்குச் சிறு என்னும் பொருளும் உண்டு. இதனை வேறு பல சொற்கள் கொண்டும் அறியலாம். சான்றுகள்:-

 1. சல்லிவேர்- ஆணிவேரினை ஒட்டி சிறிதாய்ப் படர்ந்து பதிந்திருக்கும் சிறுவேர்.
 2. விலை சல்லிசாக இருக்கும். -– விலை சிறியதாய் உள்ளது.
 3. கருங்கல் சல்லி –- கல்லின் சிறுபகுதித் துண்டு.
 4. அரிசி சன்னமாக உள்ளது – மெல்லியதாக உள்ளது.
 5. சல்+வு = சவ்வு = சவ்வு – மெல்லிய தோல்
 6. சல்+து- சல்து- சந்து;   சந்து –- சிறிய  இடுக்கு வழி
 1. சந்து செய்வித்தல் – –கருத்து வேறுபாடு கொண்ட இருவரை இணக்கமாக
  ஒன்றுபடுத்தல்.
 2. சல்+பந்தம் = சம்பந்தம் – – நெருங்கிய
  சல்+பந்தி = கட்டுப்பட்ட உறவு =– சம்பந்தி

  காசினைத் தனிநிலையில் கட்டும்போது ‘சல்லி’ என்றே வழங்கும் தமிழர், அதனைக் கட்டி விளையாடும் விளையாட்டோடு சேர்த்துச் சொல்லும்போது மட்டும் மயங்கி ‘ஜல்லிக்கட்டு’ என்று அழைத்து விடுகின்றனர். வருடத்தை வரும் என்றும் வேட்டியை வேஷ்டி என்றும், நட்டத்தை ஷ்டம் என்றும், சீரகத்தை ஜீரகம் என்றும் பிழைபட அழைக்கும் தமிழர், தமிழின் மாண்பை அறிந்து தமிழ்ச் சொல்லைத் தூய தமிழால் அழைப்பது அவர்தம் வாழ்வை மேம்படுத்தும் தகுதியாகும். தமிழர் சல்லிக்கட்டு என்று அழைத்தலே நன்று. மஞ்சு விரட்டு என்றும் சிற்றூர்களில் அழைப்பர்.

      சங்கக்காலத்தில் கூறப்பட்ட ஏறு தழுவலுக்கும் சல்லிக்கட்டுக்கும் சில வேறுபாடுகள் உள்ளன. முதலிற் குறிக்கப்பட்ட முல்லை நிலத்து மக்களாகிய ஆயரிடம் மட்டுமே ஏறுதழுவுதல் இடம் பெற்றது. சங்கக்காலத்தில் ஆயர்குலக் காளையர் மணம் முடிக்கும் பொருட்டு இடபத்தைத்(இடபம்-காளை) தழுவிப்பிடித்தல் ஏறு தழுவுதல் எனச் சொல்லப்பட்டது. தற்போது ஆயர்மட்டுமின்றிப் பல திறத்தவரும் பங்கேற்கின்றார்.

     2. சல்லிக்கட்டில் வென்றவர் பணமுடிப்பினைப் பரிசாகப் பெறுதல் ஆயரிடம் மட்டுமே உள்ளது. 3. ஏறுதழுவுதலில் தெய்வ நம்பிக்கை இருக்கவில்லை. ஆனால் சல்லிக்கட்டு சிற்றூர்த்தேவதைகளின் வழிபாட்டு நம்பிக்கையுடன் தொடர்புடையது. மழைபொழிய வேண்டியும், கொடிய நோய்கள் தீர்க்க வேண்டியும், சல்லிக்கட்டு நடைபெறுகிறது.

  பெயின், போர்ச்சுக்கல், மெக்சிகோ போன்ற நாடுகளில் காளைப்போர் என்ற பெயரில் தேசியப் பொழுது போக்கு விளையாட்டாக இன்றும் நடைபெறுகிறது. காளைப் போரும், சல்லிக்கட்டும் முற்றிலும் வேறுபட்டவை.

இவ்வீரவிளையாட்டு தமிழ்நாட்டில் மதுரை மாவட்டம் அலங்காநல்லூர், பாலமேடு தேனீமலை(தேனி மாவட்டம்) அவனியாபுரம் முதலிய ஊர்களில் முதன்மையாக நடத்தப் பெறுகின்றது.

  தமிழர்க்கே உரிய பரம்பரை விளையாட்டான சல்லிக்கட்டைப் போற்றி இளைஞர்களிள் வீரத்தை ஊக்குவித்தல் தலையாய கடமையாம்.

 

புலவர் தி.வே. விசயலட்சுமி, பேசி: 9841593517