பெரியாரின் பெருந்தொண்டர் திருவாரூர் தங்கராசு மறைந்தார்!
தன்மானத்தை உணர்த்திய தந்தை பெரியாரின் களப்பணிகளில் தளபதிகளாகச் சிலர் விளங்கியுள்ளனர். அவர்களுள் முதன்மையானவர்களுள் ஒருவர் திருவாரூர் தங்கராசு. முத்தமிழ் வாயிலாகக் குறிப்பாக மேடைப்பொழிவிலும் நூலுரையிலும் திரைஉரையாடலிலும் மூடநம்பிக்கைக்கு எதிராகவும் தன்மானத்திற்கும் தன்மதிப்பிற்கும் சார்பாகவும் பெரியாரின் கருத்துகள் குண்டுகளாக வீசப்பட்டன! பெரியாரியத்தின் கேடயங்களாக விளங்கின! ஒழுக்கக்கேடுகளுக்கு எதிராகவும் மறுமணத்திற்குச் சார்பாகவும் அவர் எழுதிய ‘இரத்தக்கண்ணீர்’ திரைப்படம் இன்றளவும் பேசும் காவியமாக விளங்குகிறது! நடிகவேள் எம்.ஆர்.இராதாவிற்குத் தனி முத்திரை பதித்த இத்திரைப்படத்தின் கதை உரையாடல் திருவாரூர் தங்கராசு அவர்கள்தாம்! பின்னரும் சில திரைப்படங்களுக்குக் கதை உரையாடல் எழுதினாலும் முழு நேரத் தொழிலாகத் திரைத் துறையை அவர் தேர்ந்தெடுக்கவில்லை. பெரியாருக்கு எதிர்ப்பு வந்த இடங்களில் வீரனாகக் களமிறங்கினார். இராமாயணம் முதலான புராணக் குப்பைகளுக்கு எதிரான உண்மையை எடுத்தியம்பும் பரப்புரையாளராகத் திகழ்ந்தார்! தமிழ், சமசுகிருதம், ஆங்கிலம் ஆகிய மும்மொழிப்புலமை அவரின் வாதுரைகளுக்கு வலு சேர்க்கும் வகையில் உதவின. பெரியாரின் பெருந்தொண்டர் என்னும் சிறப்பிலே நிறைவு கண்டவர், பெரியார் மறைவிற்குப்பின், திராவிடர் கழகத்துடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் வேறு அணிக்குச் சென்றார். இருப்பினும் பெரியாரின் பாதையில் இருந்து மாறவில்லை. அவ்வாறு மாறக்கூடாது என்பதற்காகத்தானே புதுப்பாதை கண்டவர் அவர்!
பெரியாரின் பரப்புரைத் தளபதியாகத் திகழ்ந்த, 89 அகவை கடந்த, திருவாரூர் தங்கராசு அவர்கள், சனவரி 05, 2014 அன்று மறைந்தார். கலைஞர் மு.கருணாநிதி, விடுதலை ஆசிரியர் வீரமணி, மார்க்சிய-பெரியாரியப் பொது வுடைமைக் கட்சியின் பொதுச் செயலர் வே.ஆனைமுத்து, ஆனூர் செகதீசன் முதலான பெரியார் தி.க.தலைவர்கள் எனப் பலர் அவரது மறைவிற்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.
அகரமுதல இணைய இதழும் மறைந்த பெரியாரின் பெருந்தொண்டர் திருவாரூர் தங்கராசு அவர்களின் குடும்பத்தினரின் துயரத்தில் பங்கு கொள்கிறது. அவரது தங்கராசு நினைவலைகள் நூலினை மலிவுப் பதிப்பாக வெளியிட வேண்டுகிறது!
Leave a Reply