‘‘உயிருடன் ஒப்படைத்த எங்கள் உறவுகள் எங்கே..?’’

‘‘காணாமல் போனதாகச் சொல்லப்படுகிற 20,000 பேரும் உயிருடன் இல்லை… இறந்துவிட்டனர்…’’  – மரண வியாபாரி கோதபாய இராசபச்சவின் இந்தப் பொறுப்பற்ற வாக்குமூலம், பல்வேறு கேள்விகளை எழுப்பியிருக்கிறது.

  1. காணாமலாக்கப் பட்டவர்களின் எண்ணிக்கை இருபதாயிரம் மட்டும்தானா?
  2. ஒரு நாட்டின் அதிபர் என்கிற பொறுப்பான பதவியில் இருக்கிற ஒருவர், எந்த அடிப்படையில் இந்த எண்ணிக்கையை உறுதி செய்தார்?
  3. அவர்கள் இறந்துவிட்டதாக மெய்ப்பிக்கத் தேவையான ஆதாரங்கள் / தடயங்கள் / சாட்சியங்கள் இலங்கை அரசின் கைவசம் இருக்கின்றனவா?
  4. அவை இருந்தால், இத்தனை ஆண்டுகளாக அதை வெளியிடாமல் மறைத்து வைத்திருந்தது ஏன்?
  5. இறந்துவிட்டார்கள் என்று பொத்தாம்பொதுவாகச் சொன்னால் என்ன பொருள்? அவர்கள் கொல்லப்பட்டார்களா?
  6. கொல்லப்பட்டார்கள் – என்றால், எங்கே… எப்போது… யாரால்?
  7. இராணுவத்திடம் சரணடைந்தவர்கள், இராணுவத்தால் சிறைப்பிடிக்கப்பட்டவர்கள், கடத்தப்பட்டவர்கள் அவர்களில் எத்தனைப் பேர்?
  8. நோய்வாய்ப்பட்டு இறந்தார்கள் என்றால், அதற்காக எந்த மருத்துவமனையில் அவர்களுக்குச் சிகிச்சை தரப்பட்டது?
  9. அவர்களது உடல்கள், உறவினர்களிடம் எதனால் ஒப்படைக்கப்படவில்லை?
  10. உடல்கள் எங்கே புதைக்கப்பட்டன / மறைக்கப்பட்டன?

இதில் எந்தக் கேள்விக்கும் கோதபாய இராசபச்ச பதில் சொல்லப் போவதில்லை.

யாருக்கும் தெரியாமல் புதைக்கப்பட ஓர் உயிரோ ஈர் உயிரோ அல்ல! இருபதாயிரம் உயிர்கள்… இருபதாயிரம் உடல்கள்.

அவை எங்கே என்பது மிக மிக முதன்மையான கேள்வி.

இனப் படுகொலைக்கு நீதி கேட்கிற வேள்விக்கு மிக மிகப் பயனுள்ள கேள்வி.

கோதபாய சொல்வதை வைத்துப் பார்க்கிறபோது, அந்த உடல்கள் தனித்தனியாகப் புதைக்கப்பட வாய்ப்பேயில்லை. பத்துப் பத்தாகவோ நூறு நூறாகவோ ஒன்றாகத்தான் புதைக்கப்பட்டிருக்க வேண்டும். எரித்தால் உண்மை அம்பலமாகிவிடும் என்பதால், புதைத்திருப்பதற்கான வாய்ப்புதான் அதிகம்.

சிங்களச் சிப்பாய்களின் வெறியாட்டத்துக்குப் பிறகு, கல்லூரி மாணவி கிருசாந்தியும் அவளது தாயும் செம்மணியில் ஒரே குழியில் புதைக்கப்பட்டிருந்தார்களே, அதுதான் நடந்திருக்க வேண்டும் இப்போதும்!

செம்மணி வெளியில் மட்டுமே ஏறத்தாழ 400 இளைஞர்களின் உடல்கள் இரகசியமாகப் புதைக்கப்பட்டிருந்ததை ஒப்புக் கொண்ட சோமன இராசபச்ச என்கிற சிப்பாயின் வாக்குமூலத்தை மீண்டும் புரட்டிப் பார்க்கிற எவரும் இதை மறுக்க முடியாது.

காணாமல் போன இருபதாயிரம் பேர் உயிருடன் இல்லை – என்று அதற்கு காரணமானவர்களே சொல்வதிலிருந்து, அந்த எண்ணிக்கை இரண்டு மடங்குக்கு மேல் இருக்கக் கூடும் என்பது தெளிவாகத் தெரிகிறது. அவ்வளவு உடல்களை வேறெப்படி மறைக்க முடியும்?

தமிழர் தாயகமெங்கும் பன்னாட்டு வல்லுநர் குழுக்களை வைத்துத் துப்புரவாக அலசி ஆராய்ந்தால், செம்மணியைக் காட்டிலும் மோசமான ஆயிரக் கணக்கான மனிதப் புதைகுழிகளை நிச்சயமாகக் கண்டுபிடிக்க முடியும்.  இராசபச்சக்களை மின்சார நாற்காலியில் ஏற்ற, அது மட்டுமே போதும். பிணங்களைத் தோண்டி எடுக்க எவரையும் அனுமதித்துவிடக் கூடாது என்பதால்தான், பன்னாட்டு விசாரணைக்கு அனுமதிக்கவே மாட்டோம் என்று கதவைப் பூட்டிக் கொள்கிறது இலங்கை.

இந்த இருபதாயிரமும், 2008 – 2009 இனப்படுகொலையின் போது முள்ளிவாய்க்கால் வரை விரட்டி விரட்டிக் கொல்லப்பட்ட ஒன்றரை இலட்சமும் வேறு வேறு!

இன அழிப்பின்போது  கொல்லப்பட்ட அப்பாவித் தமிழ் மக்களின் எண்ணிக்கை, ஏறக்குறைய ஒன்றரை இலட்சம். இது, எந்த விதத்திலும் மிகைப்படுத்தப்பட்டதல்ல! மக்கள் தொகைக் கணக்கெடுப்புப் புள்ளிவிவரங்களின் அடிப்படையில், இதைத்  துல்லியமாகக் கணக்கிட்டுச் சொன்னவர் பழுத்த ஆன்மிகவாதியான மன்னார் மாவட்ட ஆயர் இராயப்பு சோசப்பு. “போருக்கு முந்தைய கணக்கெடுப்பில் இருந்த 1,46,679 பேர் இப்போது எங்கே” என்பது இராயப்பர் எழுப்பிய உறுதியான கேள்வி.

“இனப்படுகொலை – என்கிற குற்றச்சாட்டு பொய்யானது…

இலங்கையில் நடந்தது உள்நாட்டுப் போர்…

அந்தப் போரில் கொல்லப்பட்டவர்கள் விடுதலைப் புலிகள் மட்டுமே…

ஓர் அப்பாவி ஆட்டுக் குட்டி கூட கொல்லப்படவில்லை…” – என்றெல்லாம், தொடக்கத்தில் சமத்துகாரமாகப் பேசியது இலங்கை. அது பச்சைப்பொய் என்பதை, ஐ.நா. அமைத்த வல்லுநர் குழு அம்பலப்படுத்தியது.  40 ஆயிரம் அப்பாவித் தமிழர்கள் கொல்லப்பட்டிருப்பதை, அந்தக் குழு உறுதி செய்தது. அதன்பிறகு விசாரித்த ஐ.நா.வின் உள்ளக விசாரணைக் குழு, உயிரிழந்தோர் எண்ணிக்கை எழுபதாயிரத்துக்கும் அதிகம் என்றது.

இராயப்பரின் ஆதாரப்பூர்வமான கணக்கின்படி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,46,679. காணாமல் போனதாகக் கூறப்படுகிற பெருந்தொகையான மக்கள் இறந்துவிட்டதாக, இலங்கை அரசு வெளிப்படையாக ஒப்புக் கொண்டிருப்பது இதுதான் முதல் முறை. இப்படி ஒப்புக் கொண்டிருப்பதற்கு, அமெரிக்காவின் அழுத்தம்தான் காரணம் என்று கூறப்படுகிறது. அமெரிக்க அதிபரின் சிறப்புத் தூதுவராக, சென்ற வாரம் ஆலிசு வெல்சு என்கிற பெண் அதிகாரி கொழும்பு வந்திருந்தார். அவர், தெற்காசிய மண்டல விவகாரங்களைக் கவனிக்கிற வெளியுறவுத் துறைத் துணைச் செயலாளர்.

கோதபாயவிடம் திரம்பின் கடிதம் ஒன்றைக் கொடுத்திருக்கிறார்  ஆலிசு. அந்தக் கடிதத்தில். ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் செனிவா கூட்டத்தில் இலங்கை கொடுத்திருக்கும் வாக்குறுதிகள் குறித்தும், காணாமல் போனோர் குறித்தும் திரம்ப்பு சுட்டிக்காட்டியிருப்பதாகத் தெரிகிறது. 

இலங்கையில் சீனா வலுவாகக் காலூன்றுவதற்கு முட்டுக்கட்டை போடுவதே அமெரிக்காவின் முக்கிய நோக்கமாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. என்றாலும், சுற்றிவளைத்து, தமிழினத்துக்கான நீதியை ஒரு புள்ளி நகர்த்துவதாக அஃது இருந்திருப்பதை கோதபாயவின் அறிவிப்பு உணர்த்துகிறது.

ஆலிசு ஒரே ஒரு நாள்தான் கொழும்பில் இருந்தார். அவர் வந்து போன பிறகு, கொழும்பிலிருக்கும் ஐ.நா. சார்பாளரான ஆனா சிங்கரை அழைத்து இருபதாயிரம் பேர் இறந்துவிட்டதாகக் கோதபாய கூறியிருப்பது, திரம்பு கடிதத்தின் எதிர் விளைவாக இருக்க வாய்ப்பிருக்கிறது.

கோதபாயவின் நகர்வை முன்கூட்டியே கணிப்பது கடினம். செனிவா மனித உரிமைகள் பேரவை கூட இருக்கிற நிலையில்,   நாற்பதாயிரம், எழுபதாயிரம், ஒன்றரை இலட்சம் என்கிற கணக்கெடுப்புகளின் தீவிரத்தைக் குறைப்பதற்காக அல்லது மறைப்பதற்காக,  ‘இருபதாயிரம்’ என்கிற துருப்புச் சீட்டை கோதா  பயன்படுத்தவும் வாய்ப்பிருக்கிறது.

அதிபர் என்கிற பொறுப்புள்ள பதவியில் இருக்கிற கோதபாய, தனது கடமையைத் தட்டிக்கழிப்பதற்காக, ‘அனைவரும் இறந்துவிட்டனர்’ என்று பொதுப்படையாகவும்  பொறுப்பில்லாமலும் பேசுகிறார் – என்பது வடமாகாண முன்னாள் முதல்வர் நீதியரசர் விக்னேசுவரனின் குற்றச்சாட்டு.

காணாமல் போன  ஒவ்வொருவர் குறித்தும் விசாரணை ஏதாவது நடத்தப்பட்டதா – என்பது விக்னேசுவரனின் சட்டப்பூர்வமான  கேள்வி. ‘எந்த அடிப்படையில் இருபதாயிரம் பேர் இறந்ததாக அறிவிக்கப்படுகிறது’ என்று சாடுகிறார் அவர்.

வடமாகாண அமைச்சராக இருந்த அனந்தி சசீதரன், தன்னுடைய கணவர் சசீதரன் என்கிற எழிலனை 2009 மே மாதம், இராணுவத்திடம் ஒப்படைத்தவர். அதே நாளில், அவரைப் போலவே பலரும், தங்கள் கணவரையோ, மகனையோ மகளையோ இராணுவத்திடம், அரைகுறை நம்பிக்கையோடு, ஒப்படைத்தார்கள்.

‘நாங்கள் உயிருடன் ஒப்படைத்த எங்கள் உறவுகள் எங்கே’ என்று பத்தாண்டுகளாகக் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள், அனந்தியும் அவருடன் சேர்ந்து குரல் கொடுக்கும் காணாமல் போனவர்களின் உறவுகளும்! பதினோராவது ஆண்டில், ‘அவர்களில் யாரும் உயிருடன் இல்லை’ என்று கொஞ்சம்கூட குற்றவுணர்ச்சியின்றி நின்று நிதானமாகப் பதில் சொல்கிறார் கோதபாய.

கோதபாய சொன்னது புதிதுமில்லை. இதற்கு முன்பே, முன்னாள் தலைமையமைச்சர் இரணில் சொன்னதுதான் இது. ‘காணாது போனோர் உயிருடனிருக்க வாய்ப்பில்லை’ என்று சென்ற ஆண்டே சொன்ன பிரகசுபதி அவர். ‘வாய்ப்பேயில்லை’ என்று இரணில் சொன்னதைக், கோதபாய திட்டவட்டமாகச் சொல்கிறார் என்பதொன்றே வேறுபாடு.

“கோதபாயவின் அறிவிப்பு ஒரு மோசடி… உலகை ஏமாற்றுகிற வேலை” என்கிறார் அனந்தி. காணாமலாக்கப்பட்டோருக்கான போராட்டங்களை ஒருங்கிணைப்பதில் முன் நின்ற அவர்,  தமிழின அழிப்பால் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருக்கும் பெண்களுக்காகக் குரல் கொடுக்கும் WAN போன்ற அமைப்புகளுடன் இணைந்து செயல்படுபவர்.  அதற்காக ராணுவத்தின் கடுமையான கண்காணிப்பில் இருந்தவர், இருப்பவர்.

போர் முடிந்த பின்பும், தமிழர் பகுதிகளில் காணாமல் போதல் தொடர்வதைப் பல சந்தர்ப்பங்களில் சுட்டிக்காட்டிய அனந்தி, இப்போதும் அதைக் குறிப்பிட்டிருக்கிறார்.  ‘2009-க்குப் பிறகு கடத்தப்பட்டவர்கள் என்ன ஆனார்கள்’ என்று கோதபாயவைக் கேட்கிறார் அவர்.

மகிந்த இராசபச்ச அதிபராக இருந்தபோது, காணாது போனோர் குறித்து விசாரிக்க ஓர் ஆணையம் அமைக்கப்பட்டது. மைத்திரிபாலா அதிபரானபிறகு, அதன் அலுவலகம் யாழ்ப்பாணத்திலும் தொடங்கப்பட்டது. அந்த ஆணையம், யாழ்ப்பாண அலுவலகம் எல்லாமே கண்துடைப்பு நடவடிக்கை என்பதை அதன் நடவடிக்கைகள் உணர்த்தின.

காணாமல் போனோருக்கான அலுவலகத்தை யாழ்ப்பாணத்திலேயே திறந்திருக்கிறோம் – என்று பன்னாட்டினருடனும் மைத்திரிபாலா அரசு தம்பட்டமடிக்க மட்டுமே அது பயன்பட்டது. பல்லாயிரம் பேர் காணாமலாக்கப்பட்டிருக்கும் யாழ் பகுதியில், அந்த ஆணையத்தை நம்பியோ வேறு வழியில்லாமலோ முறையிட்டவர்கள் 2,000 பேர் மட்டுமே! அந்த 2,000 முறைப்பாடுகள் தொடர்பாக என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்பதைப் பற்றிக் கூட,  ஒரு வார்த்தை பேச மறுக்கிறது அந்த ஆணையம்.

காணாது போன உறவுகளுக்கு நீதி கிடைக்கும் என்று எதிர்பார்த்து அந்த அலுவலகத்துக்குப்  போனவர்களிடம், மரணச் சான்றிதழ்  தருவதாக அந்த அலுவலக அதிகாரிகள்   பேரம் பேச, ‘மரணச் சான்றிதழ்  அலுவலகம்’ என்றே அதற்குப் பெயர் சூட்டி விட்டனர், காணாது போனவர்களின் உறவினர்கள்.

மரணச் சான்றிதழைப் பெற்றுக் கொண்டால், மாதாமாதம் துயரீட்டுத் தொகை  கிடைக்கும், காணாது போனவரின் வங்கிக் கணக்குகளைக் கையாள முடியும், அவரது சொத்துகள் மற்றும் உடைமைகளுக்கு உரிமை கொண்டாட முடியும். ஆனால், இந்த வசீகர வலையில் விழுந்துவிடவில்லை தமிழீழ மக்கள்.

‘உன் துயரீட்டை நீயே வைத்துக் கொள்.. விசாரணைக்கு அழைத்துச் சென்ற  என் மகனைத் திருப்பிக் கொடு’ என்று வீதிக்கு வந்து போராடினார்கள் தமிழீழ தமக்கை, தம்பியர்.

அங்கே கெடுசுரம்(அபசுரம்) பாடுகிற அரசியல்வாதிகளில் முதலிடம் சுமந்திரனுக்குத் தான்! ‘இனப்படுகொலை என்றெல்லாம் சொன்னால் பன்னாடுகளிடம் நீதி பெற முடியாது… போர்க்குற்றம் என்று சொல்வதுதான் புத்திசாலித்தனம்’ என்ற நச்சுக் கருத்தை விதைத்த அந்த மனிதர்தான், ஆளுக்கு முந்திக்கொண்டு இப்போதும் களத்தில் இறங்குகிறார்.

‘மரணச் சான்றிதழ் அலுவலகம் – என்று பட்டப் பெயர் சூட்டியிருப்பது பிழை’ என்பது சுமந்திரனின் வாதம்.

“காணாமல் போனோருக்கான அலுவலகத்தில் முறைப்பாடு கொடுத்ததும், அதுபற்றி விசாரித்து உறுதி செய்தபிறகு, காணாமல் போயிருப்பதாகச் சான்றிதழ் வழங்குவார்கள். அதன் மூலம் மாதாந்திர உதவித்தொகையைப் பெற முடியும். அதன்பிறகு, எப்படிக் காணாமல் போனார்கள், அதற்கு யார் காரணம் என்பது குறித்து விசாரிக்கப்படும்” என்று இலங்கை அரசின் அந்தப் போலி நாடகத்துக்கு ஆள் பிடிக்கப்பார்க்கிறார் சுமந்திரன்.

‘உலகம் முழுவதிலுமே காணாமல் போனோர் விவகாரம் மிக மிகச் சிக்கலானது.. அதற்கான தீர்வை எட்டுவதுதான் இந்த அலுவலகத்தின் நோக்கம்’ என்று சுமந்திரன் சொல்வது, பொருள்பொதிந்தது. அது, ஒரு பெரிய கோட்டைப் பக்கத்தில் போடுவதன் மூலம், இங்கேயுள்ள கோட்டைச் சிறியதாகக் காட்டுகிற முயற்சி.

‘இங்கே மட்டுமா நடக்கிறது… உலகம் முழுவதும் ஆட்கள் காணாமல் போகிறார்கள்… அவர்களெல்லாம் வீதிக்கு வந்தா போராடுகிறார்கள்… கொடுக்கிற பணத்தை வாங்கிக் கொண்டு வீட்டுக்குப் போய்ச் சேருங்கள்’  என்பதைத்தான் இவ்வளவு அழகாக எடுத்துச் சொல்கிறார் சுமந்திரன் என்கிற சட்டத் தரணி.

இராணுவத்தால் அல்லது காவல்துறையால் அழைத்துச் செல்லப்பட்டு வீடு திரும்பாதோர், வெள்ளை ஊர்தியில் கடத்திச் செல்லப்பட்டவர்கள், இராணுவத்திடம் சரணடைந்தவர்கள்… என்று காணாமல் போனோரின் எண்ணிக்கை முப்பதாயிரத்துக்கும்  அதிகம் என்கிறார்கள் கொழும்பு பத்திரிகையாளர்கள். பல ஆண்டுகளாக அவர்களைத் தேடுவதையே வாழ்வின் முதன்மை வேலையாகக் கொண்டிருந்த உறவுகளுக்கு, ‘அவர்கள் உயிருடனில்லை’ என்கிற செய்தி, நிச்சயம் அதிர்ச்சி அளித்திருக்கும்.

இந்த அதிர்ச்சிக்கிடையிலும், தடுமாறாமல் பேசுகிற தாய்மார்கள் இருக்கிறார்கள் ஈழத்தில்! ‘கோதபாயவின் கூற்றில் உண்மையில்லை, அதில்  ஏதோ சூழ்ச்சி இருக்கிறது’ என்று அனந்தியைப் போலவேதான் அவர்களும் நினைக்கிறார்கள். அந்த அவ நம்பிக்கைக்கிடையிலும்,  ‘உயிருடனில்லை என்றால், கொன்றவன் யாரென்று சொல்… குற்றவாளியைக் கூண்டில் நிறுத்து… என் மகனைக் கொன்றவனுக்குத் தண்டனை கொடு’ என்கிறார்கள் ஓர்மத்துடன்!

காணாமல் போன அத்தனைப் பேருமே கொல்லப்பட்டு விட்டார்களா – என்கிற கேள்விக்கு உடனடியாக விடை காண முடியவில்லை. ஆனால், காணாமல் போனோர் அனுபவித்த கொடுமைகளை எந்தத் தமிழ் உறவும் அனுபவிக்கக் கூடாது என்பதை தெள்ளத் தெளிவாகக் கூற வேண்டியிருக்கிறது.

காணாமல் போனோருக்கான விசாரணை ஆணையத்தின் தலைவராக மகிந்த இராசபச்சவால் நியமிக்கப்பட்டவர், மகசுவெல் பராக்கிரம பரணாகம. காணாமல் போனோருக்கு நியாயம் வழங்குவதைக் காட்டிலும், புலிகள் மீது புழுதி வாரித் தூற்றுவதிலேயே கவனமாக இருந்தவர் அவர்.

அப்படிப்பட்ட பரணாகமவின் விசாரணை அறிக்கை கூட, சிங்கள இராணுவத்தினரின் பாலியல் வன்முறைகள் குறித்துப் பேசாமல் இருக்க முடியவில்லை. அதுகுறித்து விரிவாகவும் தெளிவாகவும் பேசியது. பெண்களை மட்டுமின்றி, ஆண்களையும் பாலியல் வன்முறைக்கு உட்படுத்திய இராணுவத்தினரை ஒரு பிடி பிடித்தது. பாலியல் வன்முறை என்கிற அந்த அருவருப்பான குற்றச்சாட்டைப் புலிகள் மீது சுமத்த பரணாகமவாலேயே கூட முடியவில்லை.

பரணாகமவின் குற்றச்சாட்டை, நெஞ்சைப் பிழியும் அளவுக்கு  உறுதி செய்தவர் இலங்கைக்கான  பிபிசி செய்தியாளராக இருந்த  பிரான்சேசு ஆரிசன். வக்கிர மனம் படைத்த படையினரின் பாலியல் வன்முறைக்குத் தமிழ்ப் பெண்கள் மட்டுமின்றி இளைஞர்களும் இரையாவதை ஆதாரத்துடன் அம்பலப்படுத்தியவர் அந்த உடன்பிறந்தாள்.                                                                                                            பிரான்சேசு ஆரிசன் எழுதிய ஒரு செய்திக் கட்டுரையை முழுக்கப் படித்தால் மனமுடைந்துவிடுவோம். என்றாலும், அதன் ஒரு பகுதியை இங்கே குறிப்பிட்டாக வேண்டும்.

“குழந்தையை அவளிடமிருந்து பறித்து வெளியே இருக்கிற மற்றவர்களிடம் கொடுத்துவிட்டுக், கதறி அழுகிற அவளை அறைக்குள் இழுத்துச் செல்கின்றனர் சிப்பாய்கள்.

அவளுடைய உடைகள் கிழிக்கப்படுகின்றன…

அவளுடைய கதறல் அதிகரிக்கிறது…

கதறலை நிறுத்தாவிட்டால், வெளியே இருக்கிற குழந்தையை அவள் உயிருடன் பார்க்க முடியாது என்று மிரட்டுகிறார்கள்…

அந்த இளம் தாயின் கதறல் நிற்கிறது… அவள் மௌனமாகிறாள்…

வெளியே இருப்பவர்களுக்கும், நடப்பது என்னவென்பது புரிகிறது…

ஒருவராலும் ஒரு வார்த்தை கூட பேச முடியாத நிலை.

அவள் திரும்பி வருகிற வரை குழந்தையைப் பத்திரமாகப் பார்த்துக் கொள்வது மட்டும்தான் அவர்களது ஒரே வேலை…

இன்னொரு இளம் தாய் வெளிப்படையாகவே மிரட்டப்படுகிறாள்.

‘நீ வர மறுத்தால், உனக்குப் பதில் உன் மகளை அழைத்துச் செல்வோம்’ என்கிறார்கள். அந்த மிருகங்களை எதிர்த்து அந்தத் தாயால் ஒரு வார்த்தை கூட பேச முடியாத நிலை…

தங்கள்  மீது நடவடிக்கை எடுக்க ஒருவர் கூட முன்வரப் போவதில்லை… என்கிற திமிரில், தங்களுக்கு இரையாகும் பெண்களை அதே கோலத்தில் படம்பிடித்து மகிழ்கிறார்கள் புத்தனின் புத்திரர்கள்.

போர்க்காலத்தில், இராணுவம் வீசிய குண்டுகள் மானாவாரியாக வெடித்துச் சிதறியபோது, குழந்தைகளைக் காப்பதற்காக தன் உடலோடு சேர்த்து அணைத்துக் கொண்டவர்கள் அந்தத் தமிழ்ப் பெண்கள்…

இப்போது சமாதானக் காலம். இராணுவ முகாமில் என்ன நடக்கும் என்பது தெரிந்தே, குழந்தைகளைப் பாதுகாக்க அவர்கள் போக வேண்டியிருக்கிறது…

எந்த மொழியில் இலங்கையின் தேசிய கீதத்தைப் பாடுவது என்று விவாதித்துக் கொண்டிருப்பதில் இல்லை நல்லிணக்கம் என்பதை நாம் ஒவ்வொருவரும் புரிந்து கொள்ள வேண்டும்.” –

இப்படியொரு இராணுவம்… காணாமலாக்கப்பட்டவர்களை என்னென்ன செய்திருக்கும்… என்பதைச் சிந்தித்துப் பார்க்கிற எவருக்கும், அவர்கள் உயிருடன் இருக்கிறார்களா இல்லையா என்கிற சந்தேகம் நிச்சயமாக வரும். ஆனால், இப்படியெல்லாம் சந்தேகம் வருவதைக் காட்டிலும், இதை அறிந்ததும் உச்சந்தலைக்கு ஏறுகிற அளவுக்கு அறச்சீற்றம் வருவதுதான் குறிப்பிடத்தக்கது.

“இந்த உலகில் மற்றெவரையும் காட்டிலும் இலங்கை அரசு செய்த இனப்படுகொலைக்கு நீதி கேட்பதற்கான கடமை தமிழகத் தமிழர்களுக்குத் தான் அதிகம்” – என்று அழுத்தந் திருத்தமாகச் சொன்னவர், இன அழிப்புக்கு நீதி கேட்பதில் தமிழ் மக்களோடு இணைந்து செயல்படுகிற அமெரிக்க  மருத்துவரான எலினா சான்டர். எபிரேய(யூத)ப் பெண்மணியான அவர், கடல்கோளால் பாதித்த தமிழீழப் பகுதியில் சில மாதங்கள் தங்கிப் பணியாற்றிய போது, அந்த மக்களை அணு அணுவாக அறிந்தவர். அதனால்தான் அவர் பேசுகிறார். தொப்புள்  கொடி உறவு என்று வார்த்தைச்சாலம் பேசுகிற நமக்கு நமது கடமையை நினைவுபடுத்துகிறார்.

காணாமல் போனவர்கள் பெயரில் துயரீடு(நிவாரணம்) வாங்க அந்த உறவுகள் சம்மதிக்கவில்லை.

எங்கள் உறவை எங்களிடம் திருப்பிக் கொடு  – என்கிறார்கள் உறுதியுடன்.

‘கொன்று விட்டாயா… அப்படியானால் நீதி கொடு’ என்று ஓர்மத்துடன் கேட்கிறார்கள்.

தங்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு உண்மையான துயரீடு எது என்பதையும், அதன் எல்லைகளையும் அவர்கள் அறிந்திருக்கிறார்கள்..  நீதி கிடைத்ததும் அந்தத் துயரீடும் கிடைக்கும் என்பது அவர்களுக்குத் தெரியும்.

நம்மில் பெரும்பாலானோர் மது மயக்கத்திலும் தொலைக்காட்சியிலும் திரைப்படத்திலும் நட்சத்திர மோகத்திலும் நம்மை நாமே தொலைத்துக் கொண்டவர்கள். நம்மை நாமே காணாமல் போகச் செய்துகொண்ட பிரகசுபதிகள். இதிலிருந்து விடுபட்டு 26 ஆவது கல்லிலிருந்து கேட்கிற அழுகுரலைக் காதில் வாங்க நாம் முன்வருகிறபோது, ‘ஒருவரும் உயிருடனில்லை’ என்று பேசுகிற துணிச்சல் அங்கேயிருக்கிற எவருக்கும் வராது.

புகழேந்தி தங்கராசு, தொடர்புக்கு: pugazendhithangaraj@gmail.com

– தினச்செய்தி, 23.01.2019