செஞ்சீனா சென்றுவந்தேன் 8 – பொறி.க.அருணபாரதி
(ஆடி 18, 2045 /ஆகத்து 03, 2014 இதழின் தொடர்ச்சி)
8. சீனத் தொழிலாளர் வருக்க நிலை
நான் வந்துள்ள சியான்நகரில் மட்டும் 800க்கும் மேற்பட்டதகவல்தொழில்நுட்பநிறுவனங்கள் இருப்பதாகத் தெரிவித்திருந்தேன். இந்நிறுவனங்களில் மொத்தமாகக் கணக்கெடுத்தால், நேரடியாக 1 இலட்சம்பேர்தான் வேலைவாய்ப்புப் பெறுகின்றனர் எனச் சொல்கிறது, சீன அரசு. அதாவது, 1 நிறுவனத்தில் 1200 பேர் எனச் சராசரியாகக் கணக்கிட்டால் வரும் எண்ணிக்கைஇது!
பல்லாயிரம் கோடிகளை அறுவடை செய்யும் மென்பொருள் நிறுவனங்கள், அதைச் சிலஆயிரம் பேரைக் கொண்டேசாதிக்கிறது. அந்தளவிற்குச், சீனாவில் மலிவான விளைவில் உழைப்பை விற்கும் எளிய உழைப்பாளிகள் கிடைக்கிறார்கள். அந்தசிலஆயிரம்சீனர்களைத் தவிர, மற்றவர்களின் வாழ்நிலைஎன்னஎன்பதெல்லாம் சீனஅரசின் கண்களை எப்பொழுதும் உறுத்துவதில்லை.
த.தொ.(ஐ.டி.) பணியில் இருப்பவர்களின் வாங்கும் திறன் அதிகரித்திருப்பதைக் காரணம் காட்டி, ஒட்டுமொத்த சீன மக்களின் வாங்கும் திறன் அதிகரித்திருப்பதாக கணக்குப் போடுகின்றது, சீன அரசு. ஆனால், உண்மை அதுவல்ல!
1990களுக்கு முன்புவரை, சீனாவில் இரும்பு அரிசிக்கிண்ணம்(Iron Rice bowl) என்ற பெயரில், தொழிலாளர்களுக்கு விடுப்பு உரிமை, குறைந்தஅளவுக்கூலித் தொகை, பணிப் பாதுகாப்பு முதலான பல உரிமைகளைத் தருகின்ற சட்டங்கள் இருந்தன. சீனத் தொழிலாளர் வருக்கம் இதனால் பெரும் பயன் அடைந்து வந்தது.
ஆனால், 1990களுக்குப் பின்னர் இரும்பு அரிசிக்கிண்ணம்(Iron rice bowl) என்ற சட்டப்பாதுகாப்பே காணாமல் போகச் செய்யப்பட்டது. பணிப்பாதுகாப்பு கிடையாது, காப்பீடு கிடையாது, குறைந்தஅளவு வேலை நேரமே 10 மணிநேரம் என்ற நிலை என சீனப் பெருநிறுவனங்களும், பன்னாட்டு நிறுவனங்களும் கண்மூடித்தனமான உழைப்புச் சுரண்டலில் இறங்க இசைவளிக்கப்பட்டன. பல தொழிற்சாலைகள் நிலையான பணியாளர்களை நீக்கிவிட்டு, ஒப்பந்தத் தொழிலாளர்களை பணியிலமர்த்தினர். உலகமய முதலாளிகளுக்கு பணிப்பாதுகாப்பு, வேலை உரிமை போன்றவையெல்லாம் பிடிக்காதல்லவா?
ஒட்டு மொத்தச் சீனாவிலும், அரசு ஏற்பளித்துள்ள ஒரே தொழிற்சங்கம் – அனைத்துச் சீனத் தொழிலாளர் சங்கங்களின் கூட்டமைப்பு (All China Federation of Trade Unions – ACFTU)என்ற அமைப்பே! இவ்வமைப்பு, பொதுவுடைமைக் கட்சியின் கைப்பாவை அமைப்பே என்பதால், தொழிலாளர் உரிமைகள் பறிக்கப்படும் போது பெரிய அளவிலான எதிர்ப்புகளை இவ்வமைப்புக் காட்டுவதில்லை. சில உரிமைகளைப் பேச்சுவார்த்தைகளின் மூலம் இவ்வமைப்புப் பெற்றுத் தருகிறது.
ஆனால், தொடர்ந்து எழுந்து வந்த தொழிலாளர் கோரிக்கைகளின் அடிப்படையில் 2007ஆம் ஆண்டு தொழிலாளர்களுக்குப் பல உரிமைகளை வழங்குகின்ற சட்டங்களை இயற்றியது சீன அரசு. அச்சட்டங்கள் இயற்றப்பட்டால், சீனாவிலிருந்து தங்கள் நாட்டு நிறுவனங்களை வெளியேற்றிவிடுவோம் எனப் பல வட அமெரிக்க, ஐரோப்பிய நிறுவனங்கள் அச்சுறுத்தல் விடுத்தன. எனவே, சில திருத்தங்களுடன் அச்சட்டங்களை சீனா நிறைவேற்றியது.
நகரமயமாக்கலின் ஒரு பகுதியாக, நகரங்களில் குடியேறுகின்ற ஊர்ப்புற மக்களின் அறியாமையைப் பயன்படுத்திக் கொண்டு பல நிறுவனங்கள் குறைந்த கூலியில் அவர்களை பணியமர்த்துகின்றன. தொழிலாளர் நலச் சட்டங்களுக்கு எதிராக அவர்கள் சுரண்டப்படுவது, தொடர்ந்து நடைபெற்று வருகின்றது.
2004ஆம் ஆண்டு, சீன ஊர்ப்புற – நகர்ப்புற வளர்ச்சித்துறை எடுத்த கருத்துக் கணிப்பு ஒன்றில், கட்டுமானத்துறையில் பணிபுரிபவர்களில் வெறும் 10 முதல் 37.5 விழுக்காட்டுத் தொழிலாளர்களே முறையான ஒப்பந்தத்துடன் பணிபுரிகின்றனர் எனத் தெரியவந்தது.
முதலாளிகளுடன் கைக்குலுக்க விரும்புகின்ற சீனப்‘பொதுவுடைமை’ அரசு, தொழிலாளர் உரிமைகளைக் கைவிட முனைவதும், அதைக் கண்டுகொள்ளாமல் விடுவதும் புதிதல்ல. மேற்கு வங்கத்தில் ஆட்சிபுரிந்த, மா.பொ.க.(சி.பி.எம்.) கட்சியின் முதல்வர் புத்ததேவ் பட்டாச்சார்யா, டாடாவுக்காக நந்திகிராமில் உழவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதை நாம் கண்டிருக்கிறோம் அல்லவா? அது போன்றுதான் இதுவும்!
(தொடரும்)
Leave a Reply