தமிழுக்கு முதன்மை இருக்க வேண்டும் என நாம் எதிர்பார்ப்பது எங்கும் அல்ல! தமிழ் மக்கள் வாழும்  தமிழ்நாட்டில்தான் தமிழுக்கான முதன்மையை எதிர்நோக்குகிறோம்! தமிழுக்கான முதன்மை  அகன்று மெல்ல மெல்ல அதன் இருப்புநிலை குறைந்து இன்றைக்குக் கடைநிலைக்குத் தள்ளப்பட்ட வருந்தத்தகு நிலை உள்ளது. இந்த நிலையை மாற்றத் தமிழார்வலர்கள் முன்வரவேண்டும்! அதற்கான முயற்சியில் ஈடுபட்டு வரும் அமைப்புகள், தமிழார்வலர்கள் வரிசையில் அகர முதல இணைய இதழ் இன்றைக்கு வெளிவருகிறது.

கலைத்தந்தை கருமுத்து தியாகராசர் அவர்கள், தம் பொருட்செல்வத்தைத் தமிழ்ச் செல்வம் பேண செலவழித்துத் ‘தமிழ்நாடு’ என்னும் நாளிதழை நடத்தினார். தமிழ்ப்போராளி பேராசிரியர்  சி.இலக்குவனார் அவர்கள் பல்வேறு இலக்கிய இதழ்களை நடத்தி அவற்றின் தொடர்ச்சியாகக் ‘குறள்நெறி’ என்னும் நாளிதழையும் நடத்தினார்.  அவர்கள் வழியில் தமிழ் இதழாக ‘அகர முதல’ வெளிவருகிறது. தமிழ்க்கென வாழ்ந்த பேராசிரியரின் பிறந்தநாளான கார்த்திகை முதல்நாளன்று(நவம்பர் 17),  இவ்விதழ் வெளிவருவதில் மகிழ்ச்சி கொள்கிறோம்.

தமிழை வாழச் செய்வதிலும் வீழச் செய்வதிலும் ஊடகங்கள் முதலிடம் வகிக்கின்றன. அவற்றுள்ளும் இதழ்கள்  தலைமையிடம் வகிக்கின்றன. தவறாகவே கண்டும் கேட்டும் வரும் மக்கள்  தவறுகளையே சரி என ஏற்கும் நிலைக்கு வந்து விட்டனர். அதை மாற்றப் புறப்பட்டதுதான் அகர முதலஇணைய இதழ்!   எனவே, படைப்பாளிகள், தமிழில்  தத்தம் படைப்புகளை அளிக்க வேண்டுகின்றோம்! தமிழ் என்று குறிப்பிடுவது அயலெழுத்துப் பயன்பாடற்ற, அயற்சொல் கலப்பு அற்ற தூய தமிழைத்தான் எனப் புரிந்து கொள்ள வேண்டும்!

சில வேளைகளில் தமிழ் வடிவிலேயே அமைந்து கலந்து விட்ட அயற்சொற்களையும் பழக்கத்தின் காரணமாகச் சிலர் பயன்படுத்தலாம். அதனைக் குற்றமாகக் கருதாமல் அந்நிலை படிப்படியாக மாறும் எனப் படிப்போர் நம்பிக்கை கொள்ள வேண்டுகிறோம்!

இவ்விதழைத்  வார இதழாக நடத்த எண்ணியுள்ளோம்! எனினும் சில இடர்ப்பாடுகளால் தொடக்கத்தில் திங்கள் இருமுறை இதழாக அல்லது திங்கள் மும்முறை இதழாக வரலாம். கால இடைவெளியை இப்போது வரையறுக்க இயலவில்லை.

இவ்விதழ் அகர முதல னகர இறுவாய்(A to Z)  எல்லா வகைச் செய்திகளையும் படைப்புகளையும் தாங்கி வெளிவரும் என்பதால்தான் ‘அகர முதல’ என்னும் பெயர் தாங்கி வருகின்றது.  தமிழ் அமைப்பினரும் கட்சிகளின் கலை இலக்கிய அமைப்பினரும்  நடக்க இருக்கும்  நிகழ்ச்சிகளையும்  நடந்து முடிந்த நிகழ்ச்சிகளையும் படங்களுடன் அனுப்பி வைக்க வேண்டுகிறோம்.

இவ்விதழ் அவ்வப்பொழுது தொல்காப்பியச் சிறப்பிதழ், சங்க இலக்கியச் சிறப்பிதழ், திருக்குறள் சிறப்பிதழ், காப்பியச் சிறப்பிதழ், பதினெண் கீழ்க் கணக்குச் சிறப்பிதழ், சிற்றிலக்கியச் சிறப்பிதழ், தனிப்பாடல் சிறப்பிதழ், இக்கால இலக்கியச் சிறப்பிதழ், சிறுகதைச் சிறப்பிதழ், புதினச் சிறப்பிதழ், பாவியச் சிறப்பிதழ், அறிவியல் சிறப்பிதழ், சட்டவியல் சிறப்பிதழ், கலைச்சொல்லாக்கச் சிறப்பிதழ், கலைச்சிறப்பிதழ், இசைச்சிறப்பிதழ், வீரவணக்கச் சிறப்பிதழ் முதலான பல சிறப்பிதழ்களாகவும் வெளிவரும். மேலும் தமிழ்மக்கள் வாழும் பகுதி சார்ந்த இலக்கியங்களும் ஆன்றோர்கள், தமிழறிஞர்கள், தமிழ்ச்சங்கங்கள், தமிழ் அமைப்புகள் பற்றி்ய விவரங்களும் வெளிவரும். அவற்றிற்கான படைப்புகளை இப்பொழுதே அனுப்பிவைக்கலாம்.

இவ்விதழ் நம்மிதழ் என ஒவ்வொருவரும் கருதித் தத்தம் சார்ந்த செய்திகளையும் தத்தம் படைப்புகளையும் பகிர்ந்து கொள்ள வேண்டுகின்றோம். ஆனால், (நல்ல) தமிழில் அவை அமைய வேண்டும் என்பதை மட்டும் மறக்க வேண்டா!

          தொண்டு செய்வோம் தமிழுக்கு!

          துறைதோறும் துறைதோறும் துடித்தெழுந்தே! (பாவேந்தர் பாரதிதாசன்)

அன்புடன்

இலக்குவனார் திருவள்ளுவன், (ஆசிரியர்)

அருண்.வள்ளியப்பன், (பதிப்பாசிரியர் )

 

எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!