பாரதியாரின் வாழ்வியல் கட்டளைகள் 04 – இலக்குவனார் திருவள்ளுவன்
(பாரதியாரின் வாழ்வியல் கட்டளைகள் 03 தொடர்ச்சி)
04
வலிமையை வளர்த்திடுக!
ஆண்மை என்பது ஆண் தன்மை எனக் கருதுவது தவறாகும். உடல் வலிமையுடன் உள்ளத்தின் வலிமையும் கொண்ட ஆளுமைத் திறனே ஆண்மையாகும். வலிமை என்பது பேடிகை வாள்போல் இருந்து பயனில்லை. வீரமும் துணிவும் இணைந்தே இருக்க வேண்டும். எனவே, பாரதியார் வலிமை, வீரம், துணிவு முதலியனவற்றைப் பல்வேறு இடங்களில் வலியுறுத்துகிறார்.
மின் மெலியதைக்கொல்லும்
வலியதனிலே வலிமை சேர்க்கும்
அது நம் வலிமையயை வளர்த்திடுக
(பக்கம் 430 / வசனகவிதை)
வீடுகளைத் திண்மையுறக் கட்டுவோம்
கதவுகளை வலிமையுறச் சேர்ப்போம்
உடலை உறுதிகொள்ளப் பழகுவோம்
உயிரை வலிமையுற நிறுத்துவோம்
உள்ளத்தை உறுதி செய்வோம்
(பக்கம் 444 / வசன கவிதை)
என மின்னலையும் காற்றையும் குறிப்பிடும்பொழுது வலிமையை வேண்டுகிறார்.
“வலிமை என்று பாடிடுவோம்” (பக்கம் 228 / சொல்) என வலிமையை வாழ்த்துகிறார்.
“மதியின் வலிமையால் மானுடம் ஓங்குக” (பக்கம் 457 / வசன கவிதை)
என அறிவின் வலிமையைக் கூறுகிறார்.
வலிமையற்ற தோளினாய் போ போ போ
மார்பிலே ஒடுங்கினாய் போ போ போ
. . . . .
ஒளிபடைதத கண்ணினாய் வா வா வா
உறுதி கொண்ட நெஞ்சினாய் வா வா வா
(பக்கங்கள் 38-39 / போகின்ற பாரதமும் வருகின்ற பாரதமும்)
என நலிவை விரட்டி வலிவை வரவேற்கிறார் பாரதியார்.
வலிமைக்கு அடிப்படையானவற்றை ஆத்திசூடியில் பின்வருமாறு விளக்குகிறார் பாரதியார்.
ஒற்றுமை வலிமையாம் (ஆ.சூ.10)
மந்திரம் வலிமை (ஆ.சூ.75)
ஒற்றுமையைப் பற்றிபாரதியார்,
ஒன்றுபட்டால் உண்டு வாழ்வே – நம்மில்
ஒற்றுமை நீங்கின் அனைவர்க்கும் தாழ்வே
(பக்கம் 181 / வந்தே மாதரம்)
என்பதுபோல் பல இடங்களில் வலியுறுத்தியுள்ளதை நாம் அறிவோம். இதுபோல் இங்கு மந்திரம் என்பது மக்களை ஏமாற்றும்தந்திரத்தையன்று.
மந்திரத்தாலே யெங்கும் – கிளியே
மாங்கனி வீழ்வதுண்டோ (நடிப்பு சுதேசிகள்)
எனச்சாடியவரல்லவா பாரதியார். நிறைமொழி மாந்தரின் மறைமொழியான மந்திரத்தையே பாரதியார் குறிப்பிடுகிறார்.
(தொடரும்)
– இலக்குவனார் திருவள்ளுவன்
(பாரதியாரின் வாழ்வியல் கட்டளைகள் 05)
Leave a Reply