பேரன்புடையீர்,

வணக்கம்.

 தமிழ்ப்பெயர்ச் சொற்களையும் தமிழ் மேற்கோள்களையும்  அவ்வாறே ஆங்கிலத்தில் குறிப்பிடுகையிலும் தமிழ் இலக்கியங்களை ஆங்கில ஒலி பெயர்ப்பில் குறிப்பிடுகையிலும் தமிழ் எழுத்தொலிகளுக்குப் பொருந்தி வரும்  வரிவடிவங்களே ஏற்கத்தக்கன. இப்பொழுது வெவ்வேறு வகையாகப் பின்பற்றப்படுகின்றன. சிலர்,  ஙகர, ஞகர, நகர, ணகர, னகர வேறுபாடுகளோ லகர, ளகர, ழகர வேறுபாடுகளோ ரகர, றகர வேறுபாடுகளோ தேவையில்லை என ஒரே ஆங்கில வரிவடிவத்தையே அனைத்திற்கும் பயன்படுத்துகின்றனர்.

  ஒரு மொழியின் எழுத்தொலிகளைப் பிற மொழியின் வரிவடிவங்களில் அதே  ஒலிப்பு முறையில் கொணருவது இயலாத ஒன்றுதான். ஆதலின், உரோம எழுத்துருவிலான ஆங்கில வரிவடிவங்களில் தமிழின் அனைத்து எழுத்தொலிகளுக்கும் இணையான  வடிவங்களை எதிர்பார்க்க இயலாதுதான். எனினும், தமிழ் எழுத்தொலிகளின் வேறுபாடுகளை உணர்த்தும் வகையில் அவை இருந்தால்தான் அவை உயிர்ப்புத் தன்மையுடன் விளங்கும். இல்லையேல்  தமிழ் மரபினைச் சிதைப்பதாகவே அமையும்.

  சான்றாக ‘ஆழாக்கு’ என்னும் அளவைச் சொல்லை ஆங்கிலத்தில் குறிப்பிடுகையில் ‘alakku’  என்றால் போதும்; ‘வேலி’ என்னும் நில அளவையை ‘வெளி’ என்று குறித்தால் போதும் என்பனபோல்  ஒருங்குகுறி சேர்த்தியத்திற்குச் சமசுகிருதர் ஒருவர் முன்மொழிந்துள்ளார். ‘அளக்கு’ என்றால் நம் தமிழில் உள்ள முகத்தல் அளவையின் சிறப்பை உணர்த்தாது; ‘வெளி’ என்பது பரந்த நிலப்பரப்பைத்தான் குறிக்குமேயன்றி நில அளவையைக் குறிக்காது.   இதை உணராத் தமிழார்வலர்களும் சமற்கிருதரின் கருத்து சரியென்கின்றனர். தொல்காப்பியம், திருக்குறள், நெடுநல்வாடை, பரிபாடல், அகநானூறு, புறநானூறு முதலான அனைத்து நூல்களும் புலவர்களின் பெயர்களும் உரிய எழுத்தொலி வேறுபாட்டை உணர்த்தும் வகையில் அமைதலே சிறப்பாகும். ‘நாராயணன்’ என்பதற்கு ஒரே எழுத்து வடிவமான ‘என்/N’ வரிவடித்தைப் பயன்படுத்துவதுபோல் ஒலிவேறுபாடுடைய தமிழ் எழுத்துகளுக்கு ஒரே ஒலிபெயர்ப்பு வடிவத்தைப் பயன்படுத்துவது சிறப்பாகாது. 

  இலக்கியம் கற்றலுக்கு உதவுவன தனித்தனி ஒலிவடிவங்களை வேறுபடுத்திக்காட்டும் வரிவடிவங்களே ஆகும்.  தமிழ்நாடு என்பதே டமில்நடு என்றும் தமிழ்மொழி  என்பது டமில்மொலி என்றும்தானே ஆங்கிலத்தில் எழுதி ஒலிக்கப் பெறுகிறது.  இத்தகைய குறைகளை நாம் முதலில் ஆங்கில ஒலிபெயர்ப்பிலும் அடுத்துப் பிறமொழிகளுக்கான ஒலி பெயர்ப்பிலும் நீக்க வேண்டும்.

  எனவே, ஒலிபெயர்ப்பில் எவ்வாறு தமிழ் எழுத்தொலிகளைக் குறிப்பது என்பது குறித்த கலந்துரையாடலுக்குத் தமிழ்க்காப்புக் கழகம், தமிழ்க்காப்புஅமைப்புகள் பலவற்றுடன் இணைந்து ஏற்பாடு செய்துள்ளது. பங்குனி 23, 2045/ஏப்பிரல் 6.2014 அன்று முற்பகல் 10.00 மணிக்கு இந்நிகழ்வு நடைபெறும்.  நிகழ்விடம் முடிவானதும் தெரிவிக்கப்பெறும்.

 இக்கலந்துரையாடலின் அடிப்படையிலான பரிந்துரையை அரசிற்கு அனுப்பி வைத்தால் தொடர் நடவடிக்கை எடுப்பதாகத் தமிழ்வளர்ச்சிச் செயலர் முனைவர்  மூ.இராசாராம் இ.ஆ.ப. அவர்களும் தகவல் தொழில்நுட்பத் துறைச் செயலர் திரு தா.கி.இராமச்சந்திரன் இ.ஆப. அவர்களும் ஊக்கப்படுத்தி உள்ளனர்.

  இக்கலந்துரையாடலில் நேரில் பங்கேற்க விரும்புநர்  தங்கள் விருப்பத்தை உடன் தெரிவிக்க வேண்டப்படுகின்றனர். நேரில் பங்கேற்கும் வாய்ப்பு இல்லாதவர்களின் முன் மொழிவுகளும் தமிழ்நாட்டிற்கு அப்பாலுள்ளவர்களின் கருத்துகளும் பரிந்துரை முடிவெடுக்கச் சிறப்பாக அமையும். தமிழ் இலக்கியங்களை ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கும் படைப்பாளர்களும் அவற்றின் படிப்பாளர்களும் இது தொடர்பில் கருத்து தெரிவிப்பது மிகவும் பயன்பாட்டு நோக்கில் அமையும்.

  எனவே, இவைகுறித்த கருத்துகளை   (வ.எண், தமிழ் எழுத்தொலி, ஆங்கில வரிவடிவம், எடுத்துக்காட்டுத் தமிழ்ச் சொல்லும் உரிய  ஒலிபெயர்ப்பிலான ஆங்கிலச் சொல்லும் என்ற முறையில்) அட்டவணையுடன் இணைத்து, 30.03.14 ஆம் நாளுக்குள் thamizh.kazhakam@gmail.com  மின்வரிக்கு அனுப்பி வைக்குமாறு தமிழ் ஆர்வலர்கள் வேண்டப்படுகின்றனர்.

 அஞ்சலில் அனுப்புவோர், தமிழ்க்காப்புக்கழகம், இலக்குவனார் இல்லம், 23 எச்., ஓட்டேரிச்சாலை, புழுதிவாக்கம், சென்னை 600091 (பேசி 9884481652) முகவரிக்கு அனுப்புமாறு வேண்டப்படுகின்றனர்.

  இக்கலந்துரையாடலில் தங்களை இணைத்துக்கொள்ள விரும்பும் தமிழ்க்காப்பு அமைப்புகளும் தங்கள் இசைவைத் தெரிவிக்க வேண்டப்படுகின்றனர்.

  ஒலி பெயர்ப்பிற்கான சீரான முறையை வரையறுப்பின் படைப்பாளர்களுக்கு உறுதுணையாக அமையும். தமிழ்ப் பின்னங்களையும் குறியீடுகளையும் ஆங்கில  ஒலிபெயர்ப்பில் குறிப்பிட முயலும் ஒருங்குகுறி  சேர்த்தியத்திற்கும் (Unicode Consortium) அதற்கான ஏற்பாடுகளைச் செய்து வரும் தமிழ் இணையக்கல்விக்கழகத்திற்கும் இக்கலந்துரையாடல் தக்க வழிகாட்டியாக அமையும்.

ஒத்துழைப்பை நாடும் அன்பன்

இலக்குவனார் திருவள்ளுவன்

தலைவர், தமிழ்க்காப்புக்கழகம், சென்னை.

09.03.2045 / 23.03.2014

“எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!”

thamizhmozhi_thulanguka