karnataka finanace meetting01

 ஒரு புறம் தமிழ்நாட்டில் தொழிலகங்களில் அயலவர் ஆதிக்கம் ஓங்கிக் கொண்டு உள்ளது. மறு புறமோ தமிழ்நாட்டவர்கள் முதலீடுகள் அயலகங்களுக்குத் திருப்பிவிடப்படும் அவலம் அரங்கேறுகிறது.

  தமிழகக் கருநாடக எல்லையில் உள்ள சாம்ராசு நகர் மாவட்டத்தில், 1,400 காணியில் தொழில் மண்டலம் அமைக்கப்பட்டு வருகிறது. இதற்கு முதலீட்டாளர்களை இழுக்கும் வகையில், கோவையில், கடந்த, 20.01.14 அன்று  ‘சாம்ராசு நகர் முதலீட்டாளர்கள் மாநாடு’ நடத்தப்பட்டது. கருநாடகத் தொழில்  வணிக அவைக் கூட்டமைப்பின் சார்பில் நடத்தப்பட்ட இந்த மாநாடு, தமிழகத்தின் மேற்கு மாவட்டங்களில் உள்ள பல்லாயிரக்கணக்கான தொழில் முனைவோரின் கவனத்தை ஈர்த்துள்ளது. அந்த மாநாட்டில், கருநாடக முதல்வர் சித்தராமய்யா, தொழில் துறை அமைச்சர், கருநாடக மாநில அரசின் உயர் அதிகாரிகள் பங்கேற்று, தொழில்அதிபர்களுக்குப் பல்வேறு கவர்ச்சிமிகு வாக்குறுதிகளை அளித்து உள்ளனர். மாநாட்டில் பேசிய சித்தராமய்யா, ”கருநாடகாவில் தொழில்  தொடங்க வாருங்கள். அனைத்து வசதிகளையும் செய்து தருவோம்,” எனத் தமிழகத் தொழில் அதிபர்களுக்கு அழைப்பு விடுத்து உள்ளார்.  இதனால், கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம்  முதலான கொங்கு மண்டலப் பகுதிகளில் தொழில் நடத்தும், எறத்தாழ 200 தொழில் அதிபர்கள், 12 ஆயிரம் கோடி ரூபாய்க்கு, சாம்ராசு நகரில் முதலீடுகளை மேற்கொள்ள முன்வந்து உள்ளனர்.

   இது குறித்து, கருநாடகத் தொழில் வணிக அமைப்பினர்  முதலீட்டு மாநாடு,பெரும்  வெற்றியைப் பெற்றுள்ளதாக மகிழ்ச்சியைத் தெரிவித்துள்ளனர். கொங்கு மண்டிலத்  தொ ழில் முனைவோர்களோ இங்கிருந்து எத்  தொழிலும் அங்கு மாறவில்லை. தொழில் விரிவாக்கம்தான் நடைபெறுகின்றது எனச் சப்பைக் கட்டு  கட்டுகின்றனர்.  ஒரே நாளிலேயே 12 ஆயிரம்கோடி உரூபாய்கும் மேலாகத் தமிழக நிதி அயல் மாநிலத்திற்குச் சென்றுள்ளது என்றால் இனியும் பல ஆயிரம் கோடி  இடம் பெயரும் என்பதும் மறுக்க முடியாத உண்மையன்றோ! இம் முதலீடு தமிழ்நாட்டிலேயே அமைந்திருந்தால் ஏற்படும் தொழில் வளமும் வேலைவாய்ப்பும் அதனால் உயரும் வாழ்க்கை நிலை உயர்வும் நமக்குப் பேரிழப்பு என்பதும்  கசப்பான வருந்தத்தக்க உண்மையன்றோ! உரிய  முதலீட்டுச் சூழலைத் தமிழக அரசு ஏற்படுத்தித் தமிழகத்தைத் தொழில் மாநகராக உயர்த்த வேண்டும்.

  கருநாடகாவிற்கு மட்டுமல்லாமல், சண்டீசுகர், குசராத்து முதலான பிற மாநிலங்களுக்கும் இங்குள்ளோர் முதலீடு இடம் மாறிச் செல்கிறது.  பிற மாநிலங்களுக்கும்  நாளை இவ்வாறு முதலீடு இடம் பெயரும். இப்பேரிடரைக் களைந்து வளமான தமிழகத்தை உருவாக்கத் தமிழ்நாட்டரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். காட்சிக் கெளியராகவும் உள்கட்டமைப்பு நலன்களைச் சிறப்பாக அளிப்பவராகவும் தடையற்ற மின்வழங்குநராகவும் உரிய பொறுப்பாளர்கள் நடந்து கொண்டால் தமிழகம் தலைநிமிர்ந்து நிற்கும்.

இல்லையேல் நாம் அயலவர்க்கு முழு அடிமையாகும் நிலை வெகு தொலைவில் இல்லை!

 

இதழ் 10Akaramuthala-Logo

தை 13, தி.பி.2045

 சனவரி 26, கி.பி.2014