பிற கருவூலம் – இளைய விகடன் (சூனியர் விகடன்)

 

தமிழ்முறை குடமுழுக்கு… தடைபோடும் அதிகாரிகள்!

 துரை.வேம்பையன்

 இராசமுருகன்

  ‘‘இதுவரை இரண்டு கோயில்களில் தமிழ்முறைப்படி தேவாரம், திருவாசகம் பாடிக் குடமுழுக்கு செய்துள்ளோம். ஏற்கெனவே தமிழ்முறைப்படி குடமுழுக்கு செய்த சிவன் கோயிலுக்கு, இப்போதும் தமிழ் முறைப்படி குடமுழுக்கு செய்ய விரும்பும் எங்களின் முயற்சிக்கு இந்துசமய அறநிலையத் துறை அதிகாரிகள் முட்டுக்கட்டை போடுகிறார்கள்’’ என்று குமுறுகிறார்கள் திருமக்கூடலூர் மக்கள்.

  கரூர் மாவட்டம், மண்மங்கலம் ஒன்றியத்தில் உள்ளது திருமக்கூடலூர். இந்த ஊர் மக்கள், கோயில் குடமுழுக்கு, திருமண நிகழ்ச்சிகள், புதுமனை புகுவிழா என மங்கல நிகழ்வுகளைத் தமிழ்முறைப்படியே நடத்துகிறார்கள். தங்கள் குழந்தைகளுக்கும் தமிழ்ப் பெயர்களையே வைத்து அசத்துகிறார்கள். இந்த ஊரில்  இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் இருக்கும் 500 வருடங்கள் பழமையான மணிமுத்தீசுவரர் சிவன் கோயிலுக்கு, 2002-ஆம் ஆண்டு தமிழ்முறைப்படி தேவாரம், திருவாசகம் பாடிக் குடமுழுக்கு செய்தனர். சில தினங்களுக்கு முன்பு, இதே ஊரில் இருக்கும் அ/மி பகவதி அம்மன் கோயிலையும் புனரமைத்து, தமிழ்முறைப்படி குடமுழுக்கு செய்துள்ளனர். “மணிமுத்தீசுவரர் கோயிலுக்குக் குடமுழுக்குச் செய்து 16 வருடங்கள் ஆகிவிட்டதால், மறுபடியும் குடமுழுக்கு செய்ய முயல்கிறோம். இதற்கு இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் முட்டுக்கட்டை போடுகிறார்கள்” என்று ஊர் மக்கள் கொந்தளிக்கிறார்கள்.

  திருமக்கூடலூர் திலீபன், ‘‘எங்கள் ஊர் மக்களுக்கு தமிழ்ப்பற்று அதிகம். கடந்த 100 வருடங்களாக, ‘திருமக்கூடலூர் தமிழ் மன்றம்’ என்கிற அமைப்பை நடத்தி வருகிறோம். ஊரில் நடக்கும் திருமணங்கள் முதலான நிகழ்வுகள் அனைத்தையும் பெரியவர்கள் திருக்குறள் படித்து, தமிழ்முறைப்படியே நடத்துகிறோம். 20-க்கும் மேற்பட்ட தமிழ் ஆசிரியர்கள் எங்கள் ஊர் மக்களுக்கு தமிழ்ப்பற்று ஏற்படக் காரணமாக இருந்துள்ளனர். 2002இல், மணிமேகலை உடனுறை மணிமுத்தீசுவரர் ஆலயத்தைச் செப்பனிட்டு, தமிழ்முறைப்படி தேவாரம், திருவாசகம் பாடல்களைப் பாடிக் குடமுழுக்கு செய்தோம். அறநிலையத் துறைக்குச் சொந்தமான ஆலயம் என்பதால், தமிழ்முறைப்படி எங்களை அவர்கள் குடமுழுக்கு செய்ய முதலில் அனுமதிக்கவில்லை. பெரிய அளவில் போராட்டம் நடத்திய பிறகுதான் அனுமதி கிடைத்தது’’ என்றார்.

  இந்த ஊரைச் சேர்ந்த பெண்களான பத்மா மற்றும் பக்தாள், “எங்கள் ஊர் நுழைவுவாயில் வளைவிலும், ஊர் சார்பாகக் கட்டப்பட்டுள்ள திருமண மண்டபத்திலும், ‘தமிழ் மன்றம்’ என்று எழுதிவைத்திருக்கிறோம். கடந்த 100 வருடங்களாக ஊர் சாமியாக இருந்து எங்களைக் காப்பாற்றிவரும்  அ/மி பகவதி அம்மன் கோயில், ஒரு கொட்டகையில் இருந்தது. அந்தக் கோயிலைப் பெரிய அளவில் எடுத்துக்கட்டி, தமிழ்முறைப்படி குடமுழுக்கு விழா நடத்தினோம். கோவை பேரூரில் உள்ள மணிவாசகர் திருப்பணி மன்றத்தைச் சேர்ந்த குமரலிங்கமும், கரூர் உப்பிடமங்கலம் அடியார்க்கு எளியர் கோயிலைச் சேர்ந்த சிவ.செந்திலும் சேர்ந்துதான் குடமுழுக்கு செய்துவைத்தார்கள். ‘எங்கும் தமிழ், எதிலும் தமிழ்’ என்பதுதான் எங்கள் ஊர் மக்களின் தாரக மந்திரம்’’ என்றார்கள்.

வழக்கறிஞர் தமிழ் இராசேந்திரன், ‘‘2002ஆம் ஆண்டு மணிமுத்தீஸ்வரர் கோயிலைப் புனரமைத்து, முருகானந்தம் என்பவரின் தலைமையில் தமிழ் முறைப்படி குடமுழுக்கு செய்ய மக்கள் முயன்றனர். அப்போது, தமிழக அரசின் கோயில் திருப்பணிகள் மற்றும் குடமுழுக்குக் குழு அதை எதிர்த்தது. ‘சமசுகிருத மந்திரங்கள் சொல்லியே குடமுழுக்கு செய்ய வேண்டும். மீறித் தமிழில் செய்தால், ஊரில் மழை இருக்காது. ஆற்றில் தண்ணீர் வராது. ஊரே வறண்டு போகும்’ என்று கரூர் மாவட்ட ஆட்சியர், இந்துசமய அறநிலையத்துறை திருச்சி ஆணையர், கரூர் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர்ஆகியோருக்குக் கடிதம் போனது. இதனால், தமிழ்முறைப்படி குடமுழுக்கு செய்வதை இந்த மூன்று அதிகாரிகளும் கடுமையாக எதிர்த்தார்கள். கரூர் உரிமையியல் வழக்கு மன்றத்தில் கோவையைச் சேர்ந்த இராமச்சந்திரன் என்பவர், ‘திருமக்கூடலூர் மணிமுத்தீசு வரர் ஆலயத்திற்கு ஆகம விதிகளை மீறித் தமிழ்வழியில் குடமுழுக்கு செய்ய அனுமதிக்கக் கூடாது’ என்று வழக்கு போட்டார். ஆனால், ‘எந்தத் தடை வந்தாலும் தமிழ்முறைப் படிதான் குடமுழுக்கு செய்ய வேண்டும்’ என ஊர் மக்கள் சபதம் போட்டார்கள்.

 கரூர் திருநீலகண்டர் மண்டபத்தில் என் தலைமையில் நாங்கள் ஆலோசனைக் கூட்டம் நடத்தினோம். அந்தக் கூட்டத்திற்குப் பன்னாட்டுத் தமிழுறவு மன்றத் தலைவர் வா.மு.சேதுராமன், பேராசிரியர் மு.தெய்வநாயகம் உள்ளிட்ட தமிழ் ஆர்வலர்களை அழைத்துவந்து, ஆலோசனை செய்தோம். ‘தடைகளை முறியடித்து தமிழ்முறைப் படி குடமுழுக்கு செய்ய வேண்டும்’ என உறுதி எடுத்தோம். எங்களின் அதிரடி போராட்டங்களால், வேறுவழியில்லாமல் அப்போதைய கரூர் மாவட்ட ஆட்சியரும் மாவட்ட க் காவல் கண்காணிப்பாளரும் தமிழ்முறைப்படி குடமுழுக்கு செய்ய அனுமதித்தனர். தமிழ்முறை குடமுழுக்குக்கு எதிரான வழக்கை நான், வழக்கறிஞர்கள் பி.ஆர்.குப்புசாமி, சீவானந்தம் மூவரும் சேர்ந்து வாதாடி, அந்த வழக்கைத் தள்ளுபடி செய்யவைத்தோம்.

  அதைத் தொடர்ந்து தமிழ்முறைப்படி குடமுழுக்கு செய்யப்பட்டது. அப்போது, ‘தமிழ்முறைப்படி குடமுழுக்கு செய்ததைக் கேள்விப்பட்டதும், காதில் தேனாறு பாய்ந்தது’ என முரசொலியில் கருணாநிதி எழுதினார். குடமுழுக்குக்கு மறுநாள், திருமக்கூடலூரில் பெரும் மழை பெய்தது. அதேபோல, இப்போது அ/மிபகவதி அம்மன் கோயில் குடமுழுக்கு நடப்பதற்கு முதல்நாள், மழை கொட்டோ கொட்டென்று கொட்டியது. ஆற்றிலும் தண்ணீர் போனது.

  மணிமுத்தீசுவரர் ஆலயத்திற்கு குடமுழுக்கு நடத்தி 16 வருடங்கள் ஆகிவிட்டன. ஆகம விதிகள்படி, 12 வருடங் களுக்கு ஒருமுறை குடமுழுக்கு நடத்த வேண்டும். மறுபடியும் மணிமுத்தீசுவரருக்கு குடமுழுக்கு நடத்த அனுமதி கேட்டு நான்கு வருடங்களாக ஊர் மக்கள் போராடி வருகிறார்கள். ‘தமிழ்முறைப்படி குடமுழுக்கு நடத்தினால், ஆட்சியில் உள்ளவர்களுக்கு ஆபத்து’ என்று புரளி கிளப்பி விட்டு, குடமுழுக்கு செய்ய விடாமல் தடுத்துவருகிறார்கள். ஆகம விதிகளை மீறுவது அவர்கள்தான். நமது தாய்மொழி இறைவனுக்குப் புரியாதா? இந்து சமய அறநிலையத் துறை இதற்குப் பதில் சொல்லிவிட்டு, சமசுகிருத முறைப்படிக் குடமுழுக்கு செய்யட்டும். அறநிலையத்துறை என்ன தடை போட்டாலும், இந்தக் கோயிலில் இந்த முறையும் தமிழ்முறைப்படிதான் குடமுழுக்கு நடைபெறும்” என்றார் உறுதிமிக்க குரலில்.

  இது தொடர்பாக, கரூர் இந்து சமய அறநிலையத் துறை இணை ஆணையர் சூரியநாராயணனிடம் விளக்கம் கேட்டோம். “திருமக்கூடலூர் மணிமுத்தீசுவரர் ஆலயத்திற்குக் குடமுழுக்கு நடத்துவது தொடர்பாக ஒரு குழு போடப் பட்டுள்ளது. கும்பாபிஷேகம் சம்பந்தமான ஏற்பாடுகள் செய்யப்பட உள்ளன” என்றார்.

 அவரிடம், “2002இல் நடத்தியதைப்போல், இப்போதும் தமிழ்முறைப்படி குடமுழுக்கு நடத்த மக்கள் விருப்பப்படுகிறார்கள். அறநிலையத்துறை அதற்கு ஒத்துழைக்குமா?” என்று கேட்டோம். அதற்கு, “அதுபற்றிக் கோப்பைப் பார்த்துவிட்டுத்தான் சொல்ல முடியும்” என்றார். ஆனால், “இணை ஆணையர் சொன்னது போல் மணிமுத்தீசுவரர் ஆலயத்துக்குக் குடமுழுக்கு நடத்த எந்தக் குழுவும் இதுவரை போடப்படவில்லை” என்கிறார்கள் திருமக்கூடலூர் மக்கள்.

– துரை.வேம்பையன்

படங்கள்: நா. இராசமுருகன்

இளைய விகடன் – 15.07.2018