(தோழர் தியாகு எழுதுகிறார் 231 : மணிப்பூர்க் கோப்புகள், காதை 6 தொடர்ச்சி)

இனிய அன்பர்களே!

மணிப்பூர்க் கோப்புகள் (MANIPUR FILES)

காதை 7

என் பெயர் (இ)ரெய்னா ஃகாவுகிப்பு. குக்கி இனப் பெண். அகவை 18. நாட்டைக் குலுக்கிய அந்த மே 4 காணொளி 75 நாளுக்குப் பின் வெளிவந்து, உச்சநீதிமன்றத்தை அதிர்ச்சி தெரிவிக்கச் செய்து, இந்தியத் தலைமையமைச்சர் நரேந்திர மோதியைப் பேச வைத்தது அல்லவா? அதன் பிறகு அதே போன்ற பல வன்கொடுமைச் செய்திகள் வந்த வண்ணமுள்ளன. அந்த வன்கொடுமைகைளில் சிக்கிச் சிதைந்த பெண்களில் நானும் ஒருத்தி.

என் கதையைச் சொல்கிறேன், கேளுங்கள். இம்பாலில் புதுச் செக்கோன் வட்டாரத்தில் பிறந்து வளர்ந்தேன். இந்தப் பகுதியில் குக்கி-சோமிக்கள், நாகர்கள், மெய்த்திகள், நேபாளிகள் என்று எல்லா இனத்தவரும் பல்லாண்டுகளாகச் சேர்ந்துதான் வாழ்ந்து வந்தோம். இந்தப் பகுதியில் என் இனத்துக்காகவே ஒரு நாள் என்னை மிருகத்தனமாகத் தாக்குவார்கள் என்று கற்பனையும் செய்ததில்லை நான்.

கலவரம் மூண்ட போது என் குடும்பத்தினர் இம்பாலை விட்டு வெளியேறி விட்டனர். என்னால் அவர்களுடன் சேர்ந்து வெளியேற முடியவில்லை. நான் இசுலாமியர் வசிக்கும் ‘பங்கல்’ வட்டாரத்தில் குக்கித் தோழி ஒருத்தியின் வீட்டில் ஒளிந்திருந்தேன். (முசுலிம்கள் அனைவரையும் பங்கல் என்று குறிப்பிடுவது மெய்த்திகளின் வரலாற்று வழக்கம்.) இந்த இடம் எங்கள் வீட்டிலிருந்து அரை மணிநேரத் தொலைவுதான். இரு வாரக் காலத்துக்கு மேல் அங்கு பதுங்கியிருந்தேன். பங்கல்களுக்கும் கலவரத்துக்கும் தொடர்பில்லை என்பதால் நான் பாதுகாப்பாக இருப்பதாய் உணர்ந்தேன்.

என் தோழியின் கணவர் முசுலிம். அவர் வெளியே போய் தேவைப் பொருட்கள் எல்லாம் வாங்கி வருவார். ஆனால் என்னைப் பொறுத்த வரை பாரதிய சனதா மாநில அரசின் மீது நம்பிக்கை வைத்திருந்தேன். நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவர அவர்கள் ஏதாவது செய்வார்கள் என்று நம்பினேன். நிலைமை சீரடையவில்லை என்றதும் நம்பிக்கை குறைந்து போயிற்று. என் தோழிகள் தங்கள் பாதுகாப்பு பற்றிக் கவலைப்படலானார்கள். இந்த நிலையில்தான் எப்படியாவது என் குடும்பத்திடம் போய்ச் சேர்ந்து விட வேண்டும் என்று நினைக்கலானேன்.

பயணச் செலவுக்காகப் பணம் எடுக்க என் தோழியுடன் புதுச் செக்கொனில் இருக்கும் ஏடிஎம்முக்குப் போய்க் கொண்டிருந்தேன். வெண்ணிற பொலேரோவிலும் நீலநிற சுவிப்ட்டிலும் கும்பலாக வந்த மெய்த்தி ஆண்கள் எங்களை வளைத்துக் கொண்டனர். எங்களை ஆதார் அட்டையைக் காட்டச் சொன்னார்கள். எனக்கு இடம்கொடுத்ததற்காக என் தோழியைத் தாக்கலானார்கள். பிறகு என்னைத் திட்டி அடிக்கத் தொடங்கினார்கள். என் தோழியை விட்டு விட்டு என்னைப் பிடித்து பொலேரோ வண்டிக்குள் தள்ளினார்கள்.

அங்கிருந்து கிட்டத்தட்ட 24 கிலோமீட்டர் தொலைவிலிருந்த வாங்கீ அயங்பேலி என்ற மெய்த்தி இனத்தவர் நிறைந்து வாழும் பகுதிக்கு வண்டி விரைந்தது. வண்டிக்குள்ளும் என்னை அடித்துத் துவைத்துக் கொண்டே வந்தார்கள். உன்னைக் கொன்று விடுவோம், குக்கிகளை ஒருவர் விடாமல் வேட்டையாடி அழிப்போம் என்றார்கள்.

வாங்கீ அயங்குபேலியில் ஆண்களும் பெண்களுமான மேலும் பலர் வந்து சேர்ந்தனர். அவர்கள் பனேக்கு என்னும் மெய்த்திகளின் மரபுச் சேலை உடுத்தியிருந்தார்கள். அந்தப் பெண்கள்தாம் ‘மீரா பைபி’க்கள் (பெண் சுடரேந்திகள்). இவர்களுக்கு அன்னையர் என்ற பெயரும் உண்டு. இந்த அமைப்பு குடிவெறிக்கும் போதைப் பொருள் பயன்பாட்டுக்கும் மனிதவுரிமை மீறல்களுக்கும் பெண்கள் மீதான தாக்குதலுக்கும் எதிராகப் போராடுவதற்கென 1970களில் நிறுவப் பெற்றது. அறப் போராட்டங்களுக்காக அது உலகப் புகழ் பெற்றது.

முதலில் அந்த ‘மீரா பைபி’ பெண்கள் என்னை அடிக்கத் தொடங்கினார்கள். “உங்களைப் போல நானும் ஒரு பெண்” என்று நான் மன்றாடிய போது அவர்கள் இன்னும் கடுமையாகத் தாக்கினார்கள். இந்தப் பெண்கள் இன்னும் சில ஆண்களையும் அழைத்துக் கொண்டார்கள். அந்த ஆண்கள் இலச்சினை பொறித்த கருப்பு நிற T–சட்டை அணிந்திருந்தார்கள். அவர்கள் மெய்த்தி இந்து அமைப்பான அரம்பை தெங்கோல் என்ற அமைப்பைச் சேர்ந்தவர்கள். என்னைக் கொன்று விடும் படி அவர்களுக்குக் கட்டளையிடப்பட்டது.

அந்த ஆண்கள் என் கண்ணைக் கட்டி கையைக் கட்டி இம்பாலின் வட பகுதியில் உள்ள (இ)லங்கோல் மலைக் குன்றுகளுக்கு இழுத்துச் சென்றார்கள். “நாங்கள் சொன்னபடி கேள்” என்று அதட்டினார்கள். என்னை வல்லுறவு கொள்ளப் போவதாக மிரட்டினார்கள். நான் அழுது புலம்பி என்னை விட்டு விடுங்கள் என்று கெஞ்சினேன். ஒருவன் துவக்குக் கட்டையால் ஓங்கியடித்தான். என் கண்களிலும் காதுகளிலும் குருதி வடிந்தது. நான் இணங்க மாட்டேன் என்று தெரிந்ததும் என்னைக் கண்ட படி தடவத் தொடங்கினார்கள்.

நான் உணர்விழந்தேன். விழித்துப் பார்த்த போது என் கீழாடை அவிழ்க்கப்பட்டிருந்தது. அது விடிகாலை நேரம். என்னை அவிழ்த்து விடுங்கள், கடன் கழிக்க வேண்டும் என்றேன். அது உன் கடைசி விருப்பம் என்றால் அப்படியே ஆகட்டும் என்று சொல்லிச் சிரித்தனர். கண்கட்டையும் கைகட்டையும் அவிழ்த்து விட்டனர். நான் சிறிது தூரம் நடந்து சென்று அங்கிருந்து மலையில் உருண்டேன். சேறும் சகதியும் குருதியுமாகச் சாலையில் விழுந்து கிடந்த என்னை ஒரு பங்கல் மிதியூர்தி(ஆட்டோ) ஓட்டுநர் காப்பாற்றினார். வெண்ணிற பொலேரோ வண்டி தொடர்ந்து வரக் கண்டு அருகிலிருந்த விட்ணுப்பூர் காவல் நிலையத்துக்கு எதிரில் கொண்டுபோய் நிறுத்தினார். காவல் நிலையத்துக்கு எதிரில் நான் நிற்கக் கண்ட வெறியர்கள் கிளம்பி விட்டனர்.

ஆனால் மெய்த்திக் காவலர்களை எப்படி நம்புவது? என்னைப் புதுச் செக்கோனில் கொண்டுபோய் இறக்கி விடும்படிக் கேட்டேன். சிவசேனைக்காரரும் முன்னாள் பாசக சட்டமன்ற உறுப்பினருமான டி.டி. ஃகாவுகிப்பு என்னை வரவேற்றுப் பேணினார்.

இம்பாலிலிருந்து சற்றொப்ப 136 அயிரைப்பேரடி(கிலோமீட்டர்) தொலைவில் கொகிமாவில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுச் சிகிச்சை பெற்ற பின் மீண்டும் குடும்பத்தினருடன் ஒன்று சேர்ந்தார். நான் மீண்டு வந்து விட்டேன் என்றாலும் என் குடும்பத்தினரின் கவலை தீரவில்லை. நான் பயங்கரக் கனாக் கண்டு விழித்துக் கத்துவதாக என் தங்கை (உ)டோனா ஃகாவுகிப்பு (வயது 16) சொல்கிறாள்.

இப்போது எங்கே இருக்கிறேன்? எப்படி இருக்கிறேன்? என்று கவலைப்படுவீர்கள் என்பதால் அதைச் சொல்லி முடிக்கிறேன்.

மணிப்பூரில் இம்பாலுக்கு வடக்கே காங்குபோக்குபி மாவட்டத்தில் குக்கி – சோமி இன மக்களுக்காக அமைக்கப்பட்டுள்ள இடம்பெயர்ந்தோர் துயர் தணிப்பு முகாமில் தங்கியுள்ளேன். முன்பு ஏதோ பயிற்சிக் கழகமாக இருந்த இடத்தை இப்போது எங்களுக்கான ஏதிலி முகாமாக மாற்றி அமைத்துள்ளனர். நெல் வயல்கள் சூழ்ந்த இந்த முகாமில் கிட்டத்தட்ட 30 குக்கி-சோமி இனக் குடும்பங்கள் தங்க வைக்கப்பட்டுள்ளோம்.

என் உடலெங்கும் காயங்கள். அதற்காக மருத்துவம் செய்து கொள்கிறேன். நேரம் தவறாமல் மாத்திரைகள் உட்கொள்கிறேன். இந்தக் காயங்கள் ஒரு நாள் ஆறி விடும். ஆனால் எனக்கு மே 15ஆம் நாள் நேரிட்ட அந்தக் கொடுமை தந்த மன வலிக்கு மட்டும் மருந்தில்லை மக்களே! நடந்தவற்றை மறக்க நினைத்தாலும் மறக்க முடியவில்லை. விழிப்பிலும் உறக்கத்திலும் அந்த நினைவுகளும் கனவுகளும் வாட்டி வதைக்கின்றன.

என் கதையைச் சொல்ல இன்னமும் நான் உயிரோடு இருக்கிறேன். நடந்ததை நடந்தபடி சொல்லும் தெளிவோடும் துணிவோடும் இருக்கிறேன். ஆனால் எத்தனையோ குக்கி இனப் பெண்கள் தங்களுக்கு நேர்ந்த கொடுமையைச் சொல்ல இப்போது உயிருடனில்லை. உயிருடன் இருந்தாலும் வெளியே சொல்ல அஞ்சிக் கிடக்கின்றார்கள்.

(தொடரும்)
தோழர் தியாகு

தாழி மடல் 263