அறிஞர் ஆனந்தகிருட்டிணன் ஆண்டுநூறு கடந்து வாழிய வாழியவே!
முனைவர் மு.ஆனந்தகிருட்டிணன், பொறியாளர்கள், கணித்தமிழாளர்கள், கல்வியாளர்கள் எனப் பல்வகையினராலும் உலக அளவில் நன்கு அறியப்பெற்ற ஆன்றோர் ஆவார்.
கட்டடப் பொறியியல், சுற்றுச்சூழல் பொறியியல், தொலை உணரியல், தகவல் தொழில் நுட்பம், அறிவியல் தொழில்நுட்பக் கொள்கை பகுப்பாய்வு, மேம்பாட்டு குறிகாட்டிகள், தொழில்நுட்பப் பன்னாட்டு மாற்றங்கள், சிறு, குறு தொழிலகங்கள், கல்வியகங்களின் மேலாண்மை, சிறார் அறிவியல் கல்வி எனப் பல்வேறு துறைகளில் விரிந்து பரந்த அறிவு கொண்ட அறிஞர் முனைவர் மு. ஆனந்தகிருட்டிணன்
1952 ஆம் ஆண்டு, கிண்டியில் உள்ள பொறியியல் கல்லூரியில் (அப்போதைய சென்னைப் பல்கலைக்கழகம்) நெடுஞ்சாலைப் பொறியியலில் பட்டம் பெற்றவர்; கட்டடப் பொறியியலில்1957 இல் முதுகலைப் பட்டமும் (M.S. Degree in Civil Engineering) 1960 இல் முனைவர் பட்டமும் அமெரிக்காவில் உள்ள மின்னசோட்டா பல்கலைக்கழகத்தில்(University of Minnesota, USA) பெற்றவர்; முனைவர் பட்ட ஆராய்ச்சியில் இருந்த பொழுதும், பட்டம் பெற்ற ஓராண்டிற்குப் பின்னரும் தனியார் நிறுனம் ஒன்றில் ஆராய்ச்சிப் பொறியாளராகப் பணியாற்றி உதவி ஆசிரியராகத் திகழ்ந்தார்.
1962 இல் இந்தியாவிற்குத் திரும்பி, தில்லியில் உள்ள மத்திய வானொலி ஆராய்ச்சி நிறுவனத்தில் முதுநிலை அறிவியல் அலுவலர் நிலை 1 (Senior Scientific Officer (Grade I) at the Central Road Research Institute in Delhi) ஆகப் பணியாற்றினார்.
1963 இல் கான்பூரில் உள்ள இந்தியத் தொழில்நுட்பப் பயிலகத்தில்(IIT) கட்டடப் பொறியில் துறையில் பணிக்குச் சேர்ந்தார். இங்கு 1974 வரை, உதவிப் பேராசிரியர், பேராசிரியர், முதுநிலைப் பேராசிரியர், துறைத் தலைவர், புலத்தலைவர், பொறுப்பு இ்யக்குநர், வளாகமேம்பாட்டு நெறியாளர், பணியாளர் தெரிவு மத்தியக் குழுத் தலைவர், எனப் பல்வேறு பொறுப்புகளைத் திறம்பட ஆற்றி அனைவரின் நன்மதிப்பையும் பெற்றார். இந்திய அரசின் அறிவியல் தொழில் நுட்பத் துறைக்காக, வாசிங்டன் இந்தியத் தூதரகத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட அறிவியல் மதியுரைஞர் (Science Counselor) பணியிடத்திற்கு 5 ஆண்டுகள் அயற்பணியில் அனுப்பப் பெற்றார். இவரது மதி நுட்பமும் செயல் திறனும் அயலகங்களிலும் இவரது நற்பெயரைப் பரப்பின. எனவே, 1978இல் பன்னாட்டு அவையில் அறிவியல் தொழில்நுட்பத் துறையில் புத்தொளிர் தொழில்நுட்பங்களின் முதன்மையாளராக (Chief of New Technologies, in the Office of Science and Technology (OST), United Nations, New York.) அமர்த்தப்பட்டார். அங்கும் சிறப்பாகப் பணியாற்றியமையால், பன்னாட்டு அவையின் அறிவியல் தொழில் நுட்ப மேம்பாட்டு மையத்தில் துணை இயக்குநராகப் (Deputy Director in the Centre for Science and Technology for Development (CSTD), United Nations, New York.) பதவி உயர்வில் அமர்த்தப்பட்டார். இப் பொறுப்பில் இருக்கும் பொழுதே பன்னாட்டு அவையில் அறிவயில் தொழில்நுட்ப அறிவுரைக் குழுவின் செயலராகவும் [Secretary, UN Advisory Committee on Science and Technology for Development (UNACAST)]
1074 இலிருந்து நூற்றுக்கு மேற்பட்ட பன்னாட்டுஅமைப்புகளில் ஈடுபாடுகாட்டி வந்தார்.
பிரேசிலில் 1990-1997இல் அறிவயல் தொழில் நுட்பத்தை வலிமைப்படுத்தும் வல்லுநர் குழுவில் இணைந்து பணியாற்றியமைக்காக, பிரேசில் அரசின் தலைவரிடமிருந்து அறிவியலுக்கான விருதைப் பெற்றுள்ளார்.
பன்னாட்டுக் குழுவின் பணி முடிந்து தாயகம் திரும்பியபின், தமிழ்நாட்டில் அண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக இருமுறை, – 1990,1996 – திறம்படச் செயலாற்றினார்.மாணாக்கர்கள் பொறியியல் கல்லூரிச் சேர்க்கைக்காக விரும்பும் கல்லூரிகளுக்கெல்லாம் தனித்தனியே விண்ணப்பித்து அலைந்து இடர்ப்படுவதைத் தடுத்தார். இதற்கென இவர் அறிமுகப்படுத்திய முறையே ஒற்றைச் சாளர முறை (Single Window admission System) என்னும் எளிய முறையாகும்.
பொறியியல் கல்லூரிகளுக்கான பொது நுழைவுத் தேர்வு முறையை ஒழித்ததில் இவருக்கு முதன்மைப் பங்கு உண்டு.
இதன் தொடர்ச்சியாக இவர், துணைவேந்தர் பதவிக்கு இணையான தமிழ்நாடு மாநில உயர்கல்விக்குழுவின் தலைவராகப் பணியமர்த்தப்பட்டு 2001 இல் பணிநிறைவு பெற்றார்.
அரசுசார் பணிகளில் இருந்து ஓய்வு பெற்றாரே தவிர, நூற்றுக்கணக்கிலான அமைப்புகள் மூலம் அறிவியல் தொழில் நுட்ப மேம்பாட்டிற்கென உழைத்து வருகிறார்.
தாம் சார்ந்த துறைகளில்
வளரும் நாடுகளில் அறிவியல் தொழில்நுட்பத்தைத் திட்டமிடலும் பரப்பலும் [Planning and Popularizing Science and Technology in Developing Countries, (ed) Tycooly International Publishing Ltd., UK (1985)],
அறிவியல் தொழில் நுட்ப வளர்ச்சிக்கானதிட்டமிடுதல் மேலாண்மை குறித்த போக்கும் வாய்ப்பு வளமும்[Trends and Prospects in Planning and Management of Science and Technology for Development , (ed) United Nations, NY (1985)],
பொறியியல் வரைகலை[Engineering Graphics, Prentice Hall, India (1970).]
முதலான பல நூல்களும் நூற்றுக்கு மேற்பட்ட ஆராய்ச்சிக் கட்டுரைகளும் அளித்து ஆய்வு உலகிலும் வழிகாட்டியாகத் திகழ்கிறார்.
இந்திய அரசின் தாமரைத்திரு விருது(2002) முதலான எண்ணற்ற விருதுகள் இவருக்கு வழங்கப் பெற்றுப் பெருமையடைந்தன.
திருவள்ளுவர் ஆண்டு 1959, ஆனித்திங்கள் 29 ஆம் நாள், சூலை 12, 1928 அன்று வாணியம்பாடியில் பிறந்து வளர்ந்து சிறந்த இப்பல்துறையறிஞரின் 86 ஆம் பிறந்தநாள் பெருமங்கல நிறைவில் கல்வியாளர்களும் அறிஞர்களும் ஆன்றோர்களும் பொறியாளர்களும்கணித்தமிழ் அமைப்பினரும் நண்பர்களும் நேரிலும் தொலைபேசி, அலைபேசி வாயிலாகவும் மின்மடல் மூலமாகவும் வாழ்த்தியுள்ளனர்.
ஆயிரத்திற்கு மேற்பட்ட முழுநிலைவைக்கண்ட அறிஞர் மு.அனந்தகிருட்டிணன் தம் குடும்பத்தினருடன் சேர்ந்து மேலும் பல பன்னூறு முழுநிலவுகளைக் காண ‘அகரமுதல’ இதழ் வாழ்த்துகிறது.
இலக்குவனார் திருவள்ளுவன்
இதழுரை
ஆனி 29, 2045 / சூலை 13, 2014
நன்றி : சொ.ஆனந்தன்
கணித்தமிழ்ச் சங்கம்
Leave a Reply