(ஊரும் பேரும் 64 : இரா.பி.சேது(ப்பிள்ளை) – அருங்குன்றம் – தொடர்ச்சி)

ஊரும் பேரும்
6. தமிழகம் – அன்றும் இன்றும்


முன்னொரு காலத்தில் இமயம் முதல் குமரிவரை தமிழ் மொழியே பரவியிருந்த தென்பது தக்கோர் கருத்து. அப் பழம்பெருமையை நினைந்து,


சதுர்மறை ஆரியம் வருமுன்
சகமுழுதும் நினதானால்
முதுமொழி நீ அனாதியென
மொழிகுவதும் வியப்பாமே”


என்று மனோன்மணியம் பாடிற்று. அந்நாளில் கங்கை நாட்டிலும்,காவிரிநாட்டிலும் தாளாண்மை யுடைய தமிழர் வேளாண்மை செய்தனர்; வளம் பெருக்கினர்; அறம் வளர்த்தனர். கங்கைத் திரு நாட்டில் பயிர்த் தொழில் செய்த வேளாளர் இன்றும் தமிழகத்தில் கங்கை குலத்தவர் என்றே கருதப்படுகின்றார்கள். எனவே, பழங்காலத்தில் பாரத நாடு முழுவதும் தமிழகமாகவே விளங்கிற்று.


அந்நிலையில் ஆரியர் வந்தனர்; வட நாட்டில் குடியேறினர். நாளடைவில் அந்நாட்டில் ஆரியரும் தென்நாட்டில் தமிழரும் அமைந்து வாழ்வாராயினர். ஆரியர் மொழி வடமொழி யென்றும், தமிழர் மொழி தென் மொழியென்றும் பெயர் பெற்றன. தென் மொழியின் வழி வந்த திராவிட மொழிகளில் கன்னடமும் தெலுங்கும் தென்னாட்டில் தனித்தனியே வாழத் தலைப்பட்டன. அதனால் தமிழகத்திற்குத் திருவேங்கடம் வடக்கெல்லை யாகவும் குமரியாறு தெற்கெல்லையாகவும், கடல் ஏனைய இரு திசையிலும் எல்லையாகவும் அமைந்தன.


“வேங்கடம் குமரித் தீம்புனல் பெளவமென்று
இந்நான் கெல்லை தமிழது வழக்கே”
1


என்னும் பழம் பாட்டால் தமிழ் நாட்டின் நான்கு எல்லைகளையும் நன்குணரலாகும். இது தொல்காப்பியர் கண்ட தமிழகம்.
தொல்காப்பியர் காலத்திற்குப் பின்பு தமிழகத்தின் தென் பாகத்தைக் கடல் கவர்ந்துவிட்டது.

பஃறுளி யாற்றுடன் பன்மலை யடுக்கத்துக்
குமரிக் கோடும் கொடுங்கடல் கொள்ள”
2


என்று இளங்கோவடிகள் வருந்திக் கூறுமாற்றால் இவ் வுண்மை விளங்குவதாகும். ஆகவே, சிலப்பதிகாரக் காலத்தில் குமரியாறு போய், குமரிக் கடல் தமிழ் நாட்டின் தென்னெல்லை யாயிற்று.
இவ்வாறு குறுகிய தமிழகத்தில் ஆட்சி புரிந்த மூவேந்தரும் முத்தமிழை ஆதரித்து வளர்த்தனர். ஆயினும், கால கதியில் மலை நாடாகிய சேர நாட்டில் வழங்கிய தமிழ் மொழி திரிந்து வேறாகி மலையாளம் என்னும் பெயர் பெற்றது. அந் நிலையில் மலையாள நாட்டுக்கும் தமிழ் நாட்டுக்கும் இடையே குட மலைத் தொடர் எல்லை குறிப்பதாயிற்று.


இன்று தமிழ்த் தாயின் திருவடியாக விளங்குவது திருநெல்வேலி. அந்நாட்டை நீருட்டி வளர்க்கும் திருநதியைப் “பொன் திணிந்த புனல் பெருகும் பொருநை” என்று போற்றினார் கம்பர். அந் நதியின் பெயர் இலங்கையின் பழம் பெயராக வழங்கிற்றென்பர்.3 அங்குத் திருநெல்வேலி என்ற பெயருடைய ஊர் இன்றும் உள்ளது.
இலங்கைத் தீவகத்தில் நெடுங்காலமாகத் தமிழர் வாழ்ந்து வரும் பகுதி யாழ்ப்பாணம் ஆகும். யாழ்ப்பாணர் என்பார் பண்டைப் பாணர் குலத்தில் ஒரு வகுப்பார்.


குழலினும் யாழினும் குரல்முதல் ஏழும்
வழுவின் றிசைத்து வழித்திறம் காட்டும்
4

பாணர் பெருமை பழைய தமிழ்ப் பனுவல்களால் விளங்கும். நற்றமிழ் வல்ல ஞான சம்பந்தருடன் தலந்தொறும் சென்று அவர் பாடிய தமிழ்ப் பாட்டை யாழில் அமைத்து, இன்னிசையமுதமாக வழங்கிய திரு நீலகண்ட யாழ்ப்பாணர் என்னும் திருத் தொண்டர் அவ்வகுப்பைச் சேர்ந்தவர். இத்தகைய யாழ்ப்பாணர் குடியேறி வாழ்ந்த இலங்கைப் பகுதி யாழ்ப்பாணம் என்று பெயர் பெற்றது. கால கதியில் அச்சொல்லில் உள்ள ழகர வொற்று நழுவி யாப்பாணம் என்றாயிற்று. பின்பு, அச்சொல் பிற நாட்டார் நாவில் அகப்பட்டு யாப்பனம் என்றும், ‘ஜாப்பனம்‘ என்றும் சிதைந்து, இப்பொழுது ‘ஜாப்னா‘ என வழங்குகின்றது.


இன்னும், இயற்கை வளமுடைய பல நாடுகளில் தமிழர் குடியேறி வாழத் தலைப்பட்டனர். அவர் சென்ற இடமெல்லாம் சீர் பெருகிற்று. மலய நாட்டுக்குப் பெயரிட்டவர் தமிழரே. மலை வளம் சிறந்த அந் நாட்டுக்கு மலைய நாடு என்னும் பெயர் மிகப் பொருத்த முடைய தன்றோ? அங்கு மூவாறு என்பது ஓர் ஊரின் பெயர். இன்னும், சாவக நாடும், அதன் தலைநகரமாகிய நாகபுரமும் மணிமேகலைக் காவியத்தில் குறிக்கப்படுகின்றன.5 தமிழ்நாடு தன்னரசு பெற்றிருந்த போது கடல் சூழ்ந்த பல நாடுகளில் தமிழ்க் கொடி பறந்தது. திக்கெல்லாம் புகழும் திருநாடாகத் தமிழகம் விளங்கிற்று.


“சிங்களம் புட்பகம் சாவகம்-ஆதிய
தீவு பலவினும் சென்றேறி-அங்குத்
தங்கள் புலிக்கொடி மீன்கொடியும் நின்று
சால்புறக் கண்டவர் தாய்நாடு”


என்று அந்நாட்டைப் புகழ்ந்து மகிழ்ந்தார் பாரதியார்.
இக்காலத்தில் தமிழன்னையின் திருமுடியெனத் திகழ்வது திருவேங்கடமலை. அம்மலையை “மாலவன் குன்றம்” என்பர்.

“நீலத் திரைகடல் ஓரத்திலே-நின்று
நித்தம் தவஞ்செய் குமரியெல்லை – வட
மாலவன் குன்றம் இவற்றிடையே – புகழ்
மண்டிக் கிடக்குந் தமிழ்நாடு”

என்று குறுகி நிற்கும் தமிழகத்தின் பெருமையைக் கூறிக் கவிஞர் மகிழ்கின்றார்.


அடிக் குறிப்பு
1.இசை நுணுக்கம் இயற்றிய சிகண்டியார் பாட்டு.

  1. சிலப்பதிகாரம், காடு காண் காதை, 19 – 20.
  2. Comparative Grammar of Dravidian Language Introduction. P98
  3. சிலப்பதிகாரம், இந்திர விழவூரெடுத்த காதை, 35-36.
  4. மணிமேகலை, காதை 14, வரி 74.

++
இணைப்பாகத் தமிழ்‌ நாட்டுத்‌ தலங்கள்‌, பெயரகராதி தரப்பட்டுள்ளன.

நிறைவு

ஊரும் பேரும், இரா.பி.சேது(ப்பிள்ளை)