பா.ம.க.எதிர்ப்பைக் கொள்கையாகக் கொள்ள வேண்டா!:திருமாவுக்கு வேண்டுகோள்! – இலக்குவனார் திருவள்ளுவன்

பா.ம.க.எதிர்ப்பைக் கொள்கையாகக் கொள்ள வேண்டா!:திருமாவுக்கு வேண்டுகோள்!
விடுதலைச்சிறுத்தைகளின் நல்ல கொள்கைகள் இடையே ஒரு குறிப்பிட்ட வகுப்பாருக்கு எதிராகச் செயற்படுவதையே கொள்கையாகக் கொள்வது பெருந்தவறு என்பதை அதன் தலைவர் தொல்.திருமாவளவன் உணர வேண்டும்.
அனைத்துக் கட்சிகளும் மாறுபட்ட கொள்கைகளுடன் இருப்பது இயற்கை. என்றாலும் கொள்கை யடிப்படையிலும் அவற்றின் அடிப்படையிலான செயற்பாட்டு அடிப்படையிலும் வேறுபாடுகள் இருந்தாலும் ஒவ்வொரு கட்சியும் பிற கட்சிகளை எதிரிக்கட்சிகளாக் கருதி பகைமை பாராட்டுவது நல்லதல்ல.
தமிழ்நாட்டின் இரு பெரும் கட்சிகளான வி.சி.க.வும் பா.ம.க.வும் வெவ்வேறு கொள்கைகளைக் கொண்டிருந்தாலும் ஒத்த கருத்துகளில் உடன்பட்டுச் செயற்படுவதுதான் அக்கட்சிகளுக்கும் நாட்டிற்கும் நன்று. ஆனால், உடன்பாடான கொள்கைகள் பல இருப்பினும் பகைமை பாராட்டுவது ஏன்? சமத்துவமான தமிழகம், சாதியற்ற குமுகம், அனைவருக்குமான கல்வியும் வேலை வாய்ப்பும், பெண்கள் – இளைஞர் முன்னேற்றம், மனித உரிமைப் பாதுகாப்பு, தமிழர் பண்பாட்டு வளர்ச்சி, தமிழ்மொழிக்காப்பு என எல்லாவற்றிலும் இரு கட்சிகளும் ஒத்த கொள்கையைத்தான் அறிவித்துள்ளனர். எனவே, ஒன்றிணைந்து செயற்படவேண்டிய இரு கட்சியினரும் எதிர்த்து நின்றால் அவர்களின் கொள்கை நிறைவேற்றத்திற்கு ஊறு நேரும் அல்லவா?
அதிலுங் குறிப்பாக வி.சி.க.வின் வன்னியர் எதிர்ப்பு என்பது நாட்டிற்கும் கேடு என்பதை அறிந்தும் விடாப்பிடியாக இருப்பது முறையல்ல.
த.வெ.க. அமைத்துள்ள கூட்டணி ஆட்சியில் பா.ம.க. இணைவதாகச் செய்திகள் வருகின்றன. அவ்வாறு இணைந்தால் கூட்டணியை விட்டு வெறியேறுவோம் என வி.சி.க.கூறுகிறது.
“சாதியவாத பாமக, மதவாத பாசகவோடு விசிக கூட்டணி ஒருபோதும் இல்லை” எனத் திருமாவளவன் சொல்லியுள்ளார். கிறித்துவ, இசுலாமியக் கட்சிகளுடன் கூட்டணி வைத்துக் கொண்டு இவ்வாறு கூறுவது சரியல்ல. சாதிப்பற்றில் உருவாக்கப்பட்ட கட்சிகளும் நாளடைவில் தங்கள் அடையாளத்தைப் பொதுவாகத்தான் காட்டுகின்றன. அவ்வாறு சாதிக் கட்சிகள் பல உள்ளன. வி.சி.க.வே தாழ்த்தப்பட்டோர் (தலித்து) சிறுத்தைகள் இயக்கம் என்று இருந்ததுதான். மராத்தியில் ‘தலித்து’ எனத் தொடங்கப்பட்டதே தமிழ்நாட்டிலும் அப்பெயர் கொண்டது. இப்பெயரில் எம். மலைச்சாமி என்பவரால் தொடங்கப்பட்டதுதான் அவர் மறைவிற்குப் பின் தலைமைப் பொறுப்பேற்ற திருமாவால் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி எனப் பெயர் பெற்றது.
இவ்வமைப்பின் பெயரில் இல்லாவிட்டாலும் நடைமுறையில் தாழ்த்தப்பட்டோர் பழங்குடியினர் நலக்கட்சிதான். எனவே, சாதி வெறி, மதவெறி கூடாது என வற்புறுத்திச் செயற்படலாமே தவிர, உள்ளொன்று வைத்துப் புறம் ஒன்றாக வைத்துக் கொண்டு சாதியவாத மத வாதத்திற்கு எதிரானதாகக் காட்டிக் கொள்வதை மக்கள் நம்பவில்லை.
தமிழ்நாட்டு மக்கள் தொகையில் ஏறத்தாழ எட்டில் ஒரு பங்கினர் வன்னியராக உள்ளனர். தாழ்த்தப்பட்ட பழங்குடியினர் ஏறத்தாழ ஐந்தில் ஒரு பங்கினர் உள்ளனர். இவ்விரு வகுப்பாரிடையே நிலையான கலகத்தை உண்டாக்குவதை ஒரு கொள்கையாகக் கொள்வது அறமாகுமா?
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, பாட்டாளி மக்கள் கட்சி ஆகியவை 2004 நாடாளுமன்றத் தேர்தல், 2006 சட்டமன்றத் தேர்தல், 2011 ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல்களில் ஒரே கூட்டணியில் (திமுக தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில்) இணைந்திருந்தன. இப்பொழுது மீண்டும் இணைவதில் என்ன தவறு? திமுக தான் தங்களைப் பிளவு படுத்தியதாகத் திருமா கூறுகிறார். இப்போதுதான் திமுக கூட்டணியில் இல்லையே! அடுத்தவரால் பிளவு பட்டதை உணர்ந்துள்ளதால் மீள இணையலாம் அல்லவா?
தமிழில் பெயர்ப் பலகைகள் வைப்பது, தமிழ் மொழியைப் பாதுகாப்பது போன்ற தமிழ்நல நோக்கங்களுக்காக மருத்துவர் இராமதாசும் தொல். திருமாவளவனும் இணைந்து 2002 இல் ‘தமிழ்ப் பாதுகாப்பியக்கம்’ என்ற அமைப்பைத் தொடங்கி ஒன்றாக மேடைகளில் முழங்கினர். தமிழுக்காக என்றும் இணைந்து செயற்படுவோம் எனவும் கூறி வந்தனர். அந்த உணர்வு எங்கே போயிற்று?
விசிக தொடங்கப்பட்ட பொழுது தேர்தல் புறக்கணிப்பு என்பதையே அடிப்படைக் கொள்கையாகக் கொண்டிருந்தது. திருமா தனிமனிதராகத் தன் அமைப்பின் கொடியைக் கொடிக்கம்பத்தில் ஏற்றியதிலிருந்து என் கெழுதகை நண்பராக உள்ளார். அந்த உரிமையில் தேர்தல் புறக்கணிப்பைக் கைவிட வேண்டும் என்று முன்பு மதுரையில் இருந்த அவரிடம் விளக்கமாக வலியுறுத்தினேன். இறுதியில் “அடிப்படைக் கொள்கையான தேர்தல் புறக்கணிப்பைக் கைவிடுவது அடிமடியிலேயே கை வைப்பதாக உள்ளது. எவ்வாறு அதனைக் கைவிடுவது” என்றார். “தேர்தலைப் புறக்கணிப்பது கொள்கை இல்லை. அஃது ஒரு வழிமுறையே யாகும். உங்கள் கொள்கைகளை நிறைவேற்ற அந்த வழிமுறை தடையாக இருக்கும் பொழுது அதைக் கைவிடுவதே நல்லது. மக்கள் மன்றங்களில் நுழைந்து மக்களுக்காகக் குரல் கொடுத்து அவர்களை மேம்படுத்துவதையே வழிமுறையாகக் கொள்ள வேண்டும். எனவே, மக்கள் மன்றங்களில் நீங்கள் பங்கேற்க வேண்டும். நாளை ஆட்சியிலும் பொறுப்பேற்க வேண்டும்.” என்றேன். தான் இதை ஒப்புக் கொள்வதாகவும் கட்சிப் பொறுப்பாளர்களிடம் கலந்து பேசி முடிவெடுப்பதாகவும் தெரிவித்தார். மறுநாள் தேர்தல் புறக்கணிப்பைக் கைவிடும் முடிவை எடுத்துள்ளதாகவும் ஆனால், இந்த முறை தேர்தலைப் புறக்கணிப்பதாகச் சுவரொட்டி ஒட்டுவதை மட்டும் மேற்கொண்டு பரப்புரையைக் கைவிடுவதாகவும் தொண்டர்களிடம் தேர்தல் புறக்கணிப்புக் காரணங்களை விளக்கி விட்டு அடுத்த ஆண்டு முதல் தேர்தலில் பங்கேற்பதாகவும் தெரிவித்தார். மேலும் ஒன்றையும் தெரிவித்தார். அப்போது மதுரை மாவட்ட ஆட்சியராக இருந்த சோ.அய்யர் இ.ஆ.ப. மட்டும்தான் தங்களை அமர வைத்துப் பேசியவர் எனவும் அவரது பதவிக்காலத்தல் தேர்தல் புறக்கணிப்புப் பரப்புரையை எவ்வாறு மேற்கொள்வது எனத் தயங்கியதாகவும் இப்பொழுது இதனையும் கருதித் தேர்தல் புறக்கணிப்பை முழுமனத்துடன் கைவிடுவதாகவும் தெரிவித்தார்.
எப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு.
(திருவள்ளுவர், திருக்குறள், ௩௱௫௰௫ – 355)
என்பதற்கேற்ப எதையும் கூர்ந்தாய்ந்து முடிவெடுக்கும் தொல்.திருமாவளவன் இப்பொழுதும் பாமக எதிர்ப்புக் கொள்கையைக் கைவிடுவது குறித்து நன்கு கருதிப் பார்த்து எதிர்ப்பைக் கைவிடுமாறு அன்புடன் வேண்டுகிறோம். இதில் ஏதும் இடர்ப்பாடு இருப்பதாகக் கருதினால், முதற்கட்டமாக, ஒரு கூட்டணியில் இணையத் தடையில்லை என்றும் எனினும் ஒரே மேடையில் பரப்புரை மேற்கொள்வது இப்போதைக்கு இல்லை என்றும் அறிவிக்கட்டும். பாமக தவெக கூட்டணியில் இணைவதன் மூலம் ஆட்சி வலுப்படும், மேலும் சிறப்பான திட்டங்களைத் தீட்ட இயலும். அவ்வாறில்லாமல் பாமக இணைந்தால் விசிக விலகும் என்றால், விசிக அமைச்சர் வன்னியரசு சமூக நீதித்துறை மூலம் ஆற்றி வரும், ஆற்ற உள்ள பணிகளை நிறுத்த விரும்புகிறாரா? மக்கள் நலன் கருதி ஆட்சியைப் பிளவு படுத்த விரும்பலாமா?
“தமிழ்க்குடிதாங்கி”, “அம்பேத்கர் சுடர்” என மரு.இராமதாசைப் பாராட்டிய முனைவர் தொல்.திருமாவளவன் இன்றைக்கு எதிரும் புதிருமாகக் கூட அல்ல, பிறவிப் பகைவர்போல் பேசுவது குறித்து மறு ஆய்வு செய்ய வேண்டும்.
செயற்கரிய யாவுள நட்பின் அதுபோல்
வினைக்கரிய யாவுள காப்பு. (திருவள்ளுவர், திருக்குறள், ௭௱௮௰௧ – 781)
ஆதலின் அரிய பாதுகாப்பான நட்பை பா.ம.க.வுடன் கொள்ள வேண்டும். இந்நட்பு இரண்டு வகுப்பாரிடையே ஒற்றுமையை ஏற்படுத்தும். இந்நட்பின் காரணமாகப் “பாமக நுழைந்தால் வெளியேறுவோம்” என்று சொல்லத் தேவை வராது. பாமகவினரும் அமைச்சர் பொறுப்பேற்றுத் தம்மைச் சார்ந்தவர்க்கும் நாட்டுக்கும் நற்பணியாற்றுவார்கள்.
ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு என்பதைச் சொல்லவும் தேவையில்லை அல்லவா?
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
இதழுரை-அகரமுதல








Leave a Reply