சட்டச் சொற்கள் விளக்கம் 601-610 : இலக்குவனார் திருவள்ளுவன்
(சட்டச் சொற்கள் விளக்கம் 591-600 : இலக்குவனார் திருவள்ளுவன்- தொடர்ச்சி)
சட்டச் சொற்கள் விளக்கம் 601-610
601. Act of honour | நன்மதிப்புச் செயல் நன்மதிப்புச் செயலுக்குக் குந்தகம் விளைவிக்கும் வண்ணம் பேசுவதும் செயற்படுவதும் தண்டிப்பிற்குரிய குற்றமாகும். |
602. Act Of Indemnity | இழப்பீட்டுச் சட்டம் இழப்பீட்டு ஒப்பந்தம் வழுவேற்புச் சட்டம் ஈட்டுறுதிச் செயல் எனச் சிலர் குறிப்பது தவறு. இங்கே act என்பது சட்டத்தைக் குறிக்கிறது; செயலை அல்ல. வாக்குறுதியளிப்பவரின் அல்லது வேறு ஒருவரின் நடவடிக்கையால் ஏற்படும் இழப்பிலிருந்து மற்றவரைக் காப்பாற்ற ஒரு தரப்பினர் உறுதியளிக்கும் ஒப்பந்தம் இழப்பீட்டு ஒப்பந்தம் எனப்படுகிறது. இழப்பீடுகள் ‘தீங்கற்ற ஒப்பந்தங்கள்’ என்றும் குறிப்பிடப்படுகின்றன. மற்றொரு தரப்பினரால் ஏற்படும் இழப்புகள், சேதங்கள் அல்லது கடன் பொறுப்புகளுக்கு இழப்பீடு வழங்கும் ஒப்பந்தங்கள் இழப்பீட்டு ஒப்பந்தங்கள் என்றும் கூறலாம். சட்டத்திற்குப் புறம்பானவையாக நிகழ்பவற்றைச் சட்ட முறையாக்கவோ பொதுப்பணியாற்றுங்கால் தொழில்நுட்ப அளவில் சட்டத்தை மீறிச் செயற்படுவோருக்குத் தண்டனையிலிருந்து அல்லது ஒறுப்புத் தொகையிலிருந்து விலக்களிப்பதற்கோ இயற்றப்படும் சட்டம் வழுவேற்புச் சட்டம் எனப்படுகிறது. வழுவமைப்புச் சட்டம் எனச் சிலர் குறிப்பிடுவதைவிட வழுவேற்புச் சட்டம் என்பதுதான் சரியாக இருக்கும். |
603. Act of insolvency | நொடிப்புச் சட்டம் நொடிப்புச் செயல் நொடிப்பு நிலை குறித்த சட்டம் நொடிப்புச்சட்டமாகும். நொடிப்பு என்பது பொருளறு நிலை – பொருள் இல்லாமல் அற்றுப்போன நிலை யாகும். நடைமுறையிலுள்ள சட்டப்படி ஒருரை நொடித்தவராகத் தீர்ப்பளிப்பதற்குரிய யாதேனும் ஒரு செயல் நொடிப்புச் செயலாகும். நொடிப்பு நிலை தருவினை என முன்னர்க் குறித்தது நீளமாக உள்ளது. எனவே, இப்பொழுது சுருக்கமாக நொடிப்புச்செயல் எனப்படுகிறது. திவால் என்பது உருதுச்சொல். நொடிப்பொழுது அல்லது கணப்பொழுது எடுக்கப்படும் திரைக்காட்சியை(screen shot)யும் நொடிப்பு என்பர். |
604. act of law | சட்ட விதியம் விதியத்திற்கான சட்டம் சட்ட விளைவுச் செயல் சட்ட நடவடிக்கை, சட்டச் செயல் என்கின்றனர். இங்கே act என்பதைச் செயல் அல்லது நடவடிக்கை என்னும் பொருளில் பார்க்கக் கூடாது. Act என்பது சட்ட அமைப்பால் – நாடாளுமன்றம் அல்லது சட்டமன்றத்தால் – இயற்றப்படும் சட்டம். Law என்பது சட்டத்தை நிறைவேற்றுவதற்குரிய ஒழுங்குமுறை விதிகளை அரசு இயற்றுவது. எனவே (சட்ட)விதியம் எனலாம். (Law என வரும் இடங்களில் விதியம் எனத் திருத்த வேண்டும்.) உரியவரது இசைவின்றியே சட்டம் செயற்படுவதன் மூலம் ஓர் உரிமை எழுதல், அழிதல் அல்லது மாறுதல் என்பதைக் குறிப்பது சட்ட விளைவுச் செயல் ஆகும். |
605. Act Of Legislature | சட்டமன்றச் சட்டம் மாநிலங்களின் சட்டப் பேரவைகளால்(சட்டமன்றக்கீழவை, மேலவைகளால்) இயற்றி ஏற்கப்பெறும் சட்டங்களைக் குறிக்கும். |
606. Act of misconduct | தீய நடத்தை தனித்தோ பிறருடன் சேர்ந்தோ உயர் அதிகாரியின் சட்டபூர்வமான முறையான ஆணைக்கு வேண்டுமென்றே கீழ்ப்படியாமை அல்லது பணியாமை. முதலாளியின் வணிகம் அல்லது சொத்து தொடர்பில் இரண்டகம், நேர்மையின்மை, நம்பிக்கையின்மை, நாணயமின்மை, திருட்டு, மோசடி யுடன் செயற்படல். வெறுப்பு நடத்தை, சேதம், திருட்டு, பாதுகாப்பற்ற நடத்தை, பொதுக்கொள்கை மீறல்கள் ஆகியன முதன்மையான தீய நடத்தைகளாகும். சட்டத்தொழிலில், அதில் ஈடுபடுவோரால் வேண்டுமென்றே தவறான நோக்கத்தில் செயற்படல். அஃதாவது, தன்னல நோக்கங்களுக்காகத் தொழில் நெறிகளை மீறும் செயல். |
607. act of parliament | நாடாளுமன்றச் சட்டம் நாடாளுமன்றச் சட்டங்கள், சட்ட அதிகாரத்தின் சட்டவாக்க அவையால் (மக்களவை, மாநிலங்களைவயால்/ நாடாளுமன்றத்தால்) நிறைவேற்றப்படும் சட்ட வரைவுகளைக் குறிக்கும். சில சமயங்களில் முதன்மைச் சட்டம் (primary legislation) என்றும் குறிப்பிடப்படுகின்றன. |
608. Act Of Parties | தரப்பினரின் செயல் எந்த ஒரு செயல், நிகழ்ப்பாடு(விவகாரம்), ஒப்பந்தம், வணிகப்பரிமாற்றம் அல்லது சட்ட நடவடிக்கைகளில் நேரடியாக ஈடுபாடுள்ள அல்லது ஆர்வமுள்ளவர்கள் தரப்பினர் எனப்படுகின்றனர். வழக்காடியின் எதிர்நிலையில் உள்ளவரும் தரப்பார் எனப்படுகின்றனர். சிலர் குறிப்பதுபோல் கட்சியினர் என்றால் அரசியல் கட்சியைச் சார்ந்தவர் எனப் பொருள் வரும் . எனவே, அச்சொல்லைப் பயன்படுத்த வேண்டா. ஒப்பந்தம் அ்ல்லது வணிகப் பரிமாற்றத்தில் ஈடுபடுநர் உடன்படிக்கையின் தரப்பாராகக் கருதப்படுவர். பூசல் அல்லது தகராறு, வழக்காக மாறும் பொழுது வழக்காடிகள் வழக்கின் தரப்பினர் என அழைக்கப் படுகின்றனர். வழக்கு தொடுக்கப்பட்ட பின்பு கூடுதல் தரப்பினர் சேர்க்கப் படலாம். நீதிமன்ற நடவடிக்கைகளில் வழக்கு தரப்பினர் பொதுவான சொற்களால் அழைக்கப் படுகின்றனர். உரிமை வழக்கில், வழக்கு தொடுப்பவர் வாதி என்றும் வழக்கிற்கு ஆளாகிறவர் எதிர்வாதி என்றும் அழைக்கப் படுகின்றனர். குற்ற வழக்குகளில் அரசாங்கத் தரப்பு அரசு என்றும் எதிர்த்தரப்பு எதிரர்/எதிர்வாதி என்றும் அழைக்கப்படுகின்றனர். மேல்முறையீடு செய்பவர் மேல் முறையீட்டாளர் என்றும் அதற்கு உள்ளாகிறவர் மேல்முறை யீட்டு எதிரர் எனவும் அழைக்கப் படுகின்றனர். |
609. Act of public enemy | பொது எதிரியின் செயல் குமுகாயத்திற்கு அச்சுறுத்தலாக உள்ள ஆளின் செயல். “பொது எதிரி” என்பது 1930 களில் அமெரிக்காவில் முதன்முதலில் பரவலாகப் பயன்படுத்தப்பட்ட ஒரு சொல். குமுகாயத்திற்கு மிகவும் தீங்கு விளைவிக்கும் குற்றச் செயல்கள் புரிவோரையும் சட்ட முரண் செயல்களைச் செய்வோரையும் குறிப்பது. |
610. Act Of State | அரசுச் செயல் கொள்கை அல்லது அரசின் தேவைக்காக இறையாண்மை அதிகாரத்தைப் பயன்படுத்துவதைக் குறிக்கிறது. எனவே, இறையாண்மை சார் செயல் என்றும் கூறுகின்றனர். இறையாண்மை சார் செயல் அல்லது இறைமை நிலைச் செயல் என்பதன் மூலம், ஒரு நாடு தன்னுடைய இறைமை நிலையில் மற்றோர் இறையாண்மை நாட்டுடன் அல்லது அம்மக்களுடன் மேற்கொள்ளும் செயலைக் குறிக்கின்றனர். இச்செயல் அந்நாட்டின் செயலாண்மைப் பணியிலிருந்து – நிருவாகச் செயலிலிருந்து – வேறுபட்டது. இது குறித்து எந்த நீதிமன்றத்திலும் வழக்கிட முடியாது. அரசுச்செயலால் ஏற்படும் பாதிப்புகளுக்கு அச்செயலைச் செய்தவர் பொறுப்பாக மாட்டார். சான்றாகப் பொதுநலன் கருதி சாலையை அகலப்படுத்துதல், பாலம்அமைத்தல், போன்ற நலப்பணிகளைப் புரிய நிலத்தைக் கையகப்படுத்தும் அரசின் செயலைப் புரியும் சட்ட முறைமையான அதிகாரி குற்றவாளியாக மாட்டார். அஃதாவது, இறையாண்மை அதிகாரத்தைப் பயன்படுத்துகையில் யாருக்கும் பாதிப்பு ஏற்பட்டால் உரிய சட்டப்படியான அதிகாரி பொறுப்பாக மாட்டார். ஆனால், உரிய சட்டத்தில் இழப்பீடு குறிக்கப்பட்டிருந்தால் மட்டும் பாதிக்கப்பட்டவருக்கு இழப்பீடு வழங்கப்படும். அரசின் அனைத்துச் செயல்களையும் குறிப்பிடாமல், சட்டத்தால் உருவாக்கப்பட்ட தனி விலக்குரிமைகள், தடைகள், வழக்காய்வு செய்யலாகாது என நீதிமன்றத்தைக் கட்டுப்படுத்தும் அதிகாரமுறை விளம்புரைகள் ஆகிய சிலவற்றைச் சுட்டும் செய்கை. (சவுராட்டிர அரசு எதிர் ஃகாசி இசுமாயில் 1960 உ.நீ.அ.(SCR) 537) |
(தொடரும்)
இலக்குவனார் திருவள்ளுவன்
Leave a Reply