(சட்டச் சொற்கள் விளக்கம் 411-420 : இலக்குவனார் திருவள்ளுவன்-தொடர்ச்சி)

421. account of crime, Give anகுற்ற வரலாறு கூறு/ கொடு  

குற்றம் சாட்டப்பட்டவர் அல்லது குற்றவாளியின் முந்தைய குற்ற வழக்கு,

தண்டனை விவரக்கணக்கைத் தெரிவித்தல்.

குற்றக் கணக்கு என நேர் பொருளாக இருந்தாலும் வழக்கிலுள்ள குற்றவரலாறு என்பதே சரியாக உள்ளது.  

முதல் குற்றவாளியா, வழக்கமான குற்றவாளியா, சட்டவகையிலான குற்றவாளியா, ஒழுக்கக்கேட்டுக் குற்றவாளியா, மனநோய்க்குற்றவாளியா, நிறுவனக் குற்றவாளியா, வெள்ளாடைக் குற்றவாளியா(அழுக்குபடியாமல் குற்றம் செய்பவர்), தொழில் முறைக் குற்றவாளியா, சூழல் குற்றவாளியா, சில நேரக் குற்றவாளியா என அறியக் குற்ற வரலாறு உதவும்.  

ஒரே வகையான குற்றம் புரிபவரா, ஒரே முறையில் குற்றம் புரிபவரா, திருட்டு, கொலை, கொள்ளை, கடத்தல் என வெவ்வேறு குற்றங்களைச் சேர்த்துச் செய்பவரா எனவும் அறிய உதவும்.  

தண்டனை குற்றச் செயலுக்கல்ல, குற்றம் புரிந்தவருக்கே என்ற அடிப்படையில் குற்றவாளியைப் புரிந்து கொள்ள குற்ற வரலாறு உதவும்.
422. account of experiment/ an  account of experimentதேர்வாய்வு பற்றிய விவரிப்பு  

ஒரு கருதுகோளை ஏற்க அல்லது மறுக்க அல்லது திறனை வரையறுக்க அல்லது முன்னர் முயலப்படாத சிலவற்றின் சாத்தியக் கூறுகளைத் தீர்மானிக்கச் செயற்படுத்தப்படும் ஆய்வே தேர்வாய்வு ஆகும்.  
இங்கே, சட்டம், குற்றம், நீதி சார்ந்து  மேற்கொள்ளப்படும் தேர்வாய்வு பற்றி விவரிப்பதைக் கூறுகிறது.
423. account of profitsஆதாயக் கணக்கு  

தரப்பினர்  நம்பக உறவில் இருக்கும் பொழுது  பயன்படுத்தப்படும் ஒரு சமமான தீர்வு.  

இத்தீர்வின் நோக்கம் ஒரு தரப்பு பெற்ற ஆதாயத்தைச் சரணடையச் செய்வதாகும்.
424. account of, Onபொருட்டு  

ஒரு நிலையின் பொருட்டு அல்லது காரணமாக ஒன்றைச் செய்தல் அல்லது செய்யாமல் விடுதல்.
425. account payeeகணக்குவழிப் பெறுநர்

வங்கிக் கணக்கு மூலமாகப் பணம் பெறுபவர்.
426. account payee onlyகணக்குவழிப் பெறுநர் மட்டும்  

காசோலையில் குறிப்பிடும் தொகை,

காசோலை யார் பெயரில் எழுதப்பட்டுள்ளதோ, அவரது வங்கிக் கணக்கில் செலுத்தி அதன் மூலம் மட்டுமே பெற இயலும்.

இயல்பான காசோலையை அக்காசோலை யாருக்காவது மாற்றப்பட்டிருந்தால், அக்காசோலையை வைத்திருப்பவரும் பணமாக மாற்றலாம்.
427. account renderedகொடு கணக்கு  

கொடுக்கப்பட்ட கணக்கு   (கொடுங்கணக்கு என்றால் கொடுமையான கணக்கு எனப் பொருள் வரும்.)

கணக்கு அறிக்கையில் காணப்படும் செலுத்தப்படாத தொகையைக் குறிக்கிறது. இதன் விபரங்கள் முந்தைய அறிக்கையில் தரப்பட்டிருக்கும்.

செலுத்தப்படாத தொகை என்பதால் நிலுவைக் கணக்கு என்றும் குறிப்பர்.   கடன் கொடுத்தவர் கடன் வாங்கியவருக்குப் பற்றுவரவு விவரத்தைக் காட்டி மீதித் தொகையைக் கேட்டல்;

இது குறித்துப் பூசல் ஏற்படுகையில் அதனால், வழக்குத் தொடுக்கப்பட்டால் கணக்கின் உண்மைத் தன்மை குறித்து நீதிமன்றத்தை மனநிறைவு கொள்ளச் செய்ய அளிக்கும் பற்று வரவு விவரம்
428. account revenueவருவாய்க் கணக்கு  

வருவாய் இருப்புடன் கூடிய கணக்கு.  

வணிக நடவடிக்கைகளிலிருந்து வரும் வருமானத்தைப் பதிவு செய்யுங்கணக்கு   

அரசின் நடப்பிலுள்ள பெறுகைச்சீட்டுகளுடன் அனைத்து வருவாய்ப் பெறுகைச் சீட்டுகளும் இதில் அடங்கும்.  

அரசின் வரி வருவாய்களும் பிற வருவாய்களும் இதில் அடங்கும்.  

வரிவருவாய்கள், விற்பனை வருவாய்கள்,ஈட்டிய கட்டணங்கள், வட்டி வருவாய், அரசின் பிற வருவாய்கள். கடன் நிலுவைகள்  ஆகியவற்றை உள்ளடக்கியது.  

வருமானச் செலவினங்கள் எனச் சில அகராதிகளில் காணப்படுகிறது. அது revenue expenditure ஆகும். அச்சில் தவறு நேர்ந்திருக்கலாம்.
429. Account satisfactorilyமன நிறைவான கணக்கு  

கடன் வாங்குநர்  கடன்வாங்கும் தளத்தில் சேர்ப்பதற்குரிய நிறைவளிக்கும் கணக்கு.
430. account settledமுடிப்புக் கணக்கு  

நிலுவைத் தொகையைச் செலுத்திக் கணக்கு இருப்பைச் சுழி(0)க்குக் கொணர்ந்து கணக்கு முடிப்பைக் காட்டுவது.  

இரு தரப்பாரும் ஒப்புக் கொள்ளும் கணக்கு என்பதால் ஒப்பிய கணக்கு என்று சொல்வர்.

தொடரும்)