(தொடர் கட்டுரை)

83tha.uri.sa._thalaippu2

 

  1863 ஆம் ஆண்டு ஆங்கிலேய அரசாங்கம் இசுலாமியர்களின் மசூதி மற்றும் நிருவாகத்தை இசுலாமியர்களிடம் ஒப்படைத்தது. எந்தக் குறிப்பிட்ட சாதியினரிடமோ, துணைச்சாதியினரிடமோ, சாதிக்கு வெளியே இருந்தவர்களிடமோ ஒப்படைக்கவில்லை; எந்தக் குறிப்பிட்ட பிரிவினரிடமும் ஒப்படைக்கவில்லை.

 மசூதிகள் இசுலாமியர்களின் கட்டுப்பாட்டிற்குள் வந்தவுடன் அவர்கள் தங்கள் இசுலாமியச் சமயச்சட்டத்திற்கு மாற்றிக்கொண்டார்கள். இறைவனுக்காக ஒப்படைக்கப்பட்ட சொத்துக்கள் ‘வக்பு’ எனப்பட்டது. அதன்பின்னர் வக்பு வாரியமாக மாற்றப்பட்டது. தமிழகத்தில் ‘தமிழ்நாடு வக்பு வாரியம்’ என அமைக்கப்பட்டு அதன் தலைமையகம் சென்னையில் அமைக்கப்பட்டது. இவ்வாறு வக்பு செய்யப்பட்ட சொத்துக்களைப் பள்ளிவாசல் செலவினங்களுக்கும், அப்பகுதியில் வாழும் ஏழை முசுலிம்கள் கல்வி வளர்ச்சி முதலானவற்றிற்கும் பயன்படுத்தவேண்டும் என்று சட்டம் உருவாக்கப்பட்டது. இதில் அரசியல் குறுக்கீடு உருவானது. இதனால் எந்தக்கட்சி ஆளுங்கட்சியாக உள்ளதோ அந்தக்கட்சி தனக்கு வேண்டியவர்களை வக்பு வாரியத் தலைவராக நியமித்தது.. வக்பு வாரியத் தலைவர் தன்னுடைய கட்சியைச்சேர்ந்தவர்களுக்குப் பள்ளிவாசல் சமாஅத்து தலைவர் பதவியைத் தாரை வார்த்தனர். இவ்வாறு பதவி பெற்றவர்கள் தங்கள் ஆளுங்கட்சி அதிகாரத்தைப் பயன்படுத்தி அச்சொத்துக்களை நீண்ட காலக்குத்தகைக்கு அஃதாவது 99 வருடத்திற்குத் தாரை வார்த்தனர்.

  நாகப்பட்டினம் மாவட்டம், திட்டச்சேரி வக்பு நிருவாக அவைக்குச் சொந்தமாகப் பலகோடி மதிப்புள்ள சொத்துகள் உள்ளன. அவற்றுள் ஒன்றான மரைக்கான் சாவடியில் உள்ள சொத்தினை நீண்ட காலக் குத்தகைக்கு (தமிழ்நாடு குத்தகைதாரர் பாதுகாப்புச்சட்டம் 25/55 பிரிவு 3(4)) சமாஅத்து நிருவாகிகள் தனியருக்குத் தாரை வார்த்துள்ளனர். இதன் தொடர்பாக அந்தச் சொத்து பற்றிய தகவலை நாகூர் சார்பதிவாளரிடம் தகவல் கேட்டு விண்ணப்பித்தோம். அதற்கு 1 மாதக் காலத்திற்குப் பின்னர் நாம் கோரிய தகவலுக்கு முறையான மறுமொழி அளிக்காமல், “சொத்து இருக்கும் இடம், புல எண், பரப்பு, நான்கெல்லை, உரிமையாளர் பெயர் போன்ற விபரங்கள் அடங்கிய வில்லங்க மனு அளித்துத் தகவல் பெற்றுக்கொள்ள இதன் மூலம் அறிவிக்கப்படுகிறது” என்ற மடல் வந்தது.

 இதுபோன்று நாகப்பட்டினம் மாவட்டம், வவ்வாலடியில் முகையதீன் ஆண்டவர் பள்ளிவாசல் பற்றிய தகவலைக்கோரினோம். அத்தகவலுக்கு தஞ்சாவூரில் உள்ள வக்பு வாரியக் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் உரூ.8 பணம் வரைவோலை எடுத்துத் தகவலைப் பெற்றுக்கொள்ளவேண்டும் என மடல் வந்தது. அதன்படி நாம் உரூ.8 வரைவோலை எடுத்து அனுப்பித் தகவலைப் பெற்றுக்கொண்டோம். தகவல் அறியும் உரிமைச்சட்டப்படி தெரிந்தே தவறான அல்லது தொடர்பில்லாத தகவலை தருகின்ற பொதுத்தகவல் அலுவலருக்குத் தண்டனை அல்லது தண்டத்தொகை விதிக்கவேண்டும் என்ற விதி உள்ளது.

 அதன்படி நமக்கு அனுப்ப வேண்டிய தகவலை ஆங்கிலத்தில் புரியாத வகையில் கொடுத்து பொதுத்தகவல் ஆணையர் சிறிய எழுத்தில் அனுப்பி உள்ளார். அதற்கு மேல்முறையீடு செய்துள்ளோம்!

(தொடரும்)

83vaigaianeesu_name