தேவயானியும் இந்திய அரசின் முகங்களும் – இதழுரை
தேவயானி யார்? நாட்டிற்காக உழைக்கும் நல்லோர் எனப் பாராட்டு பெறுபவரா? மக்களுக்காகப் பாடுபடும் பண்பாளர் என்று போற்றப் பெறுபவரா? பதவியில் நேர்மை மிக்கவர் என்ற சிறப்பைப் பெற்றவரா? இதற்கு முன்பு வரை ஆதர்சு ஊழல்தான் அவர் அடையாளமாக இருந்தது. நாட்டிற்காக உயிர் நீத்த வீரர்களை மதிக்கும் வகையிலும் அவர்களின் குடும்பத்தினருக்கு உதவும் வகையிலும் மகாராட்டிர அரசு கட்டித்தந்ததுதான் ஆதர்சுவீடுகள்.
பொதுவாகவே அரசு குடியிருப்பில் பெறுவோர் வேறு எங்கும் சொந்த வீடு வைத்திருக்கக்கூடாது என்பதுதான் விதி. மகாராட்டிர அரசிலும் இந்த விதி கடைப்பிடிக்கப்படுகிறது. ஆனால் – ஓய்வுபெற்ற இ.ஆ.ப. அலுவலரான உத்தம் கோப்ரகடேயின் மகளான – மருத்துவப் பட்டம் பெற்று இ.அ.ப. பணியில் உள்ள – தேவயானி, பல வீடுகளுக்கு உரிமையாளராக இருந்தும் ஒதுக்கீட்டைப் பெற்றுள்ளார். எனவே, தவறான முறையில் ஒதுக்கீடு பெற்றதும் குற்றம்! கார்கில் போரில் இறந்தவர்களுடைய குடும்பத்தினருக்கான குடியிருப்பில் ஒதுக்கீடு பெற்றதும் குற்றம்! ஒசிவரா பகுதியிலும் பிற இடங்களிலும் வீடுகள், 11 சொத்துகள் இருக்கின்றன; மகாராட்டிரா தவிரக் கேரளாவின் எர்ணாகுளத்திலும் உ.பி.மாநிலத்தின் கௌவுதம புத்தா நகரிலும் சொத்துகள் உள்ளன. இருந்தாலும் உரூ90 இலட்சம் மதிப்புள்ள வீட்டைக் குறுக்கு வழியில் வாங்க இவர் அஞ்சவில்லை. இவரது தந்தையும் 31 மாடிக்கட்டடமாக அமைந்துள்ள ஆதர்சு குடியிருப்பிலும் ஒரு வீட்டை விலைக்கு வாங்கி உள்ளார்.
பாகிசுதான், இத்தாலி,செருமனி நாடுகளில் இந்தியத் தூதரகங்களின் அரசியல் பிரிவில் பணியாற்றியவர்; 2012 ஆம் ஆண்டு முதல், அமெரிக்காவில் (நியூயார்க்கில்) இந்தியத் தூதரகத்தின் அரசியல், பொருளியல், வணிகம், பெண்கள் செய்பாடுகளுக்கான துணைத் தூதராக உள்ளார்.
வீட்டுப்பணிக்காக இவர், சங்கீதா (இ)ரிச்சர்ட் என்ற பெண்ணை அமர்த்தியுள்ளார். இங்கே மற்றோர் ஊழல் பிறந்தது. மாதச்சம்பளம் உரூபாய் 25,000, மிகைநேரச் சம்பளம் உரூபாய் 5,000 தருவதாகத் தெரிவித்துள்ளார். (தொடக்கத்தில், வேலை பார்க்கும் திறனை அறிவதாகக் கூறிச் சம்பளம் தராமலும் வேலைவாங்கியுள்ளார்.) ஆனால், அமெரிக்க நுழைவுச்சீட்டு பெறுவதற்காக, அங்குள்ள விதிகளின்படி ஊதியம், ஓய்வு, விடுமுறை அளிப்பதுபோல் ஒப்பந்தம் போட்டதாகக் காட்டி உள்ளார். இதன்படி சங்கீதாவின் மாதச் சம்பளம் உரூ.2,70,000. சங்கீதாவுக்குத் தரவேண்டிய சம்பளத்தைத் தராததும் தந்ததுபோல் காட்டுவதும் பதவிக்கேற்ற பண்பான செயலல்ல என்பதுமட்டுமல்லாமல் அமெரிக்கச் சட்ட விதிகளின்படிக் குற்றமாகும். குறைந்த சம்பளம், மிகுதியான கடுமையான வேலை, கூடுதல் சம்பளம் வேண்டி, வேறிடத்தில் பகுதி நேரம் வேலைபார்க்க ஒத்துக்கொள்ளாமை போன்றவற்றால் பணிப்பெண் சங்கீதா வீட்டை விட்டு வெளியேறினார். இதன் தொடர்ச்சியாகவே சங்கீதா மீது தேவயானி தொடுத்த வழக்கும் தேவயானிமீது சங்கீதா கொடுத்த முறையீடும். (விரிவாக அறிய விரும்புவர்கள், தமிழ் விக்கிபீடியா, வினவுதளம் ஆகியவற்றில் காணலாம்.)
அமெரிக்க நுழைவுரிமை விதிகளை மீறியதற்காக அமெரிக்கா அவர்மீது நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்காகத் தளையிடும் பொழுது கைவிலங்கிட்டதாகவும் அம்மணமாக்கி ஆய்வு செய்ததாகவும் இந்திய அரசு குற்றம் சுமத்தியுள்ளது. கை விலங்கிட்டதை மறுக்கும் அமெரிக்கா, அவர்கள் நாட்டு விதிப்படி, தளையிடப்படுபவர்கள் தமக்கோ பிறருக்கோ தீங்கிழைக்கும் எதையும் மறைத்து வைத்திருக்கக்கூடாது என்பதற்காக இத்தகைய ஆய்வு மேற்கொள்வதாகத் தெரிவித்துள்ளது. சரி எது, தவறு எது என்ற வாது வளையத்திற்குள் நாம் போகவில்லை.
இதைக் குற்றமாகச் சொல்லும் இந்தியா என்ன செய்கிறது? ‘தன் குற்றம் நீங்கிப் பிறர் குற்றம் காணுமாறு’ தெய்வப்புலவர் அறிவுறுத்தியதைப் பின்பற்றுகின்றதா? இது குறித்துக் ‘குய்யோ முய்யோ’ என்று கூக்குரலிடுவோர், ஈழத்தில் இசைப்பிரியாக்கள் தாய், தந்தை, உடன்பிறப்பு, கணவன், மகள், மகன் எனப் பிறர் முன்னிலையில் கற்பழிக்கப்பட்ட பொழுதும், மரணத்திற்குப் பின்னரும் பெண்களின் உடைகளைக் களைந்து அறத்திற்கு மாறாக நடந்து கொண்ட பொழுதும், இன்றும் அங்கே பெண்கள், கட்டாயக் கருத்தடைக்கும் கற்பழிப்பிற்கும் ஆளாக்கப்படும் சூழல் நிலவுவதற்கும் எதிராகக் குரல் எழுப்பாமல் இருப்பது ஏன்?
இந்தியக் காவல் நிலையங்கள் என்றாலே ஆண் குற்றச்சாட்டிற்கு ஆளானாலும் அவன் வீட்டுப் பெண்களுக்கு இத்தகைய கொடுமைகள் இழைக்கப்படுவது என்பது எழுதப்படாத விதியாக உள்ளதே! நளினி, மூன்று திங்கள் கருவைச் சுமந்திருந்த தன்னை அம்மணமாக்கிக் கொடுமை செய்து வெற்றுத்தாள்களில் கையொப்பம் வாங்கி ஒப்புதல் வாக்குமூலத்தை உருவாக்கிக் கொண்டார்கள் என்று கூறுகிறாரே! இப்படி வெளிவராத அவலங்கள் மிகுதியாக உள்ளனவே!
அப்துல்கலாம் இந்தியாவின் முதல் குடிமகனாக நாட்டின் குடியரசுத் தலைவராக இருந்த பொழுது இவ்வாறு அமெரிக்காவில் மொட்டைக் கட்டையாய் நிறுத்தப்பட்டாரே! அவர் தமிழ்மகனாக நடந்து கொள்ளாவிட்டாலும் தமிழன் என்பதற்காகத்தான் அப்பொழுது இந்திய அரசு இப்போது போல் அமெரிக்கத் தூதரக அதிகாரிகளுக்கு எதிராக எதுவும் நடவடிக்கை எடுக்கவில்லையா? தேவயானி இந்தியப் பெண் என்றால் அவரது பணிப்பெண் சங்கீதாவும் இந்தியப்பெண்தானே! அவருக்காகத்தானே அமெரிக்க அரசு நடவடிக்கை எடுக்கிறது. அதிகாரி தேவயானிக்குப் பாதுகாப்பு வழங்குவதற்காக அவரை இந்தியா, ஐ.நா. அதிகாரியாக அமர்த்துகிறதே! அப்பதவியில் அமரும் முன்னர்ச் செய்த குற்றங்களுக்கு அப்பதவி பாதுகாப்பு அளிக்கும் என்றால் அது தவறான நிலைப்பாடுதானே! அதைத் துணிந்து செய்யும் இந்தியா, உழைப்புச் சுரண்டலுக்கு ஆளான பணிப்பெண் சங்கீதா மீதுள்ள வழக்குகளையும் முடித்து அவரை விடுவிக்கலாம் அல்லவா?
அமெரிக்காவின் வழக்கு உசாவல் முறை தவறு என்னும் இந்தியா அதற்கு முன்னதாகத் தான் நேர்மைப்பாதையில் காலூன்ற வேண்டும்.
ஈழத்தில் நடைபெற்ற பெண்களுக்கு எதிரான கட்டாய வன்மையான பாலுறவுக் கொடுமைகளுக்குக் காரணமானவர்கள் தண்டிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இப்போதும் தொடரும் அத்தகைய கொடுஞ்செயல்கள் நிறுத்தப்பட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
படைத்துறையினராலும் காவல் துறையினராலும் அதிகார இனத்தவராலும் இதுவரை இந்தியாவில் நிகழ்ந்த கொடுமைகள் கண்டறியப்பட்டு குற்றம் இழைத்தவர்கள் தண்டிக்கப்படவும் ஊறு நேர்ந்தோர் இழப்பீடு பெறவும் ஆவன செய்ய வேண்டும்.
இராசீவு கொலை வழக்கில் இத்தகைய கொடுமைகளுக்கு ஆளான நளினி முதலானவர்களுக்கு விடுதலை வழங்க வேண்டும்.
அவ்வாறில்லாமல் கூக்குரலிடுவது படுத்துக்கொண்டு எச்சில் துப்புவதாகத்தான் பொருள். அல்லது – இதற்கு முன்பு அமைச்சர்கள், கலைஞர்கள், தலைவர்கள் முதலானோருக்கு நேர்ந்த இதே நிகழ்வுகளின் பொழுது அமைதி காத்து, இப்பொழுது கூக்குரலிடுவதால் – தேர்தல் நாடகமாகக் கருதப்படும்.
இதழ் 6
மார்கழி 07, தி.பி.2044
திசம்பர் 22, கி.பி.2013
Leave a Reply