அழை-சன்னா நினைவேந்தல் : azhai_pudhumozhininaiventhal

தமிழ்த் தேசியப் போராளித் தோழி
சாதிக்குல் சன்னா (எ) புதுமொழி
படத்திறப்பு – நினைவேந்தல்!

  தமிழ்த் தேசியப் பேரியக்கத்தின் உரிமைப் போராட்டங்கள் அனைத்திலும், தம் இரு அகவைக் குழந்தை இளம்பிறையுடன் பங்கேற்றுவந்த, தமிழ்த் தேசியப் பேரியக்கச் செயல்பாட்டாளரும், பேரியக்கச் சென்னைச் செயலாளர் தோழர் வி. கோவேந்தன் மனைவியுமான தோழி சாதிக்குல் சன்னா (எ) புதுமொழி, பேரியக்கத்தின் தலையில் இடிவிழுந்ததுபோல் கடந்த 11.03.2016 அன்று மாலை சென்னையில் காலமானார். அவருக்கு அகவை 31.

  தோழி சன்னாவும் கிட்டத் தட்ட முழு நேரச் செயல்பாட்டாளராகவே இயக்கப் பணிகள் – போராட்டங்களில் ஈடுபட்டு வந்தார். தமிழ்த் தேசியப் பேரியக்கம் பங்கெடுக்கும் அனைத்துப் போராட்டங்களிலும் பங்கெடுத்து வந்த தோழி சன்னா, பல போராட்டங்களில் தம் கைக் குழந்தை இளம்பிறையுடன் கைதாகி, ஒப்படைப்புணர்வோடு செயல்பட்டவர். பேரியக்கத்தின் சென்னை மகளிர் சந்திப்பு நிகழ்வுகளுக்கு ஒருங்கிணைப்பாளராக ஈடுபாட்டுடன் செயலாற்றியவர் தோழி சன்னா.

  சென்னை பெரு வெள்ளத்தின்போது பொழிச்சலூரில் தமிழ்த் தேசியப் பேரியக்கம் ஒருங்கிணைத்த துயர் துடைப்புப் பணிகளில், தம்மை ஆர்வத்தோடு ஈடுபடுத்திக் கொண்டு, தெருத் தெருவாகச் சென்று அவர் துயரீட்டுப் பொருள்கள் வழங்கினார். தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டத்தின் இதழ் தயாரிப்புப் பணிகளிலும் தம்மை ஈடுபடுத்திக் கொண்டு சுறுசுறுப்புடனும் பொறுப்புடனும் செயலாற்றியவர் தோழி சன்னா. இளம் அகவையிலேயே தோழர் சன்னா மறைந்தது, தோழர் கோவேந்தனுக்கும் மழலை இளம்பிறைக்கும் மட்டுமின்றி, தமிழ்த் தேசியப் பேரியக்கத்திற்கும், தமிழ்த் தேசியத்திற்குமான பேரிழப்பாகும்.

சிதம்பரத்தில்:

  சிதம்பரத்தில், தோழி சன்னாவின் நினைவேந்தல் – படத்திறப்பு நிகழ்வு, திருவள்ளுவர் ஆண்டு 2047 – பங்குனி 7 (20.03.2016) ஞாயிறு காலை 10 மணிக்கு, சிதம்பரம் சிவ சண்முகம் தெருவிலுள்ள தோழர் கோவேந்தன் இல்லத்தில் நடைபெறுகின்றது. தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன் தோழி சன்னாவின் திருவுருவப்படத்தைத் திறந்து வைத்து உரையாற்றுகிறார். நிகழ்வில், பேரியக்கத் தோழர்களும், உறவினர்களும், நினைவேந்தல் உரையாற்றுகின்றனர்.

சென்னையில்:

  சென்னையில் தோழி சன்னாவின் நினைவேந்தல் – படத்திறப்பு நிகழ்வு,  கலைஞர் கருணாநிதி நகரிலுள்ள கண்டுபிடிப்பு (டிசுகவரி) புத்தக நிலையத்தில் திருவள்ளுவர் ஆண்டு 2047 – பங்குனி 13 (26.03.2016) காரி(சனி) மாலை 5 மணிக்கு நடைபெறுகின்றது. பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன் தலைமை நிகழ்வுக்குத் தாங்குகிறார். தமிழுரிமைக் கூட்டமைப்புத் தலைவர் புலவர் கி.த. பச்சையப்பனார், தோழியர் சன்னாவின் படத்தைத் திறந்து வைத்து உரையாற்றுகிறார். நிகழ்வில், தோழமை அமைப்பினரும் நண்பர்களும் நினைவேந்தல் உரையாற்றுகின்றனர்.

 இந்நிகழ்வுகளில், பேரியக்கத் தோழர்களும்,

தமிழின உணர்வாளர்களும் கலந்து கொள்ள வேண்டுமென

அன்புரிமையுடன் அழைக்கின்றோம். 

தலைமைச் செயலகம், 
தமிழ்த் தேசியப் பேரியக்கம் 

பேச: 7667077075, 9047162164 

ஊடகம்: www.kannotam.com 

இணையம்: tamizhdesiyam.com