மதுவிற்கு அடிமையாகும் மாணாக்கியர் – வைகோ கவலை
திருநெல்வேலி: “ஈரோட்டில் பள்ளி இறுதியாண்டில் படிக்கும் மாணவியர், மதுக் கடையில் மது அருந்திய செய்தி, தமிழகத்தின் எதிர்காலத்தை நினைத்து கவலையடையச் செய்திருக்கிறது’ எனக், கவலை தெரிவித்திருக்கிறார், ம.தி.மு.க.,வின் பொதுச் செயலர் வைகோ.
இது தொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கை: தமிழகத்தில் பள்ளிகள், கல்லூரிகள், வழிபாட்டுத் தலங்கள் அருகில், த.மா.வா.க.(‘டாசுமாக்’) மதுபானக் கடைகள் இயங்குகின்றன. ஆண்டுக்கு, 24 ஆயிரம் கோடி உரூபாய் வருமானத்திற்காகத் தமிழக அரசு, பண்பாட்டைக் குழிதோண்டி புதைத்து, சமூக அமைதியை கெடுக்கிறது. கொலை, கொள்ளை, கற்பழிப்புகள், சட்டம் ஒழுங்கு சீர்குலைவுக்கு, மது காரணமாக இருக்கிறது. சின்னஞ்சிறு குழந்தைகள்கூட, பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகும் கொடூரங்கள் நடக்கின்றன. ஈரோடு அருகே, பள்ளி இறுதி ஆண்டில் பயிலும் மாணவியர், த.மா.வா.க. (‘டாசுமாக்’) கடையில் மது அருந்திய செய்தி, தமிழ்நாட்டின் எதிர்காலத்தை எண்ணி, கவலை அடையச் செய்கிறது. தமிழக அரசு, த.மா.வா.க. நிறுவனம் மூலம், அதன் மண்டல மேலாளர்களுக்கு அனுப்பியுள்ள உத்தரவில், த.மா.வா.க.(‘டாசுமாக்’) கடைகளை வேறு இடங்களுக்கு மாற்றவே கூடாது என்றும், மீறினால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆட்சியாளர்களுக்கு கொடிய அரக்கக் குணம் இருந்தால் தான், இப்படிப்பட்ட உத்தரவைப் பிறப்பிக்க முடியும். இந்த அரசு ஒரு போதும் திருந்தப் போவது இல்லை என்பதற்கு, இதுவே தக்க சான்று. இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.
Leave a Reply