வந்தவாசி பாரதி விழா ;bharathyvizhaa_vandavaasi

குமுகாய அநீதிகளுக்கு எதிராகப் போராடத் தூண்டியவன் மாக்கவி பாரதி

                 – பாரதியாரின் 95-ஆவது நினைவு நாள் விழா –

      வந்தவாசி. வந்தை வட்டக் கோட்டைத் தமிழ்ச் சங்கத்தின் சார்பில் மாக்கவி பாரதியாரின் 95-ஆவது நினைவு  நாள் சிறப்புக் கவியரங்கம் வந்தவாசி எசு.ஆர்.எம். இன்போடெக் கணிணிப் பயிற்சி மையத்தில் ஆவணி 27, 2047 / செட்டம்பர் 12, 2016  நடைபெற்றது.

     இந்நிகழ்விற்கு, வந்தை வட்டக் கோட்டைத் தமிழ்ச் சங்கத் தலைவர் அ.மு.உசேன் தலைமையேற்றார்.

பொருளாளர் எ.தேவா அனைவரையும் வரவேற்றார்.

கவிஞர்கள் பா.சீனிவாசன், வந்தை குமரன், எசு..கார்த்திகேயன், எ.மோகன்தாசு, ஓசூர் சபி  முதலானோர் கவிதைகள் வாசித்தனர்.

வந்தவாசி சன்னதி மேல்நிலைப்பள்ளியின் ஓய்வுபெற்ற தமிழாசிரியர் நேமி.பாசுகரதாசு, பாரதியின் சிறப்புகள் பற்றி உரையாற்றினார்.

    வந்தை வட்டக் கோட்டைத் தமிழ்ச் சங்கத்தின்  அறிவுரைஞர் கவிஞர் மு.முருகேசு, ‘பாரதி எங்கள் சாரதி’ எனும் தலைப்பில் கவிதை உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:

      “மக்கள் வரலாற்றையும் எழுதிய பெருமைக்குரியவன் பாரதி. அனைத்து உயிர்களும் சமம் எனும் பொதுவுடைமைச் சிந்தனையும், ஆணும் பெண்ணும் சமம் எனும் சமத்துவச் சிந்தனையும் உடையவர் பாரதியார். தனது பாடல்களில் குமுகாய விடுதலைக் கருத்துகளை மிகுதியாய்ப் பாடினார்.

     ஆங்கிலேயர்களின்  வல்லாண்மைச் செயல்பாடுகளைத் தனது படைப்புகள் வழியாகச் சாடினார். முதன்முதலாக ‘இந்தியா’ எனும் இதழில் தான் கேலிச்சித்திரங்களைப் பாரதி வெளியிட்டார். ‘இரெளத்திரம் பழகு’ என்றும், ‘அச்சமில்லை அச்சமில்லை…’ என்றும் குமுகாய அநீதிகளுக்கு எதிராகப் போராடும் போர்க்குணமிக்க வரிகளைத் தந்த மாக்கவி பாரதியின் சிந்தனைகளை நம் எண்ணத்தில் ஏந்திப், புதிய குமுகாயம் படைப்பதற்கான பயணத்தைத் தொடர்வோம்” .

     நிகழ்வில், கவிதை வாசித்த அனைத்து மாணவ-மாணவிகளுக்கும் புத்தகங்கள் பரிசாக வழங்கப்பட்டன

-வந்தை அன்பன்