யாதும் ஊரே யாவரும் கேளிர் 4/8 – கருமலைத்தமிழாழன்
(யாதும் ஊரே யாவரும் கேளிர் 3/8 – தொடர்ச்சி)
யாதும் ஊரே யாவரும் கேளிர் 4/8
காடுகளாய் நம்முன்னோர் வளர்த்து வைத்துக்
கவின்மிகுந்த மரங்களினை வெட்டி வெட்டிக்
கோடுகளாய் மண்ணுடலைப் பிளக்க வைத்துக்
கொட்டிவந்த மழைவளத்தை அழித்த போல
வாடுகின்ற பயிர்கண்டு வாட்டம் கொண்ட
வள்ளலாரின் மனிதநேயம் அழித்து விட்டோம்
பாடுபட்டு யாதும்ஊர் என்ற பண்பைப்
பாதுகாத்துத் தந்ததனைத் தொலைத்து விட்டோம் !
பக்கத்தில் குடியிருப்போர் முகத்தைக் கூடப்
பார்க்காமல் வாழுகின்ற வகையைக் கற்றோம்
துக்கத்தில் துடிப்போரின் குரலைக் கேட்டும்
துடிக்காமல் இயல்பாக நடக்கக் கற்றோம்
நக்கலாகப் பிறர்துயரில் வாடக் கண்டும்
நகைத்தவரை ஏளனமாய்ப் பழிக்கக் கற்றோம்
வக்கிரமே எண்ணமாகி அடுத்தி ருப்போர்
வயிறதனில் அடிப்பதையே தோழிலாய்க் கற்றோம் !
(தொடரும்)
இரண்டாம் உலகத் தமிழ் எழுத்தாளர் மாநாடு
இடம் – இராசரத்தினம் கலையரங்கம், அடையாறு, சென்னை.
நாள் : வைகாசி 26, 2048 / 09 – 06 – 2017
கவியரங்கம்
தலைமை – கவியரசு ஆலந்தூர் மோகனரங்கம்
தலைப்பு – யாதும் ஊரே யாவரும் கேளிர்
பாடுபவர் – பாவலர் கருமலைத்தமிழாழன்
Leave a Reply