chinnachamy01

பிறப்பு : தி.ஆ.1970 (தாது ஆண்டு ) ஆடித்திங்கள் 16ஆம் நாள் வெள்ளிக்கிழமை (30-7-1939) இரவு எட்டு மணி.

தந்தை: ஆறுமுக(முதலியார்).

தாய் : தங்காள்.

ஊர் : கீழப்பழுவூர், உடையார் பாளையம் வட்டம், திருச்சி மாவட்டம்.

படிப்பு : ஐந்தாம் வகுப்பு.

திருமணம் : ஏவிளம்பி ஆண்டு ஆவணித்திங்கள் 20ஆம் நாள் வியாழக்கிழமை காலை 9 மணி: சீர்திருத்த முறையில் செல்வி கமலம் என்பாரை மணந்தார்.

மணமகளின் தந்தை : வையாபுரி

தாய் : விருத்தம்பாள்.

ஊர் : ஆடுதுறை, பெரம்பலூர் வட்டம் திருச்சிராப்பள்ளி மாவட்டம்.

புதல்வி : இவர்கள் இருவருக்கும் பலவ ஆண்டு ஐப்பசித் திங்கள் 18ஆம் நாள் வெள்ளிக்கிழமை இரவு 11 மணிக்குப் பெண் குழந்தை பிறந்தது. அதற்குத் திராவிடச் செல்வி எனப் பெயர் சூட்டியுள்ளார் செந்தமிழ் மறவர். வாழ்க்கைத் துணைவி கமலத்துடனும் மழலைச்சேய் திராவிடச் செல்வியுடனும் மனையறம் நடத்திக் கொண்டிருந்த செந்தமிழ் மறவர் சின்னச்சாமி தைத்திங்கள் 11ஆம் நாள் (24 &1&64) வெள்ளிக்கிழமை காலை 9 மணிக்குச் சருக்கரை வழங்கினார். 9 மணிக்குமேல் வயலுக்குச் சென்று வருகிறேன் என்று கூறிவிட்டுச் சென்றார். சனிக்கிழமை காலை 4 மணிக்குத் திருச்சிச் சந்திப்பு புகைவண்டி நிலையத்தில் தன் உடலில் பெட்ரோலை ஊற்றிக் கொண்டு தீ மூட்டிக் கொண்டார். தீச்சுடரில் மூழ்கியவர் ‘‘தமிழ்வாழ்க! இந்தி ஒழிக’’ என்று கூறிக்கொண்டே இருந்தார். உடல் அணு அணுவாக வெந்து ஆவி நீங்கியபோதும் அன்னைத் தமிழை மறந்திலர். செந்தழல் வென்றது. செந்தமிழ் மறவனின் பூதவுடல் நீங்கியது; புகழுடல் என்றும் நிலைத்தது. மறவன் சின்னச்சாமி வண்டமிழ் காக்க மாண்டான். வாழ்க அவர் புகழ்! வளர்க தமிழ்.

சின்னச்சாமியை இழந்து ஆறாத்துயரத்தில் வருந்தும் அவர் மனைவி கமலத்துக்கும் புதல்வி திராவிடச் செல்விக்கும் அவர் அன்னைக்கும், ஏனைய உறவினர்க்கும் எம் உளமார்ந்த ஆறுதல்கள்.

 

அன்னை மொழிக்கென ஆரூயிர் நீத்தார் – அவர்தாம்

சொன்ன மொழிதனை நாம்மறவோமே.

– குறள்நெறி மாசி 03.1995 / 15.02.1964