tarun_vijay_02

  தமிழ் நாட்டிற்கு வெளியே உள்ள இந்தியத்துணைக்கண்டத்தினர் தமிழின் சிறப்பை அறிவதில்லை. அறிந்திருந்தாலும் தமிழைப் புறக்கணிப்பதையே வழக்கமாகக் கொண்டுள்ளனர். இதற்கு மாறாக மாநிலங்களவையில் தமிழுக்காகக் கொடி தூக்கினார் ஒருவர்.அவர், தமிழ் நாட்டவர் அல்லர். உத்தரகண்டு மாநிலத்தைச் சேர்ந்தவர். அதுவும் சமய(மத)வெறிபிடித்த ‘இராசுட்ரிய சுயம்சேவக்கு சங்கம்’ என்ற நாட்டுத்தற்தொண்டுக் கழகத்தின் பல பொறுப்புகளில் இருந்தவர். இவ்வமைப்பு நடத்தும் பாஞ்சசன்யா’ என்னும் இதழின் ஆசிரியராக 20 ஆண்டுகள் இருந்தவர்.ஊடகவியலாளராகவும் மக்கள் நலத் தொண்டராகவும் நன்கறியப்பெற்றவர். பழங்குடி மக்களின் நலனுக்காகப்பாடுபட்டு வருபவர்.படக்கலைஞர், கட்டுரையாளர், படைப்பாளர் எனப் பல வகைகளில் சிறந்துள்ளவர்.இப்பொழுது, பா.ச.க.வின் செய்தித் தொடர்பாளர்களில் ஒருவராக உள்ளவர்.

tarunvisay-panchasanya.ithazh

  இவர் சியாம்பிரசாத்து முகர்சி ஆராய்ச்சி நிறுவனத்தின் மதிப்புநிலை இயக்குநராக உள்ளார். ஆடி 2041 / சூலை 2010 இல் மாநிலங்களவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 27 அயல்நாடுகளுக்குப் பயணம் மேற்கொண்டுள்ளார். அதனால் உலகில் சிறந்த மொழி தமிழ் என உணர்ந்து கூறுகிறார். இவர் சமற்கிருதத்தில்தான் பதவி ஏற்பு உறுதிமொழி எடுத்தார். எனினும் தமிழின் சிறப்பை உணர்ந்து தமிழ்த்தாய் தூதர்போல் குரல் கொடுக்கிறார்.

  தமிழ்நாட்டிலுள்ளவர்கள் சாதியால் ஒன்றென எண்ணி வடநாட்டுச் சாதியருடன் இணைவர். இருப்பினும் வடக்கே உள்ளவர்கள் மொழி என்றால் இந்தியைத்தான் தூக்கிப்பிடிப்பர். தமிழைத்தாக்கி அழிக்கவே முயல்வர்.சான்றுக்குச் சொல்ல வேண்டுமானால், இங்குள்ள இடைக்குல மக்கள் வடநாட்டு யாதவும் தாங்களும் ஒன்று என்று இணைந்து குரல் கொடுக்கின்றனர். ஆனால், அவர்கள் இந்தியா என்றால் இந்திதான் என அழுத்தமாக உள்ளனர். இப்படித்தான் பிற வகுப்பாரும். அப்படி இருக்கையில் சாதி, சமய, மொழி வேறுபாடு பாராமல் தமிழின் பெருமையை உள்ளவாறே உணர்ந்து உளமாரத் தமிழைப்போற்றித் தமிழுக்காகக் குரல் கொடுக்கிறார் இவர்.

tharunvisay-facebook

  இவர், மாநிலங்களவையில்ஆடி 15, 2045 /சூலை 31, 2014 அன்று பேசும் பொழுது, தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்களைப் பார்த்து ‘வணக்கம்’ எனச் சொல்லிவிட்டு உரையாற்றத் தொடங்கி இன்ப அதிர்ச்சி கொடுத்தார்; “தமிழை ஏன் மத்திய அரசு போற்றவில்லை” எனச் சீறியுள்ளார்.

“தமிழைத் தேசிய மொழியாக அறிவித்து, நாடு முழுவதும் கட்டாயப்பாடமாகக் கற்பிக்க வேண்டும்” என்று முழங்கியுள்ளார்.

 தமிழன்பர் தருண் விசய் பேசுகையில்,“

“வடக்கில் உள்ள என் தோழர்கள் சிலரின் அடக்குமுறை, வன்முறை, பிடிவாதப் போக்குகளால், உலகின் மிகச் சிறந்த மொழிகளில் ஒன்றான தமிழின் பெருமைகளை இந்தி பேசும் மக்களால் புரிந்து கொள்ளவே முடியாமல் போனது தீயூழானது..

 தமிழுக்குள்ள ஒப்புமை யில்லா பொற்காலமரபு குறித்து ஒவ்வோர் இந்தியனும் பெருமை கொள்ள வேண்டும்.

ஏழு கடல்களையும் தாண்டிய பெருமை படைத்தது தமிழ் மொழி மட்டும்தான். அதன் தாக்கத்தை உலகம் முழுவதும் காணலாம். செம்மொழியான தமிழ் அத்தனை உச்சங்களையும் கொண்டுள்ள தனிப்பெரும் மொழி. காலங்கள் பலவற்றைத் தாண்டியும் இன்னும் சிறப்பாக உள்ள ஒரே மொழி தமிழ் மட்டும்தான்.

 ஏறத்தாழ 5000 ஆண்டுகள் தொன்மையான தொல்காப்பியம், சிலப்பதிகாரம், மணிமேகலை, சிந்தாமணி, வளையாபதி, குண்டலகேசி முதலியன சிறந்த தமிழ்ச்செம்மொழி இலக்கியங்கள் ஆகும்.”

எனத் தமிழ் இலக்கியச் சிறப்புகளை எடுத்துரைத்துள்ளார்.

 “தமிழின் மிகச்சிறந்த படைப்புகளில் ஒன்று, இன்றும்கூடப் பரவலாகக்கற்பிக்கப்படும் திருவள்ளுவரின் திருக்குறள் ஆகும்.எனவே, தெய்வப்புலவர் திருவள்ளுவர் பிறந்தநாளை, இந்தியா முழுமையும் இந்திய மொழிகள் நாளாகக் கொண்டாட வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார். தானும் 2015 இல் வடநாட்டில் 500க்கு மேற்பட்ட பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் திருவள்ளுவர் பிறந்தநாள் கொண்டாட ஏற்பாடு செய்யப் போவதாகவும் தெரிவித்துள்ளார். தமிழால் பிழைக்கும் எந்த அரசியல்வாதியும் செய்யாத செயலை ஆற்ற முன்வந்துள்ளார்.

 “அவர்கள் இந்தி கற்க வேண்டும் என நீங்கள் விரும்பினால், முதலில் நீங்கள் தமிழ் கற்கத் தொடங்குங்கள். நாட்டு ஒற்றுமையை வலிமைப்படுத்துவதற்காக அனைத்து வட இந்தியப் பள்ளி, கல்லூரிகளில் தமிழைப் பரப்ப மத்திய அரசு விரைவான நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்காகத் திட்டமிட வேண்டும்.”என்று இந்தியா முழுமையும் தமிழ் கற்பிக்கப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

  கட்சி வேறுபாடுகளையும் கருத்து மாறுபாடுகளையும் பாராமல் அனைத்து உறுப்பினர்களும் மேசையைத் தட்டிக் கரவொலியை மிகுதியாக எழுப்பினர்.

tharunvisay-twitter

  “தமிழின் மிகச் சிறந்த செம்மொழி இலக்கியம் என்னும் பெருமை கம்பரின் இராமாயணம் என்னும் காப்பியத்திற்கு உரியது என்பதில் ஐயமில்லை. இதன் முத்திரைகள் உலகின் பல பகுதிகளில் காணப்படுகின்றன. நம்மில் எத்தனை பேருக்கு, உலகச் செல்வாக்கு மிக்கப், பொதுப்பணிகள் ஆற்றிய பெரும் பேரரசர்களான சேர, சோழ பாண்டியர்களைப் பற்றித் தெரியும்? அசோகரும் விக்கிரமாதித்தரும் மட்டும் இந்தியா அல்ல. சோழர்கள், கிருட்டிணதேவராயர், பாண்டியர் முதலானவர் மீது மதிப்பு வைத்தாலன்றி, நாம் இந்தியராக முடியாது. இதேபோல், வங்காளம், தெலுங்கு, மலையாளம் முதலான பிற மொழிகளுக்கும் வரலாறு உள்ளது.

   தமிழ் மொழியை மதித்துப் போற்றும் வகையில் அனைத்து மாநிலங்களிலும் உயர் கல்விநிறுவனங்களில் சிறப்பு இருக்கைகளை மத்திய அரசு ஏற்படுத்த வேண்டும். தமிழில் சிறப்புப் பெறுவோருக்கு சிறப்புப் பதவி உயர்வுகளை வழங்க வேண்டும்.

  அதேபோல அனைத்து மத்திய பல்கலைக்கழகங்களிலும் தமிழுக்கு தனியாக இருக்கைகளை அமைக்க வேண்டும்.

  கடந்த காலங்களில் தமிழ்ப் புலவர்கள், தமிழறிஞர்கள் வட இந்திய புனிதத் தலங்களான கேதார்நாத் உள்ளிட்டவற்றுக்கு அதிகம் வந்துள்ளனர். மேலும் வட இந்திய, தென்னிந்தியா இடையே நல்லுறவும் இருந்துள்ளது.

  தேசியக் கவிஞராகப் போற்றப்படும் பாரதியார்தான் உண்மையிலேயே தேசிய ஒற்றுமையின் தலை சிறந்த அடையாளம். வட இந்தியர்களின் தலைப்பாகை அணிந்து, பண்பாடு, தேசிய ஒற்றுமை ஆகியவற்றின் மிகச் சிறந்த எடுத்துக்காட்டாகத் திகழ்ந்தவர் பாரதியார்.

   தமிழ் மொழிக்கு மிகச் சிறந்த பெருமைகள் உள்ளன. ஆனால் அந்தத் தகுதிக்குரிய சிறப்பையும், மதிப்பையும் நாம் கொடுத்திருக்கிறோமா என்ற கேள்விக்கு இங்கு யாரிடமும் விடை இல்லை”

என்று தமிழின் பெருமையை உரைத்த தமிழன்பர் தருண் விசய். அதை உணராமைக்கு வருத்தத்துடன் முடித்தார்

 tarunvisay-blog

நாடாளுமன்றத்தில் தமிழுக்காகக் குரல் கொடுத்ததுடன் தமிழன்பர் தருண்விசய் அமைதி காக்கவில்லை. தமிழக உயர்நீதிமன்றத்தில் தமிழ் தவழவும் வாதாடியுள்ளார்.ஆவணி 2, 2045 / ஆக. 18, 2014 அன்று குடியரசுத் தலைவரைச் சந்தித்து, தமிழ்நாட்டின் உயர்நீதிமன்றத்தில் தமிழே வழக்குமொழியாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் முறையீடு அளித்துள்ளார். அதன் பின்னர் அவர், செய்தியாளர்களைச் சந்தித்துத் தமிழ்நாட்டு(சென்னை) உயர்நீதிமன்றத்தின் நடைமுறையும் தீர்ப்புகளும் தமிழில் இருக்க வேண்டியதன் இன்றியமையாமையை விளக்கி உள்ளார்.

   தமிழ்நாடு சட்டமன்றத்தில் தமிழை உயர்நீதிமன்ற மொழியாக நடைமுறைப்படுத்தத் தீர்மானம் இயற்றிய தமிழக அரசு முன்பே மத்திய அரசிற்கு அனுப்பியிருந்தது. மத்திய அரசு, உச்சநீதிமன்ற கருத்திற்கு அனுப்பி வைத்தது. அப்போதைய தலைமை நீதிபதி பாலக்கிருட்டிணன் தலைமையிலான முழு ஆயம் அதனை மறுத்து விட்டது.

  உச்ச நீதிமன்றத்திலும் உயர்நீதிமன்றங்களிலும் பொதுவான மொழிதான் பயன்படுத்தப்பட வேண்டும் என்றும் ஆங்கிலமே உச்சநீதிமன்றத்திலும் உயர்நீதிமன்றங்களிலும் அலுவலக மொழியாக இருக்கவேண்டும் என்றும் அவை தமிழில் இருப்பின், நீதிமன்ற நடவடிக்கைகளைப் புரிந்து கொள்வதில் பெரும் சிக்கல் இருக்கும் என்றும் முழு ஆயம் தெரிவித்தது. மேலும், அலுவலக மொழியை மாற்றும் பொழுது பிற மாநிலத்தில் இருந்து நீதிபதிகள் வருகையில், நீதிமன்றப் பணிகளை ஆற்றுவதிலும் இந்தியச் சட்டத்தை நிலைநிறுத்துவதிலும், மிகுந்த இடர்ப்பாடுகள் இருக்கும் என்றும் தெரிவித்தது. அதுமட்டுமல்லாமல் நீதியை விரைந்து வழங்குவதிலும் இடையூறு ஏற்படும் என்றும் தெரிவித்தது.

  இம்முறையீட்டில், “பெரும்பாலான வட இந்திய உயர்நீதி மன்றங்களில் அந்தந்தப் பகுதி மொழிதான் நீதிமன்றத்தின் தொடர்பு மொழியாகவும் தீர்ப்பு வழங்கப்படும் மொழியாகவும் உள்ளது. அனைத்து இந்திய மொழிகளையும் சம மதிப்புடன் நடத்த வேண்டும் என்பதால் நீதிபதிகள் வெவ்வேறு மொழியைச் சேர்ந்தவர்கள் என்பதைச் சிக்கலாகப் பார்க்கக்கூடாது.” எனக் குறிப்பிட்டுப் பிற நீதிமன்றங்களில் உள்ளதுபோல் தமிழ்நாட்டில் தமிழ் உயர்நீதிமன்ற மொழியாக இருக்க வேண்டும் என வேண்டி உள்ளார்.

  தமிழ்நாட்டின் உயர்நீதிமன்றத்தில் தமிழ்தான் வழக்குமன்ற மொழியாக இருக்க வேண்டும் எனத் தமிழக அனைத்துக் கட்சிகளும் மன்றாடி வருவதைக் குறிப்பிட்டு இதனை ஏற்றுக் கொண்டு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் முறையிட்டுள்ளார்.

  இவர் சங்க இக்கியங்கள் பற்றி அறியவில்லையா? அல்லது உரையில் விடபட்டுள்ளதா எனத் தெரியவில்லை. சங்க இலக்கியச் சிறப்புகளையும் இவரறியச் செய்ய வேண்டும்.

   மும்மொழித்திட்டம் என்ற பெயரில் வடக்கே தமிழ் கற்பிக்க வாய்ப்பு இருப்பினும் இதுவரை இத்திட்டத்தின்கீழ் ஒருவருக்குக் கூடத் தமிழ் கற்பிக்கப்பட்டதில்லை. இதுவரை அமைதி காத்த தமிழக அரசியலாளர்களும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் தமிழக அரசும் அதற்கான நிதி ஒதுக்கீட்டில் தமிழ் கற்பிக்கப்பட உரிய முயற்சியில் இறங்க வேண்டும். வடக்கே தருண் விசய்கள் பெருகும் வண்ணம் தமிழ் பரப்ப வேண்டும்.

   செம்மொழி நிறுவனம் மூலம் இந்திய நாட்டின் அனைத்துப் பல்கலைக்கழகங்களிலும் தமிழ்த்துறைகள் தொடங்கவும் தமிழ் இருக்கைகள் அமைக்கவும் முடியும். அதற்கான செயலிலும் இறங்க வேண்டும்.

  தமிழன்பர் தருண்விசய் உரையைப்படித்த அனைவரும் செய்தி வந்த இதழ்களிலும், அவரது முகநூல், வலைப்பூ, இணையத் தளம் முதலியவற்றிலும் பாராட்டியும் நன்றி தெரிவித்தும் கருத்துகள் பதிந்துள்ளனர். தொலை பேசி வாயிலாகவும் பாராட்டிப் பேசியுள்ளனர். வழக்குரைஞர் கரூர் இராசேந்திரன் அவருடன் பேசியதுடன் நில்லாமல் அவருக்குப் பாராட்டு விழா நடத்த வேண்டும் என்ற ஊக்கத்தையும் தொலைபேசி வழி பாராட்ட வேண்டும் என்ற எண்ணத்தையும் பிறரிடம் ஏற்படுத்தி வருகிறார்.

tharunvisay-upperhouse

தமிழ்க்காப்புக்கழம்கம், இலக்குவனார் இலக்கிய இணையம் சார்பில் அவரைத் தமிழ்நாட்டிற்கு அழைத்துப் பாராட்டுவிழா நடத்துவது தொடர்பாக அவரிடம் தொலைபேசி வழியாகப்பாராட்டியதுடன் வேண்டுகோளும் விடுத்துள்ளார் பேராசிரியர் மறைமலை இலக்குவனார்.அகரமுதல இதழ் சார்பிலும் அதன் ஆசிரியர் என்ற முறையில் நானும் (இலக்குவனார் திருவள்ளுவன்) தொலைபேசி வழியாகப் பாராட்டிப் பேசினேன். அனைத்துத் தமிழ்ச்சங்கங்கள் சார்பாக அவரைப் பாராட்ட நடவடிக்கை எடுத்து வருவதாகத் தலைநகர்த் தமிழ்ச் சங்கப் பொதுச்செயலர் புலவர் த.சுந்தரராசன் தெரிவித்தார். அடக்கத்தின் காரணமாகவும், கட்சி நிலைப்பாடு காரணமாகவும் தமிழன்பர் தருண் விசய் உடனே தமிழகம் வரத் தயங்குகிறார். எனினும் பிற பணியின் பொருட்டு அவர் தமிழகம் வர உள்ளார். அப்பொழுது நாம் நேரிலும் பாராட்டுவோம்.

tarunvisay-particulars

அவரது பேசி எண், மின்வரி ஆகியவற்றின் மூலம் அகரமுதல அன்பர்களும் அவரைப் பாராட்ட வேண்டுகின்றோம்.

தமிழ்த்தூதர் தருண்விசய் தரணியில் புகழ் பெற்று நீடு வாழ்கவே!

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

இதழுரை

ஆவணி 15, 2045 / ஆக.31, 2014 http://www.akaramuthala.in/wp-content/uploads/2013/12/AkaramuthalaHeader.png