(சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச்சொல்லாக்கம் 606-610 தொடர்ச்சி)

தமிழ்ச்சொல்லாக்கம் 611-615

(சொல், மொழிமாற்றம் பெற்ற சுவடுகளை அடையாளங் காட்டும் சுரதாவின் அரிய தொகுப்பு. கி.பி.1857 முதல் 1953 வரை வெளிப்பட்ட மொழி மாற்றச் சொற்களைத் (தம் பார்வையில் பட்டவற்றைத்) தேடித் தந்துள்ளார். 238 நூல்களும் 200 நூலாசிரியர்களும்  பட்டியலாய்த் தரப்பட்டுள்ளன. மொழி மாற்றச் சொல்லும், சொல் இடம் பெற்ற பகுதியும் நூலும் தரப்பட்டுள்ளன.)

611. Weight – நிறுக்குங் கருவி

இரயில் நிலையுங்களில் சீட்டு(டிக்கட்டு) வாங்கும் ஜன்னல்களுக்கு முன்னே ஒரு வெயிட் (நிறுக்குங் கருவி) ஒன்று பலகைபோல் போட்டு விட்டால் அதன் மேல் ஏறி நின்றுதான் சீட்டு(டிக்கட்டு) வாங்க நேரிடும். அப்படி ஆள் ஏறியவுடன், ஏறினவன் இத்தனை பவுண்டு எடையுள்ளவன் என்று டிக்கட்டு விற்பவர்களுக்கு ஒரு முள் காட்டிவிடும். ஒரு பவுண்டுக்கு ஒரு மைலுக்கு இவ்வளவு கட்டணம் என்று ஏற்படுத்தி எடையின் மீதுசீட்டு(டிக்கட்டு ) கொடுக்கும் படி ரெயில்வே கம்பெனியாரை விகடன் வேண்டுகிறான்.

இதழ்: ஆனந்த விசய விகடன் 1928 பிப்பிரவரி; தாய் – 1, பிள்ளை – 1, பக்கம் – 9

ஆசிரியர் : விகடகவி பூதூர். வைத்திய நாதையர்

612. Essence – சத்து

எசென்சு (சத்து) அபிசேகம் : கோவில்களில் உள்ள சுவாமிகட்கு அபிசேகம் செய்கையில் பன்னீர் அபிசேகம் செய்கிறார்கள். பன்னீரானது ரோசா புட்பத்தின் எசென்சு (சத்துரசம்) ஆகும். ஆனதால் அதைப்போல இனி, பழவர்க்கங்களையும் எசென்சாக வாங்கி அபிசேகம் செய்தால் வேலை குறையுமென்று குருக்கள்மார்கள் தேவத்தான போர்டாரைக் கேட்டுக் கொள்ளப் போகின்றாராம்.

நூல் : ஆனந்த விசய விகடன் (1928, செப்டம்பர்) தாய்- 1, பிள்ளை – 8 பாக்கட் விகடங்கள், பக்கம் – 335

ஆசிரியர் : விகடகவி பூதூர். வைத்தியநாதையர்

613. Open Coat – திறப்புச் சட்டை

நவீன நாகரிகத்தில் முற்றிய ஆண் பாலர்கள் தங்கள் சட்டைகளில் (ஒப்பன்கோட்) என்கிற திறப்புச் சட்டையை அணிவது போல மாதர்களும் திறப்புரவிக்கையை அணிய நாயகன்மார்கள் உத்தரவு தர ஏறபாடு செய்ய வேணுமாய் கோருகின்றனர்.

இதழ்     :    ஆனந்த விசய விகடன் (1928, சூன்)

தாய் – 1, பிள்ளை – 4 பாக்கட் விகடங்கள் – பக்கம் – 195

ஆசிரியர்     :     விகடகவி பூதூர், வைத்திய நாதையர்

614. Produce – விளைவுப் பொருள்

என்னுடைய கடையைப் பெரிதாக்க எண்ணங்கொண்டு நான் ஏற்கனவே கட்டியிருந்த கடையைச் சேர்ந்தாப் போல் பெரிய சாப்பாக பக்கா கல் கட்டடம் ஒன்றைக் கட்டியும், அதற்கடுத்தாப் போல் சில கிடங்குகளைக் கட்டியும் அதில் என் வியாபாரத்தை வைத்து நடத்தலானேன். அப்போது இந்தியா இன்னும் அனேக ஊர்களிலிருந்தும், இந்திய ஆண் பெண் இரு சாதியாருக்கும், ஐரோப்பிய ஜசாதியாருக்கும் வேண்டிய சகல சாப்பாட்டு சாமான்கள், துணி, மணி முதலிய எல்லாச்சாமான்களும் வரவழைத்து வைத்தும், அவ்விடத்திலும் பக்கத்து கிராமங்களிலும் விளையும் சகலவித விளைவுப்பொருள் (Produce) களையும் ஒப்பந்தமாக வாங்கி அவ்விடத்திலும் மற்ற இடங்களிலுமுள்ள வியாபாரிகளுக்கு அனுப்பிச் சப்ளை செய்து விற்றும் வியாபாரத்தை ஒழுங்காகக் கவனித்து நடத்திவரலானேன்.

நூல்        :               ரா. பழனியாண்டிப் பிள்ளையின் சீவிய சரித்திரம் (1928) பக்.11, 12

நூலாசிரியர்         :               ரா. பழனியாண்டிப் பிள்ளை

615. Agreement – உடன்படிக்கை

டர்பனில் எட்வர்டு இசுனல் என்னும் ஒருபெரிய வியாபாரிக்கு சுபிங்கோ என்னும் நானிருக்குமிடத்தில் 100 ஏக்கர் காடு நிலம் இருந்தது. அவர் என்னை வரவழைத்து என்னைப் புகழ்ந்து பேசி எனக்குச் சொந்தமான 200 ஏக்கர் நிலத்தை நான் சீர்திருத்தம் செய்து வருமானத்திற்குத் தகுதியாக்கிக் கொண்டது போல் இமிகிரேசன் ச னங்களுக்குப் பயிரிடக் கொடுத்தும், இன்னும் என்னுடைய அபிப்பிராயப்படி செய்தும் வசூலாகும் வருமானத்தில் 100 ரூபாய்க்கு ஐந்து ரூபாய் விகிதம் கமிசன் எடுத்துக் கொண்டு மிகுதியைத் தனக்குக் கொடுக்கும்படியாக உடன்படிக்கை (அக்ரிமெண்டு) எழுதிக் கொண்டு மேற்படி தன்னுடைய 1000 ஏக்கர் காடு நிலங்களை என்னிடம் ஒப்புவித்தார்.

நூல்        :               ரா. பழனியாண்டிப் பிள்ளையின் சீவிய சரித்திரம் (1928) பக்கம் – 16

நூலாசிரியர்         :               ரா. பழனியாண்டிப் பிள்ளை

(தொடரும்)

உவமைக்கவிஞர் சுரதா

தமிழ்ச்சொல்லாக்கம்