தினகரன் வெற்றிவாய்ப்பால் நிறுத்தப்பட்ட இடைத்தேர்தல்! – இலக்குவனார் திருவள்ளுவன்
தினகரன் வெற்றிவாய்ப்பால் நிறுத்தப்பட்ட இடைத்தேர்தல்!
அதிமுக தலைவி நலக்குறைவால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டபொழுதே அடுத்த ஆட்சி தம்முடையதுதான் எனக் கனவு கண்டு தலை கால் புரியாமல் குதித்தன பாசகவின் தலைகள். அவர் மறைந்த பின்னர், உடனடியாகத் தம் கைப்பாவையான ஆட்சியை நிறுவினர். உண்மை புரிந்து ஆளுங்கட்சி விழித்துக்கொண்டு கைப்பாவையை மாற்றினர். அதன்பின்னரும் பாசக, ஆளுங்கட்சியில் பெரும்பிளவு ஏற்படும் எனக் கனவு கண்டு முயற்சியும் மேற்கொண்டு கானல்நீராய்ப் போனது. இருந்தும் ஆசை யாரை விட்டது? அதிகாரம் கையில் இருக்கும் பொழுது இது கூட முடியாவிட்டால் இழுக்கென்று எண்ணிப் பலவழிகளில் ஈடுபட்டது. அவற்றில் சிலதான் கட்சிப்பெயரையும் கட்சிச் சின்னத்தையும் பயன்படுத்த விதித்த தடை.
சசிகலா அணியைச் சேர்ந்த தினகரன் தோற்றுப்போவார் என்பதுபோல் ஊடகம் மூலம் பரப்பப்பட்டது. ஆனால், நாளொருமேனியும் பொழுதொரு வண்ணமும் தினகரனுக்குச் செல்வாக்கு கூடியது. பன்னீர் அணி வேட்பாளர் தெலுங்கர் என்றதும் அவர் பக்கம் இருந்த ஒரு பகுதியினர் நாம்தமிழர் கட்சி முதலான பிற கட்சிகள் பக்கம் செல்லத் தொடங்கினர். பன்னீர் அணி வாக்கு பிணைத்தொகையைக்கூடப் பெறமுடியாமல் போகும் என்பது மட்டுமல்ல பாசகவின் வேட்பாளர் கங்கை அமரனும் பாசக எதிர்பார்த்தபடி இரண்டாவது அல்லது மூன்றாவது இடத்திற்கு வர முடியாது என்பதைப் புரிந்துகொண்டனர்.
அரசியல் சதிராட்டத்தில் வல்லவர்கள், சதியாட்டத்தைத் தொடர்ந்தனர். சசிகலா அணி(தினகரன்) வென்றால் அவர் சார்ந்த அதிமுக தான் உண்மையான அதிமுக என்பது உறுதியாகிவிடுமே என்ற கவலை வந்தது. எனவேதான் இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலை நிறுத்தச் செய்துவிட்டனர் எனப் பொது மக்கள் கருதுகின்றனர்.
கோடிக்கணக்கான பணம் விளையாடி இருக்கும் பொழுது் அதைத்தடுக்க எடுத்த நடவடிக்கையைப் பாராட்டாமல் ஊழல் பெருச்சாளிகளை ஆதரிக்கலாமா எனச் சிலர் எண்ணுவர்.
நேர்மையான, ஊழலற்ற ஆட்சி வேண்டுமெனில் குறுக்குவழி வாக்கு வேட்டைகளுக்கு இடமில்லாத நேர்மையான தேர்தல் தான் தேவை. ஆனால், எல்லா இடங்களிலும் ஊழலுக்கு இடம் வகுத்துவிட்டுத் தன்னிடம் முழுமையாக அடிபணியாத காரணத்தால் அதைக்காரணமாகக் கூறி நடவடிக்கை எடுப்பது எப்படி நடுவுநிலையாகும்?
நடந்து முடிந்த பொதுத்தேர்தலில் அனைத்துத் தொகுதிகளிலும் பணம் விளையாடினாலும், அரவக்குறிச்சி, தஞ்சாவூர் தொகுதிக்கான தேர்தல்கள்மட்டும் ஒத்திவைக்கப்பட்டன. ஆனால், மறு அறிவிப்பில் தேர்தல் நடந்தபோது, குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான வேட்பாளர்களுக்குத் தடைவிதிக்கவில்லை; அவர்களது கட்சிகளுக்கும் அத்தொகுதிகளில் தடை விதிக்கவில்லை. குற்றச்சாட்டிற்கு உள்ளானவர்களே தேர்தலில் வாகை சூடினர்.
அதே நிலைதான் இங்கும் வரும் பொழுது தேர்தலை ஒத்திவைப்பதால் என்ன பயன்?
ஒருவேளை கட்சிக்குத் தடைவிதித்தாலும் கட்சிசாராத் தனியராகக் கட்சியாளை நிறுத்தி கட்சியினர் வெற்றியை எட்டுவர்
ஊழலுக்கு உடன்படாத கட்டுப்பாட்டுடன் வாழ்வதற்கு மக்களிடம் மாற்றம் ஏற்படாதவரை, எந்தத் தேர்தல் திருத்தத்தாலும் பயனில்லை.
கடுமையான பாதுகாப்பு நடைமுறைகளையும் கூடுதல் அலுவலர்கள் எண்ணிக்கையையும் கூடுதல் கண்காணிப்பையும் வைத்திருந்தும் வாக்கு வணிகம் நடைபெற்றுள்ளது எனில், தேர்தல் ஆணையம் எதற்கு? ஓர் இடைத்தேர்தலைக்கூட நடத்த துப்பு கெட்ட மத்திய அரசு எப்படி நாடுமுழுவதுமான தேர்தலை நேர்மையுடன் நடத்தும் என இப்பொழுது மக்கள் கேட்கத் தொடங்கிவிட்டனர்.
ஒத்திவைக்கப்பட்டதால் இதுவரை ஆனத் தேர்தல் செலவும் இனித் தேர்தல் நடத்தும் பொழுது ஏற்படும் தேர்தல் செலவும் மக்கள் வரிப்பணத்தில்தானே வீணடிக்கப்படுகின்றன. பணமுடையவனே வாக்கு உடையவன் என்றால், ஒவ்வொரு தொகுதி்யையும் தனித்தனியே ஏலத்திற்கு விட்டுக்கிடைக்கும் பணத்தில் அந்தத் தொகுதியின் நலத் திட்டங்களை நிறைவேற்றலாமே! எதற்குத் தேர்தலுக்கான வீண் செலவு.
அதே நேரம், ஆரிய ஆட்சியைத்திணிக்க முயலும் பாசகவின் கனவை நனவாக்கத் தமிழ்மக்கள் இடந்தரமாட்டார்கள். எனவே, பாசக குறுக்குவழிகளில் புகுவதைவிட்டுவிட்டு மக்கள்நலனில் கருத்து செலுத்தட்டும்!
வேட்பாளர்களுக்கும் வேண்டுகோள்! வாக்காளர்களுக்கு மொத்தமாகக் கோடிக்கணக்கில் பணம்அல்லது பண மதிப்புஉள்ள பொருள்களைத் தரும் நீங்கள், அத் தொகையில் குறைந்த கட்டணத்தில் கல்விநிலையங்கள், மருத்துவமனைகள், வேலைவாய்ப்புகளுக்கான தொழிலகங்களைத் திறக்க ஆவன செய்வீரகளாக!
பேதைமையுள் எல்லாம் பேதைமை காதன்மை
கையல்ல தன்கட் செயல். (திருவள்ளுவர், திருக்குறள் 832)
[தன்னால் இயலாத செயல்களை விரும்பி, அவற்றில் தலையிடுவது, என்பது பேதைமைகளில் எல்லாம் மிகப்பெரிய பேதைமையாகும்.( கலைஞர் மு.கருணாநிதி உரை)]
– இலக்குவனார் திருவள்ளுவன்
பா.ச.க-வின் உச்சந்தலையில் குட்டும் கட்டுரை! ஆனால், அவர்களுக்கு இது உரைக்குமா என்பது ஐயமே!
தினகரனுக்கு வெற்றி வாய்ப்புக் கூடியதால் இந்தத் தேர்தல் நிறுத்தப்பட்டதா என்பது எனக்குத் தெரியாது. ஆனால், பா.ச.க., இந்தத் தேர்தலில் வெல்ல முடியாது என்பது உணரப்பட்டதால் நிறுத்தப்பட்டது என்பது மட்டும் உறுதி. பா.ச.க-வால் வெல்ல முடியாது என்பதற்காகவெல்லாம் தேர்தலை நிறுத்துவதாக இருந்தால் இடைத் தேர்தல் மட்டுமில்லை, தமிழ்நாட்டில் சமூக வலைத்தளத் தேர்தல் கூட நடத்த முடியாது என்பதைத் தேர்தல் ஆணையம் புரிந்து கொள்ளட்டும்! 😀