தொல்காப்பிய விளக்கம் – 9 (எழுத்ததிகாரம்)
தொல்காப்பியச் செம்மல் பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனார்
நன்னூலாசிரியர், நெட்டெழுத்தே வேண்டியளவு நீண்டி ஒலிக்கும் என்றும் அதன் அடையாளமாக நெட்டெழுத்தின் பின்னர் அதன் இனக்குற்றெழுத்துத் தோன்றி நிற்கும் என்றும் கூறியுள்ளார்.
இக்கருத்து, தொல்காப்பியத்திற்கு மாறுபட்டது.
தொல்காப்பியர் முன்பு, மூன்று மாத்திரையாக ஒலித்தல் ஓரெழுத்துக்குக் கிடையாது என்றும் (நூற்பா 5) மாத்திரையை நீ்ட்டிச் சொல்ல வேண்டிய இடங்களில் மாத்திரைக்கேற்ப எழுத்துகளைச் சேர்த்து ஒலித்தல் வேண்டும் என்றும் (நூற்பா 6) கூறியுள்ளமை நோக்கத்தக்கது.
42.
ஐ, ஔ, என்னும் ஆயீரெழுத்திற்கு
இகரம் உகரம் இசை நிறைவாகும்.
ஐ, ஔ என்னும் =ஐ, ஔ என்று சொல்லப்படும், ஆயீர் எழுத்திற்கும் = அவ்விரண்டு நெடில் எழுத்துகளுக்கும், இகரம் உகரம் =இ, உ என்னும் இரண்டு குற்றெழுத்துகளும், இசை நிறைவாகும் = (இசை குன்றியவிடத்து) ஓசை நிறைப்பனவாகும்.
முந்தைய நூற்பாவில் அந்தந்த நெட்டெழுத்துகளுக்கு இனமான குற்றெழுத்துகள் வந்து ஓசை நிறைக்கும் என்றார்.
ஐ, ஔ எனும் இரண்டு நெடில்களுக்கும் இனமான குற்றெழுத்துகள் இல்லாமையால், அவற்றுக்கு உரிய குற்றெழுத்துகள் இவையென இந்நூற்பாவில் அறிவிக்கப்பட்டுள்ளது. ‘ஐ’க்கு இகரமும் ‘ஔ’க்கு உகரமும் ஆகும்.
காட்டு : தைய ; கௌஉ
43.
நெட்டெழுத்து ஏழே ஓரெழுத்து ஒரு மொழி.
நெட்டெழுத்துகளாகிய ஏழும் ஒரெழுத்தானாகிய சொல்லாக வரும்.
ஓர் எழுத்தே தனியாக நின்று – பிற எழுத்துகளால் தொடரப்படாமல் – பொருள் தருமாயின் சொல்லாகும்.ஆ என்பது பசு என்னும் பொருள் தரும். கா என்பது சோலை என்னும் பொருள் தரும். இவ்விடங்களில் இவை சொல் எனப்படும்.
44.
குற்றெழுத்து ஐந்தும் மொழிநிறைபு இலவே.
குற்றெழுத்து ஐந்தும் = குற்றெழுத்துகளாகிய ஐந்தும், மொழிநிறைபு இல = ஓரெழுத்தாய் நின்று ஒரு மொழியாய் நிறைதல் இல.
(முந்தைய நூற்பாவினும் இந்த நூற்பாவினும் எழுத்து என்பது உயிரையும் உயிர்மெய்யையும் குறிக்கும்)
45.
ஓர் எழுத்து ஒருமொழி, ஈர்எழுத்து ஒருமொழி
இரண்டு இறந்து இசைக்கும் தொடர்மொழி உளப்பட
மூன்றே மொழிநிலை தோன்றிய நெறியே.
ஓர் எழுத்து ஒரு மொழி = ஓர் எழுத்தான் உண்டாகும் ஒருமொழி, ஈர் எழுத்து ஒரு மொழி = இரண்டு எழுத்தான் உண்டாகும் ஒரு மொழி, இரண்டு இறந்து = இரண்டு எழுத்துகளைக் கடந்து பல எழுத்துகளால் உண்டாகி, இசைக்கும் தொடர்மொழி =சொல்லாக வழங்கும் தொடர்மொழி, உளப்பட மூன்று = சேர மூன்று ஆகும், மொழிநிலை தோன்றிய நெறிய = சொற்கள் உருவாகி வழங்கும் நெறிக்கண்.
தமிழில் எழுத்துகளால் சொற்கள் உண்டாகும் முறைமைபற்றபி மூன்றாகப் பிரித்துள்ளனர். அவை, ஓரெழுத்து ஒரு மொழி, ஈரெழுத்து ஒரு மொழி, பல எழுத்து ஒரு மொழி என்பனவாம்.
இந்நூற்பாவால் ஒன்று, இரண்டு, பல எனக் கணக்கிடும் முறை, பண்டைத் தமிழகத்தில் இருந்ததுஎன்று அறியலாம்.
46.
மெய்யின் இயக்கம் அகரமொடு சிவணும்
மெய்யின் இயக்கம் =தனி மெய்களது வழக்கு, அகரமொடு சிவணும்= அகரத்தோடு பொருந்தும்.
தனி மெய்களைச் சொல்லுங்கால் க, ச, த, ப எனக் கூறுவது எளிதாகும்.
47.
தம் இயல் கிளப்பின் எல்லா எழுத்தும்
மெய்ந்நிலை மயக்கம் மானம் இல்லை.
எல்லா எழுத்தும் = எல்லா எழுத்துகளும், தம் இயல் கிளப்பின் = தமது இயல்பைச் சொல்லுமிடத்து,
மெய்ந்நிலை மயக்கம் = இன்ன எழுத்தோடு இன்ன எழுத்து பொருந்தி வரும் எனும் நிலையினின்றும் மாறுபட்டு வருதல், மானம் இல்லை= குற்றம் இல்லை.
(தொடரும்)
குறள்நெறி : 15.05.1964
Aa
Leave a Reply